வாயைக்கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்ளாதே என்று சொல்வார்கள். அதற்குச் சரியான உதாரணமாக அமைந்துவிட்டது இந்த வாயாடித்தனம். அதிகப் பிரசங்கியாக அண்மைக்காலத்தில் விளங்குபவர் பா.ஜ.க.வின் நரவேட்டை மோ(ச)டி. 2.10.2013 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மோடி, நான் இந்துத்துவா தலைவராக அறியப்படுகிறேன். என் மீதான பிம்பம் தற்போது ஒரு கருத்தைக் கூற அனுமதிக்காது. இருப்பினும் தைரியமாகச் சொல்கிறேன். கழிப்பறை கட்டுவதற்கே முக்கியத்துவம், கோவில் கட்டுவது இரண்டாம்பட்சம்தான் எனக் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், “பிரதமர் பதவியின் மேலுள்ள கண்மூடித்தனமான ஆசையின் காரணமாக மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். வேண்டாவெறுப்பாகவே அவர் இதைக் கூறியுள்ளார். இந்த ஞானோதயம் 1992ஆம் ஆண்டு அயோத்தி பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்துக்கு முன்னரே தோன்றியிருக்க வேண்டும் என்று நெற்றியடியாய் அடித்துவிட்டார். இதற்குப் பின் எந்த இந்துத்துவ வாயாடியும் இக்கருத்துக்குப் பதில் அளிக்கவில்லை.
மோ(ச)டியின் இந்த உளறலில் இருந்து ஒரு செய்தி தெளிவாகிறது. இந்தியாவில் இனி ராமன் கோவில் பருப்பு வேகாது. மக்களின் அடிப்படைத் தேவைகளில் மதங்களோ, கோவில்களோ இல்லை. கடவுள் பெயரால் ஏமாற்றுவது இனி இயலாத செயல். ஆனால், இவையெல்லாம் இந்துத்துவாக்களின் மறைமுகத் திட்டங்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மத உணர்வைத் தூண்டினால் வாக்குக் கிடைக்காது என்பதால்தான் காங்கிரஸ் அரசின் தவறுகளையும், இந்தியாவிற்குப் பழக்கப் பட்டுப் போன பழைய தேர்தல் ஆயுதமான ஊழல் குற்றச்சாட்டுகளையும் மோ(ச)டிகள் தேர்தல் உத்தியாகப் பயன்படுத்துகின்றன.