– நீட்சே
அய்ன்ஸ்டீன் 300க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் 150க்கும் மேற்பட்ட அறிவியல் அல்லாத கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். அவரது அறிவுசார் சாதனைகளும் தனித்தன்மையும், அய்ன்ஸ்டீன் என்றால் மேதை என்ற பொருளில் உலகால் ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளது.
ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் (1879 மார்ச் 14 _ 1955 ஏப்ரல் 18), ஜெர்மனியில் பிறந்த சித்தாந்த இயற்பியல்வாதி. நவீன இயற்பியலின் இரண்டு தூண்கள் என்று சொல்லப்படும் அதிர்வுத் தொழில்நுட்பம் மற்றும் (குவாண்டம் மெக்கானிக்ஸ்) உறவின் தொடர்பு பற்றிய பொதுக் கருத்தும் அவரால் வளர்ச்சி பெற்றது. அவரது பரந்த சக்தி சமன் விதி, E=MC2 என்ற தேற்றம் (உலகத்தின் மிகப் புகழ் பெற்றதாகக் கூறப்படும் சமன் விதி. அவர் 1921இல் இயற்பியலில் நோபெல் பரிசு பெற்றார். அவரது செயல்முறை அல்லாத இயற்பியலுக்கான பணிக்காகவும், சிறப்பாக அவரது புகைப்பட மின் சக்திக்காகவும் (Photo Electric Effert) ஆன கண்டுபிடிப்பிற்காக அவருக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது. இதில் போட்டோ மின்சார சக்தி பிற்பாடு குவாண்டம் கொள்கையை நிலைநிறுத்துவதற்கான அச்சாணியாக விளங்கிற்று.
அவருடைய ஆரம்பகாலப் பணிகளில், அய்ன்ஸ்டீன் நியூட்டனின் பொறியியல் கருத்து, மின்காந்த உலகின் சட்டங்களுடன் ஒத்துப் போக, இனிமேலும் போதுமானதாக இராது என்று எண்ணினார். இது அவரது சிறப்பு ரிலேட்டிவிட்டி கருத்தை வளர்ச்சி பெறச் செய்ய அவரைத் தூண்டியது. எப்படியிருந்தபோதும், ரிலேட்டிவிட்டி கொள்கை புவி ஈர்ப்பு நிலைகள் அளவிற்கு நீட்டிக்கப்படக் கூடும் என்பதை அவர் உணர்ந்தார். 1916இல் அவரது அடுத்த புவி ஈர்ப்புக் கொள்கையை அவர் ரிலேட்டிவிட்டியின் பொதுக்கருத்து என்ற பெயரில் ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட்டார். அவர் தொடர்ந்து புள்ளிவிவர இயந்திரவியல், மற்றும் குவாண்டம் கொள்கையைப் பற்றிய பிரச்சினைகளை ஆராய்ந்ததில் அவை துகள்களைப் பற்றிய அவரது கருத்துகளுக்கு விளக்கங்கள் கொடுத்ததுடன் அல்லாமல், மூலக்கூறுகளின் இயக்கம்பற்றியும் அறிய வைத்தது. அவர் வெளிச்சத்தின் அனல் தன்மைகளைப் பற்றி ஆராய்ந்து அதன் விளைவாக வெளிச்சத்தின் போட்டோன் (Photon) தியரியின் அடிப்படையைக் கண்டுபிடித்தார். 1917இல் அய்ன்ஸ்டீன் பிரபஞ்சத்தின் பெரிய அமைப்பை உருவகப்படுத்த பொதுக்கருத்தான ரிலேடிவிட்டியைப் பயன்படுத்தினார்.
1933இல் அடால்ஃப் ஹிட்லர் பதவிக்கு வந்தபோது அமெரிக்கா வந்திருந்த அய்ன்ஸ்டீன் திரும்பவும் ஜெர்மனிக்குப் போகவில்லை. ஜெர்மனியில் அவர் பெர்லின் நகரில் உள்ள அறிவியல் கல்விக்கழகத்தில் (Academy of Sciences) பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அவர் அமெரிக்காவிலேயே தங்கி இருந்து 1940இல் அதன் குடிமகன் ஆனார்.
அய்ன்ஸ்டீன் அமெரிக்க அதிபர் ஃபிராங்ளின் ரூஸ்வெல்டிற்கு இரண்டாம் உலகப் போரின்போது ஒரு கடிதம் எழுதினார். அதில் மிகவும் அதீத சக்தி படைத்த புதுவிதமான போர்க் குண்டுகளைக் (Bombs) கண்டுபிடிக்கத் தீவிர முயற்சிகள் நடந்து வருவதாக எச்சரிக்கை செய்து அமெரிக்காவும் அதுபோன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார். இதுவே பிறகு மன்ஹாட்டன் திட்டம் என்று பிரபலமாயிற்று. அய்ன்ஸ்டீன் இரண்டாம் உலகப் போரின்போது நேசப் படைகளுக்கு ஆதரவாயிருந்தார். ஆனால் புதிய கண்டுபிடிப்பான அணுவைப் பிளந்து ஆயுதமாக்குதலை அவர் கண்டித்தார். பிறகு பிரிட்டனைச் சேர்ந்த பெர்ட்டாரண்ட் ரஸ்ஸலுடன் இணைந்து ரஸ்ஸல்_அய்ன்ஸ்டீன் அறிக்கையைத் தயாரித்தார். அது அணு ஆயுதங்களினால் ஏற்படும் அழிவுகளை விளக்கிக் காட்டியது. அமெரிக்க நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள பிரின்ஸ்டனில் உள்ள முன்னேற்றப் படிப்புகளுக்கான ஒரு கல்வி நிலையத்தில் 1955இல் தான் இறக்கும் வரை அய்ன்ஸ்டீன் இணைந்திருந்தார்.
அய்ன்ஸ்டீன் 300 அறிவியல் கட்டுரைகளையும் 150 அறிவியல் அல்லாத கட்டுரைகளையும் வெளியிட்டு இருக்கிறார். அவரது பெரும் நுண்ணறிவுச் சாதனைகளும், சுயசிந்தனைத் தாக்கமுமே அய்ன்ஸ்டீன் என்றால் பேரறிவு கொண்டவர் என்ற பொருளை உணர வைத்தது.
போர் என்பது ஒரு வியாதியாகும். ஆகவே போரைத் தவிர்க்க வேண்டுமென்று அவர் விரும்பினார். ரூஸ்வெல்ட்டிற்கும் கடிதம் எழுதும்போது, அவர் தனது அமைதி வழிக்கு எதிராக எழுதினார். தான் இறந்துபோவதற்கு ஓராண்டுக்கு முன்னால், 1954இல் நான் வாழ்க்கையில் ஒரு பெருந்தவறு செய்துள்ளேன். அது நான் ரூஸ்வெல்டிற்குக் கடிதம் எழுதும்போது அணுகுண்டுகள் தயாரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் அதில் சில நியாயங்கள் இருந்தன. அதாவது, ஜெர்மனியர்கள் அவற்றைத் தயாரிக்கக் கூடும் என்பதே.
1940இல், அய்ன்ஸ்டீன் அமெரிக்கக் குடிமகன் ஆனார். பிரின்ஸ்டன் நகரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடியில் நன்கு கால் ஊன்றுவதற்கு முன் அவர் அமெரிக்கக் கலாச்சாரத்தை அய்ரோப்பியக் கலாச்சாரத்துடன் ஒப்பிட்டு, திறமைக்கு மதிப்பு அளிக்கும் அமெரிக்கக் கலாச்சாரத்தைப் பாராட்டினார். இசாக்சன் என்ற அறிஞரின் கூற்றுப்படி, அய்ன்ஸ்டீன், தனி மனிதனின் விருப்பத்தை அவன் சொல்லுவதற்கும் அதைப்பற்றி நினைப்பதற்கும் உள்ள உரிமையை உணர்ந்திருந்தார். சமுதாயத் தடைகள் இல்லாததன் விளைவாக தனி மனிதன், அவன் ஆரம்பக் கல்வியிலிருந்தே பெரிதும் மதிப்புக் கொண்டிருந்த ஒரு வழியை, ஆக்கப்பூர்வமாக்க, உற்சாகப்படுத்தப்படுகிறான்.
அய்ன்ஸ்டீன் 1946இல், அமெரிக்காவின் மோசமான வியாதியாக இன வேற்றுமையைக் குறிப்பிட்டார். பிறகு ஒருமுறை அவர் சொன்னதாவது: துரதிர்ஷ்டவசமாக, இன வெறுப்பு அமெரிக்கப் பாரம்பரியத்தில், இடம் பெற்றுள்ளது. அது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்ததற்கு கைமாற்றி விடப்பட்டிருக்கிறது. கல்வியும் அறிவுமே அதற்கான தீர்வுகளாகும்.
இஸ்ரேல் நாட்டில் முதல் ஜனாதிபதி செய்ம் வீய்ஸ்மேன் 1952இல் இறந்தபோது, இஸ்ரேலின் ஜனாதிபதி பதவி, பெரும்பாலும் நிகழ்ச்சிகளில் பங்குபெறும் பதவி, அவருக்கு அளிக்கப்பட இருந்தது. ஆனால் அய்ன்ஸ்டீன் அதை மறுத்துவிட்டார். அதற்கு அவர் பதில் எழுதும்போது தான் மிகவும் நெகிழ்ச்சி அடைந்ததாகவும், அதேநேரத்தில், அந்தப் பதவியை ஏற்க முடியாததற்கு மிகவும் வருத்தமும் வெட்கமும் அடைந்ததாகவும் குறிப்பிட்டார்.
அய்ன்ஸ்டீனின் அரசியல் கருத்துகள் சோசலிசத்திற்கு ஆதரவாகவும் முதலாளித்துவத்தைக் குறை கூறுவதாகவும் இருந்தன. அதை அவர் ஏன் சோசலிசம்? போன்ற கட்டுரைகளில், பெரும் அறிவாளி என்ற பெயரும் புகழும் அடைந்திருந்த நிலையில் 20ஆம் நூற்றாண்டின் இடையில் அவரது அரசியல் கருத்துகள் வெளிப்படையாக வெளிவரலாயின. இயற்பியல் கொள்கைகள், கணிதம் ஆகியவைகளுக்குத் தொடர்பில்லாத விவகாரங்களில் அடிக்கடி அவர் கருத்துகளைச் சொல்லவும் நியாயம் வழங்கவும் அழைக்கப்பட்டார்.
முத்திரை குத்தப்பட்ட ஆத்திகர் என்ற நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அய்ன்ஸ்டீன் தன்னை ஒரு ஆத்திகரும் நாத்திகரும் இல்லாத ஒரு இடைநிலை மனிதனாக, கடவுள் இருப்பைப் பற்றியோ இல்லாமையைப் பற்றியோ அக்கறை காட்டாத ஒருவராக (Agnostic) அழைத்துக் கொண்டார். அவர் தனது வாழ்க்கை முடிவின்போது, அவர் எங்கும் நிறைந்த பல கடவுள்கள் மீது நம்பிக்கை கொண்டவராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்; ஆனால் ஒரு தனிப்பட்ட கடவுள் என்ற நம்பிக்கையை அவர் குறை கூறினார்.
இரண்டாம் உலகப் போருக்கு முந்திய காலகட்டத்தில், அய்ன்ஸ்டீன் அமெரிக்கா முழுவதும் எல்லோராலும் அறியப்பட்டவராக இருந்தார். பல நேரங்களில் அவர் பொதுமக்களால் நடு வீதியில் நிறுத்தப்பட்டு அந்த அறிவியல் நெறி பற்றி விளக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார். இந்த மாதிரி திடீர்க் கேள்விகளைச் சமாளிக்க அவர் ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அவரைக் கேட்பவர்களிடம் அவர், மன்னியுங்கள். பேராசிரியர் அய்ன்ஸ்டீன் என்று அடிக்கடி நான் தவறாக கருதப்படுகிறேன் என்று சொல்லுவார்.
பல புதினங்கள், திரைப்படங்கள், நாடகங்கள், இசைப் பணிகள் ஆகியவற்றிற்கு அய்ன்ஸ்டீன் தூண்டுகோலாக இருந்துள்ளார். ஞாபக மறதிப் பேராசிரியர்கள், பைத்தியக்கார விஞ்ஞானிகள் ஆகிய உருவங்களைக் குறிப்பிட அவர் ஒரு விருப்பத்திற்குரிய மாதிரியாக விளங்கினார். கருத்துகளை வெளிப்படுத்தும் அவரது முகமும் தனித்தன்மையான தலைமுடி அமைப்பும் பலராலும், பெரிதுபடுத்தப்பட்டும், நகலாகக் கொள்ளப்பட்டும் இருந்தன.
ஒரு கேலிச் சித்திரக்காரரின் கனவு நினைவானது போல அய்ன்ஸ்டீன் இருந்ததாக, டைம்ஸ் இதழின் ஃபிரெடெரிக் கோல்டன் எழுதியுள்ளார்.
– தமிழில்: ஆர்.ராமதாஸ்