தமிழ்நாட்டில் மத்திய அரசு, ஏற்கெனவே ஆக்கிரமித்தது போதாது என்ற முறையில், கல்வித் துறையில் புதியதோர் ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்தியாலயா திட்டப்படி, மத்திய அரசும், தனியாரும் கூட்டுச் சேர்ந்து மாதிரிப் பள்ளிகள் என்று தனியே தொடங்கிட முயற்சிப்பதாக வந்துள்ள செய்தி- சரியாக இருக்குமானால் _ அதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கல்வி என்பது ஏற்கெனவே மாநிலப் பட்டியலில் இருந்த முக்கிய துறையாகும்; அதனை _- நெருக்கடி கால நிலையில் _- ஓசையில்லாமல் மத்திய அரசு, பொதுப் பட்டியலில் மத்தியக் கல்வித் துறையின் மக்கள் துரோகம் கொண்டுபோய்ச் சேர்த்து மாற்றம் ஏற்படுத்தியது.
இது நடந்தது 1976-இல்; அதன்பின் வந்த ஆட்சிகள் இதை ஒரு முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டு, மீண்டும் பழையபடி மாநிலப் பட்டியலுக்குள் கல்வியைக் கொண்டு வரத் தவறியதன் விளைவே, பல்வேறு சமூக அநீதிகளும், சமூகக் கொடுமைகளும் சட்ட பூர்வமாகவே மத்திய அரசால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன _- மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்ற கல்வித் துறையின் மூலம். எடுத்துக்காட்டாக, மாநில அரசு ஒழித்த பொது நுழைவுத் தேர்வு என்பதை _- மருத்துவக் கல்வி, மற்றும் தொழிற்படிப்புகளில் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை ஆதிக்க அதிகார சக்திகள் செய்து வருகின்றன. ஏற்கெனவே உச்ச நீதிமன்ற பெரும்பான்மைத் தீர்ப்பு நுழைவுத் தேர்வு ரத்து சரிதான் என்று கூறிய பிறகும் மருத்துவக் கவுன்சில் மறுசீராய்வு மனுவைப் போட்டுள்ளது; மத்திய அரசும் அதனை ஆதரிக்கிறது!
இது போன்ற கல்வியில் இரண்டு எஜமானர்கள் ஒரே நேரத்தில் அதிகாரம் செலுத்தும் விசித்திர நிலை ஏற்பட்டுள்ளது!
மாநிலங்களின் உரிமைகள் _- அதிகாரங்கள் ஏற்கெனவே பெரிதும் பாதிக்கப்பட்டு, வெறும் முனிசிபாலிட்டிகளைப் போன்று மாநில அரசுகள் ஆக்கப்பட்டுள்ள நிலையில், இது போன்ற புதிய அறிவிப்புகள் மேலும் மேலும் மாநிலங்களின் அதிகாரப் பறிப்புக்குத்தான் வழி வகுக்கும். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் அறிக்கை, காலத்தால் தரப்பட்ட சரியான எச்சரிக்கை மணி!
மாநில அரசின் ஒப்புதலோ, அல்லது அதனுடன் கலந்து ஆலோசிக்காமலோ இப்படி தன்னிச்சையாக மத்திய அரசு நடந்து கொள்வது எவ்வகையில் நியாயம்?
கல்வியை வியாபாரமாக்காதே என்ற குரல் ஓங்கி முழங்கிக் கொண்டே இருக்கும் நிலையில், வெளிநாட்டுப் பெரும் வணிகத் திமிங்கிலங்களுக்குக் கதவு திறந்து விட்டு, நம் நாட்டில் சில்லறை வணிகத்தினை அழிப்பது போல, இப்போதுள்ள பள்ளிகளையும்கூட மறைமுகமாக கொஞ்சம் கொஞ்சமாக இத்தகைய மாதிரிப் பள்ளிகள் -_ வணிகமயம் ஆகும்; அதுவும் மத்திய அரசும் தனியாரும் (Private – Public Partnership) நடத்துவது எவ்வகையில் நியாயப்படுத்தக் கூடியது?
கல்வி அடிப்படை உரிமை (Education is Citizen’s Fundamental Right – Right to
Education) என்று அரசமைப்புச் சட்டத்தில் சட்ட ரீதியாக அறிவிக்கப்பட்டபின், இப்படி மத்தியக் கல்வித்துறை ஒரு முடிவு எடுத்திருப்பது மிகப் பெரிய, அரசியல் சட்ட விரோதப் போக்காகும்!
இதனை, தமிழ்நாட்டுக் கல்வி அறிஞர்கள், மாநில உரிமை காக்க விழைவோர், உண்மையான ஜனநாயக விரும்பிகள், அனைவரும் ஒட்டு மொத்தக் குரலில் எதிர்க்க வேண்டும்; தமிழக அரசும் முதல்வரும் உடனடியாக எதிர்ப்பைப் பதிவு செய்தாக வேண்டும்.
முன்பு ராஜீவ்காந்தி கொண்டு வந்த நவோதயா பள்ளிகளே ஹிந்தித் திணிப்புக்கு மறைமுக வழி என்று கண்டித்து நிறுத்திய தமிழ்நாடு, இப்பொழுது சும்மா இருக்காது _- இருக்கவும் கூடாது. கிளர்ந்தெழ வேண்டும்.
– கி.வீரமணி, ஆசிரியர்