போராடும் பகுத்தறிவாளர்கள்

அக்டோபர் 16-31

அண்மையில், புனே நகரில் நரேந்திர தபோல்கர் சுட்டுக்கொல்லப்பட்டது வீண்போகவில்லை. நாடு முழுதும் பரவியுள்ள பகுத்தறிவுவாதிகளின் களப்படை உறுதியாக நின்று, எல்லாவிதமான தொந்தரவுகளையும், தாக்குதல்களையும், வழக்குகளையும், ஏன் கொலை மிரட்டல்களையும்கூட எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. பஞ்சாபிய கிராமங்களிலிருந்து ஜார்கண்டின் காடுகள் வரை அந்த ஆண்களும் பெண்களும், அவர்களுடைய தர்க்க, விஞ்ஞான அறிவுகளைப் பயன்படுத்தி சாமியார்களும், பில்லி சூன்ய மந்திரவாதிகளுடையவும் ஆன ஏமாற்றுத் தந்திரங்களை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், எண்ணப்பட முடியாத கடவுளர்களைக் கொண்ட இந்த நாட்டில், தீவிர மத நம்பிக்கையில் அழுந்திக் கிடக்கும் பயந்த சுபாவம் உடைய அவர்களுக்கு நாத்திகம் அறியாத ஒன்று.

நான் இல்லாவிட்டால், அவர்கள் வேறு யாரையாவது கொல்வார்கள். பிறர் பின்னே ஒளிந்து வாழ்வதற்கு நாம் ஒன்றும் தலைவர்கள் அல்ல. எனக்குப் பல மொழிகள் தெரியும். நாடு முழுவதும் தொடர்ந்து பயணம் செய்து பகுத்தறிவைப் பரப்புவேன் என்று இந்தியப் பகுத்தறிவாளர் கழகங்களின் கூட்டமைப்பின் தலைவரான நரேந்திர நாயக் சொல்லுகிறார். அவரது கூட்டமைப்பின் கீழ் 85 இந்திய பகுத்தறிவு, நாத்திக சங்கங்களும், மனிதாபிமான இயக்கங்களும் உள்ளன.

1980இல் நாயக் பெங்களூர் கிளையைத் தொடங்கிவைத்து பகுத்தறிவுப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அதே நேரத்தில்தான், அவரால் அன்பு நண்பர் என்றும், உடன் பணிபுரிபவர் என்றும் அழைக்கப்பட்ட தபோல்கரும் தனது பணியினைத் தொடங்கியுள்ளார். நாயக் கொலை மிரட்டல்களையும் தாக்குதல்களையும் பெற்றதுடன் அல்லாமல், மணிப்பால் பல்கலைக்கழகத்தில் அவர் பார்த்து வந்த உயிர் வேதியியல் (ஙிவீஷீ-சிலீமீனீவீக்ஷீஹ்) பேராசிரியர் வேலைக்கும் வேட்டு வைக்க முயற்சிகள் நடந்தன. 2006இல் அவர் அந்த வேலையை விட்டுவிட்டு முழுநேர பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

1980களின் ஆரம்பத்தில் நாயக் தனது இந்த சங்கிலிப் பணிக்கான அடிப்படையை அமைத்துக் கொண்டிருந்தபோது, இலங்கையின் பெரும் பகுத்தறிவாளர் ஆப்ரகாம் கோவூரின் புத்தகங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை எனக் கவலைப்பட்டவர் மேக்ராஜ் மிட்டர்.

கோவூர், ஏமாற்று வேலைகளுக்கு எதிராகவும் தென் ஆசியப் பகுதிகளில் இயற்கைக்கு மாறான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் இயக்கம் கண்டவர்.

ஒவ்வொரு பெரிய கருத்துக்கும் பின்னே, ஒரு சிறு நிகழ்ச்சி நிலவுகிறது. நான் கோவூரின் புத்தகங்களை விரும்புகிறேன். என் நண்பர் ஒருவருக்கு கோவூரின் புத்தகத்தைக் கொடுத்தேன். அதைப் படித்த பிறகு, அவர் மனைவி யாரோ ஒரு பாபாவின் மயக்கத்தில் இருப்பதாகவும், அந்த பாபா அவர் மனைவியிடம் 2000 ரூபாய் அளவிற்கு வருடம் ஒன்றிற்குச் செலவழித்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர், அந்தப் புத்தகத்தை பஞ்சாபியில் மொழிபெயர்க்க விரும்பினார். நான் செய்து கொடுத்தேன். மக்கள் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வர ஆரம்பித்தனர். இம்மாதிரி ஏமாற்று வித்தைகளைப் பற்றி பல நிகழ்வுகள் எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டன. நாங்கள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான எங்கள் நடவடிக்கைகளை ஆரம்பித்தோம் என்று மிட்டர் சொல்லுகிறார்.

ஆக, இப்படித்தான் பஞ்சாபின் பகுத்தறிவுக் கழகம் தர்க்ஷில் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று அந்த சங்கம் ஆயிரக்கணக்கான தொண்டர்களைக் கொண்டிருக்கிறது. மிட்டர், கோவூரின் புத்தகங்கள் தவிர, (பின்னாளில் அவை பஞ்சாப் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டன) 29 புத்தகங்களை எழுதியும் மொழிபெயர்த்துமிருக்கிறார். அதன்மூலம், மூடநம்பிக்கைகள், குருட்டு நம்பிக்கைகள், மத/ஆன்மீக ஏமாற்று வித்தைகள் ஆகியவைகளை ஒழிப்பதற்கு அவர் புத்தகங்களைப் பயன்படுத்தியுள்ளார்.

எப்பொழுதும் தொடர்ந்த அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் ஆளாகியிருக்கிறோம் எங்களிடம் ஏராளமான தொண்டர்களும்,  சீடர்களும் இருப்பதால், இதுவரை மோசமாக ஏதும் நடைபெறவில்லை.
சென்ற ஆண்டு பாடிண்டாவில் உள்ள பகதா கிராமத்தில் புனிதர் என்று சொல்லப்பட்ட ஒருவருக்கு எதிராக நான் ஒரு கட்டுரை எழுதினேன். பேய், பிசாசு பிடித்திருந்த பெண்களைத் தான் சரியாக்குவதாகக் கூறியிருந்தான். நான் அவன் வேடத்தைக் கலைத்தவுடன், எனக்குப் பலமுறை அச்சுறுத்தல்கள் அனுப்பியும், தனிப்பட்ட முறையிலும் பல வழக்குகள் தொடரப்பட்டுப் பின் திரும்பப் பெறப்பட்டன. விநாயகன் பால் குடித்த சமயத்தில் நான் என் வீட்டை விட்டு நகரமுடியாதபடி கேரோ செய்யப்பட்டேன். ஆனால் இப்போது பயமுறுத்தப்பட முடியாத அளவிற்கு நான் வயதானவனாகி விட்டேன் என்று சொல்லுகிறார் 64 வயதான மிட்டர்.

இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் சனல் எடமருகு இந்தியாவில் காலடி எடுத்து வைக்க முடியாத நிலையிலிருக்கிறார். இந்தியப் பகுத்தறிவாளர்கள் சங்கம் ஒரு லட்சத்துக்கு மேல் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

சென்ற ஆண்டு மும்பையிலிருந்து வேளாங்கண்ணி தேவாலயத்தில், நீர் சொட்டும் இயேசு பற்றிய பரபரப்புச் செய்தி ஒரு பெரிய தெய்வச் செயலாக கருதப்பட்டது. உண்மையான காரணம் சில உடைந்த குழாய்கள்தான் என்று எடமருகு கண்டுபிடித்தார். மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக அவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் பாய்ந்தன. அவர் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சிக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பின்லாந்து சென்றிருந்தபோது, அவரைக் கைது செய்யவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. ஆகவே இந்தியா திரும்புவதில்லை என்று அவர் முடிவெடுத்து விட்டார். இடையில், எடமருகு மன்னிப்புக் கேட்டால், அவர் மீதுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக தேவாலயம் அறிவித்தது அதுமுதற்கொண்டு நான் அய்ரோப்பா, அமெரிக்கா, கனடா ஆகிய பகுதிகளில் உள்ள ஊர்களில் என்னுடைய கொள்கைக்காக பிரச்சாரம் செய்துவரும் நிலையில், நான் திரும்பி வர உத்தேசித்துள்ளேன் என பகுத்தறிவாளப் பெற்றோருக்குப் பிறந்த அவர் கூறியுள்ளார்.
எடமருகு பள்ளி சேர்க்கப்படும் வேளையில் விண்ணப்பப் படிவத்தில் ஜாதி என்ற பிரிவில், இல்லை என்று எழுதிப் பரபரப்பை ஏற்படுத்தியவர். எடமருகின் தந்தை ஜோசப் எடமருகு, தனக்கு வந்த மிரட்டல்கள் மக்களிடமிருந்து வந்தவை அல்ல; பாதிக்கப்பட்டவர்களும் எங்களைத் தாக்கவில்லை. 1995இல் நாடு தழுவிய பிரச்சாரத்தில், நான் ஒரு மில்லியன் மக்களைச் சந்தித்துப் பிரச்சாரம் செய்துள்ளேன். ஒரு தாக்குதல்கூட வந்ததில்லை. ஆனால் நான் பால்கி பாபாவைப் பற்றி அவருடைய தெய்வச் செயல்களுக்கு இடையே தோலுரித்துக் காட்டும்போது, நான் தாக்கப்பட்டேன். சுரண்டுபவர்கள்தான் தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என்று எடமருகு சொல்கிறார்.

தங்களைத் தாங்களே கடவுள் மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டு திரியும் சிலருக்கு மூடப்பழக்க வழக்கங்கள் பல்லாயிரம் கோடி  ரூபாய் வருமானத்தைக் கொட்டிக் கொடுக்கும் வியாபாரமாக இருக்கிறது. காரணத்தைக் கற்றுக் கொடுப்பது மிக ஆபத்தானது.

ஆனால் நாம் அவற்றைத் தொடரத்தானே வேண்டும்? என்று அவர் கேட்கிறார்.

பீகார் மாநிலத்தில் கத்திகர் என்ற ஊரில் ஒரு புனித மனிதர் குழந்தைகள் மீது ஏறி நின்று, சில மந்திரங்களை முணுமுணுத்துவிட்டு அதன்மூலம் அக்குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக டூப் விட்டார். இது கத்திகர் மருத்துவக் கல்லூரியின் வெகு அருகாமையில் நடந்தது. எடமருகு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரையும் அப்போதைய உடல்நலத்துறை அமைச்சரையும் தலையிட்டு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டதற்கு அது மத விவகாரம் என்று சொல்லி விலகிக் கொண்டனர்.

அதில் மதச்சாயம் பூசப்பட்டுவிட்டது. எல்லோருமே அதைத் தொட அச்சப்படுகிறார்கள். கடவுள் பற்றி உறுதியான எண்ணம் இல்லாதவர்கள்கூட மூட நம்பிக்கைகளுக்கு ஆளாகின்றனர். அறிவியல் பற்றிய பொதுமக்களுக்கான புரிதல் முற்றிலும் இல்லை. நம் குழந்தைகள் அறிவியலிலும் கணிதத்திலும் உயர் மதிப்பெண்கள் பெற நாம் விரும்புகிறோம். ஆனால் அறிவியல் பூர்வமான வாழ்க்கை வாழ நாம் அவர்களைக் கேட்பதில்லை.

– நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, 25.08.2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *