தந்தை பெரியார் அவர்கள் மூன்று மணி நேரத்திற்குக் குறையாமல் பொதுக் கூட்டங்களில் பேசுவார். மக்கள் திரள் அவ்வளவு நேரமும் அமர்ந்து அந்த மழலை மொழியை, கொங்கு தமிழைக் கேட்டு அறிவு பெற்றனர். நீங்கள் எல்லாரும் முட்டாள்கள் என்று காரண, காரியங்களோடு அவர் கூறியதைக் கைதட்டி வரவேற்று ஏற்றுக் கொண்டனர் மக்கள் என்பது பதிவு செய்யப்பட்ட வரலாறு. வேறு எவரும் இந்தப் பெருமையைப் பெற்றதாக எந்நாட்டு வரலாறும் கூறவில்லை.
பெரியாரின், பகுத்தறிவுக் கருத்துகளை அழகு தமிழில் பேசி மக்களைக் கவர்ந்தவர் அறிஞர் அண்ணா. மேடைப் பேச்சுக்கலையை வளர்த்தவர்கள் பெரியாரும் அண்ணாவும் என்பது, வெற்றுப் பெருமைச் சொற்கள் அல்ல. அன்று, சொல்லின் செல்வர் எனச் சிறப்பிக்கப்பட்டவர் தமிழ்ப் பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை. நாவலர் எனப் போற்றப்பட்டவர் சோமசுந்தர பாரதியார். இவர்கள் இருவருமே அண்ணாவிடம் வாதப் போரில் வெற்றிபெற முடியவில்லை என்பதும் கடந்தகால நிகழ்ச்சிகள். அறிவார்ந்த வாதங்களுக்கு அலங்காரச் சொற்களும் அழகூட்டிட அமைந்த அண்ணாவின் சொற்பொழிவுகள் தனிச்சிறப்பானவை.
இளம் வயதில்
அறிவுச் சுரங்கமாம் பெரியாரின் கருத்துகளைப் பேசி மக்களைக் கவர்ந்த மற்றும் ஒருவர் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள். ஒன்பது ஆண்டு ஏழு மாதங்கள் மட்டுமே வயது உள்ள நிலையில் மேடை ஏறி _ அல்ல அல்ல _ மேசை ஏறிப் பேசியவர் அவர். பயிற்றுவிக்கப்பட்ட பேச்சாக இருந்தாலும் வரலாறு படைத்தவர். தொடர்ந்து தம் சிறிய வயதிலேயே பேசி, நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கி, திருமணங்களை நடத்தி வைத்து வாழ்த்தி, வரலாற்றை உருவாக்கியவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இலக்கிய மன்றங்களின் சொற்போர்களில் கலந்து கொண்டு எப்போதும் முதல் பரிசைப் பெற்ற பெருமைக்குச் சொந்தக்காரர். அவரோடு பொருது, முதல்நிலையைப் பெற இயலாதவராக இருந்தவர் குமரி அனந்தன்.
பேச்சுக் கலை வல்லவர்களாகிய கலைஞரும் இனமானப் பேராசிரியரும் இன்னும் பிறரும் எழுதிய பேச்சுக்கலை பற்றிய நூல்களில் எடுத்துக்காட்டான பேச்சாளராக எழுதப்பட்டவர். இவரது பேச்சு ஆற்றல்பற்றி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து ஆய்வறிஞர் பட்டம் பெற்றுள்ளனர், பல்கலைக் கழகங்களில்!
வழக்குரைஞரல்லவா!
ஆதாரங்களோடு பேசுவது இவரது பாணி. ஆதார நூல்களை அடுக்கடுக்காக எடுத்துக் காட்டிப் பேசி விளக்குவார். கேட்கும் எவரும் ஏற்காமல் இருக்க முடியாது. வழக்குரைஞராகப் பணியாற்றியவர் என்பது காரணமோ? சட்டக் கல்லூரியில் சொல்லித் தருவார்களாம்: சட்டம் உன் பக்கம் இருந்தால் சட்டப் புத்தகத்தைக் காட்டிப் பேசு, அப்படி இல்லாவிட்டால் மேசையைத் தட்டி ஆவேசமாகப் பேசு, அதற்கும் வழி இல்லையென்றால் மன்றாடிப் பேசி அனுதாபத்தைப் பெற்று வெற்றி பெறப் பார் என்று! இவரது பேச்சு முதல்வகை. ஏனென்றால், இவரைப் பயிற்றுவித்த சீனியர் வழக்குரைஞர் தந்தை பெரியார்! இவரின் அறிவு ஆசான் சமுதாய வழக்குகளில் நாடு முழுவதும் நாள் முழுவதும் வாதாடி வெற்றியைத் தவிர வேறு ஒன்றையும் ஈட்டாதவர் அல்லவா! பெரியார், வழக்குரைஞர் மட்டுமல்ல, வழக்கறிஞர் ஆயிற்றே! அவருடைய மாணவர் மட்டும் எப்படிச் சோடைபோக முடியும்?
மக்கள் மன்றத்தில்
புதுக்கோட்டை, திருமயத்தைச் சார்ந்த பார்ப்பனர் சத்யமூர்த்தி என்பவர் தம் பெயருக்கே விரோதமானவர்! சென்னை மாநகராட்சியில் பொய்யையே பேசி, பார்ப்பன ஏடுகளில் விளம்பரம் பெற்றவர். அவர் பேச்சைப் போடும் அவாள் ஏடுகள் மாநகராட்சித் தலைவரின் பதிலையோ விளக்கத்தையோ வெளியிட்டது இல்லை. அவாளின் பத்திரிகா தர்மத்தை வெல்ல அன்றைய மாநகராட்சித் தலைவர் சர்.ஏ.இராமசாமி முதலியார் மக்களையே நேராகச் சந்தித்தார். பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் மேடை அமைத்துப் பேசினார். தலைவர் பேசுகிறார் (PRESIDENT SPEAKS) என்று விளம்பரம். அப்போது மேயர் என்று அழைக்கப்படவில்லை. மக்கள் விளக்கம் பெற்றனர். பார்ப்பன சத்யமூர்த்தியின் மாய்மாலம் மக்களுக்கு விளங்கியது.
கொலைவழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள சங்கராச்சாரியைக் கைது செய்த நிலையில் அவாள் கூட்டம் பதறியது. பத்திரிகைகள் கண்டித்தன. ஆசிரியர் வீரமணி, ஆற்காடு ராமசாமி முதலியாரின் செயல்முறையைப் போலவே, மக்களிடம் விளக்கினார், சங்கராச்சாரி – யார் என்பதை! நாடு புரிந்துகொண்டது. நீதிமன்றத் தீர்ப்புக்கும் நீதி சொன்ன தம் ஆசானைப் போலவே மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்டவர்.
மாற்றாரின் மமதைக்கு அடி
பொய்யும் புரட்டுகளுமாகத் திராவிடர் இயக்கத்தைப் பற்றி சி.பி.எம்.கட்சிக்காரர் பி.இராமமூர்த்தி ஒரு நூலை எழுதினார். அதுபற்றிக் கருத்துக் கேட்டு ஆசிரியர் வீரமணிக்குக் கடிதம் எழுதினார் அவர். பார்ப்பனப் பாசத்தின் விளைவாக மோசடியும் முரண்பாடுகளும் கொண்ட நூல் எழுதிய பித்தலாட்டத்தை இரண்டு நபர்களுக்கு இடையேயான வாதமாக மட்டுமே வைத்திட விரும்பாமல், மக்கள் மன்றத்தில் வைத்தார் பெரியார் திடல் கூட்டங்களின் வாயிலாக! நாடு தெளிவு பெற்றது.
வெள்ளையர்க்கு வால் பிடித்தது நீதிக்கட்சியும், திராவிடர் இயக்கமும் என்கிற பொய், பலமுறை திரும்பத் திரும்பக் காங்கிரசுக்காரர்களால் சொல்லப்பட்டு மெய்யாக ஆக்கிட முயற்சிகள் எடுக்கப்பட்டதைத் தவிடு பொடியாக்கினார் தொடர் கூட்டங்களின் சொற்பொழிவுகளால்! காங்கிரசுக் கட்சியின் கறைபடிந்த அத்தியாயங்களை அம்பலப்படுத்தி உண்மை வரலாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. கராச்சி காங்கிரசு மாநாட்டில் ஆங்கிலேய அதிகாரிகள் உள்பட யாரும் மாதச் சம்பளம் ரூ.500/_க்கு மேல் வாங்கக் கூடாது என்பது தீர்மானம். அந்தக் காலக்கட்டத்தில் காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்தவர் வாங்கிய சம்பளம் ரூ.5 ஆயிரம். பெரியார் இதை வெளிப்படுத்திக் கண்டனம் தெரிவித்த பின்னர் சம்பளம் குறைக்கப்பட்டது என்ற உண்மையைப் போட்டு உடைத்தார் ஆசிரியர் வீரமணி.
இன்று மகா உத்தமர் என்று பா.ஜ.கட்சியால் பிரச்சாரம் செய்யப்படுகிற வல்லபாய் பட்டேல்தான் அய்ந்தாயிரம் சம்பளம் வாங்கிய காங்கிரசுத் தியாகி!
யாராக இருந்தாலும்…
மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்த எம்.ஜி.ஆர். உடல்நலம் மிகவும் கெட்டுப் படுத்திருந்த நிலையில், மக்கள் பிரார்த்தனை செய்தால் அவர் உயிர் பிழைப்பார் என்ற பிரச்சாரம் செய்யப்பட்டது. மூடநம்பிக்கைகளை முறியடிப்பதையே நோக்கமாகக் கொண்ட அறிவியக்கத்தின் ஆசிரியர் வீரமணி பிரார்த்தனை மோசடி என்று நாடு முழுவதும் பேசி அந்த மூடத்தனத்தைத் தோலுரித்தார். மக்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்ற அய்யமோ, அச்சமோ ஏற்படாமல் தம் அறிவு ஆசான் வழியில் அஞ்சாமல் பேசியவர்.
ஈரோடும் – யாரோடும்
சொற்களுக்காக இவர் அலைவதில்லை. இயல்பான பேச்சு என்பதால் வெற்று அலங்காரச் சொற்களோ, அடுக்குச் சொற்களோ இவரது சொற்பொழிவில் காணக் கிடைக்காது. அதனால் வறண்டிருக்கும் என நினைத்து விடக்கூடாது. ஏகலவ்யனின் கட்டை விரலைத் துரோணன் குரு காணிக்கையாகக் கேட்டுப் பெற்ற கொடுமையைக் கூறும்போது, அதன்பிறகு ஏகலவ்யன் வில்லைத் தொடவில்லை என்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் பலருடன் நானும் அமர்ந்து கேட்டு ரசித்த சொற்சிலம்பம் அது! ஈரோடு போனவர்கள் யாரோடும் போகமாட்டார்கள் என்பதும் இவரது சொற்கள்தான்!
மக்களை மகிழ்விப்பதற்காகப் பேசும் பேச்சாளரல்லர். தம் ஆசானைப் போலவே, மக்களைத் தம் வழிக்குக் கொண்டுவரப் பேசுபவர். அதனால் அடர்த்தியான கருத்துகளை இயல்பான மொழியில் எடுத்து விளக்குபவர். மொத்தத்தில், நல்ல பேராசிரியர்கள் பாடம் நடத்துவதைப் போல இருக்கும். இவர் போன்று பாடம் நடத்தும் பேராசிரியர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது சிரமம் என்பது வேறு!
மாலைநேரக் கல்லூரிகளில்
பெரியாரின் பொதுக்கூட்டங்களை மக்களுக்கான மாலை நேரக் கல்லூரி என்றார் பேரறிஞர் அண்ணா. அப்பேர்ப்பட்ட மாலை நேரக் கல்லூரிகளை தமிழகத்தின் முதல் பேராசிரியரான பெரியார் (இந்தப் புகழாரமும் அண்ணா சூட்டியதுதான்) அவர்களின் மறைவுக்குப் பின்னரும், தொடர்ந்து நடத்திவரும் விரிவுரையாளராக விளங்குகிறார்.
பல்கலைக்கழகங்கள் இவரை அழைத்துத் தம் மாணவரிடையே உரையாற்றச் செய்து உணர்வூட்டச் செய்கின்றன. தென் மாநிலங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் இத்தகு வரவேற்பு. இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம், சொற்பொழிவு என ஓயாது பெரியாரின் கொள்கைகளைப் பலருக்கும் பரப்புரை செய்கிறார். வெளிநாடுகளிலும் பல்வேறு அறிஞர் மன்றங்களில் பெரியாரைப் பரப்பும் பணியில் தம் பேச்சாற்றலைப் பயன்படுத்துகிறார் _ ஆங்கில மொழியில் உரையாற்றுவதன் மூலம்!
நாளெல்லாம், பொழுதெல்லாம் பேச்சு, பிரச்சாரம், கருத்து விளக்கம்! இதன்னியில் சற்றொப்ப நூறுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆக்கம். அப்பப்பா!
எழுபது ஆண்டுகள்
1943இல் தொடங்கிய பணி 70 ஆண்டுகளாக 2013லிலும் தொய்வின்றித் தொடர்கிறது. 81ஆம் அகவையில் நுழைகிறார். அவர் வாழ்க! இன்னும் அய்ம்பதாண்டுக் காலம் வாழ்க! (கஞ்சத்தனம்தான். மருத்துவ அறிவியல் அறிஞர்கள் மனிதன் 120 ஆண்டுகள் வாழலாம் என்றுதானே கூறுகிறார்கள்!) அவர் வாழ்கின்ற நாளெல்லாம் திராவிடச் சமுதாயம் மானமும் அறிவும் பெறவே உழைப்பார் என்பதால் _ அவர் வாழ்ந்தால் நாமும் வாழ்வோம்!
டிசம்பர் 2 உலக அடிமை ஒழிப்பு நாள் ஆகக் கொண்டாடப்படுகிறது. ஆரியப் பண்பாட்டுக்கு அடிமையாக்கப்பட்ட திராவிடர்களின் அடிமைத்தன்மை ஒழிப்புக்காக தந்தை பெரியாருக்குப் பின் அயராது உழைப்பவரான ஆசிரியர் பிறந்த நாள் என்பதால் பொருத்தம்தானே! ஆசிரியர் வாழ்க! வாழ்க!