இணையதளம் www.rtoaifmvd.com
இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள இணையதளம்.
வாகன ஓட்டுநர் உரிமம் பெறப் பயன்படுத்தும் மருத்துவச் சான்றிதழ் பதிவு செய்வது, புதுப்பிப்பது, NOC, சான்றிதழைத் தொலைத்துவிட்டால் பெறும் மாற்றுச் (duplicate) சான்றிதழ் என்று வாகனங்கள் தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் (download) செய்து இணையத்திலேயே விண்ணப்பிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வரி தொடர்பான விவரம், தொடர்புடைய ஆர்டிஓ அலுவலகங்கள், மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களின் அட்டவணை, பயனாளர் (Member) மின் அஞ்சல் (e-mail) பகுதி என பல பிரிவுகள் இடம் பெற்றுள்ளன.
நூல்
நூல்: மெக்காலே
ஆசிரியர்: இரா.சுப்பிரமணி
வெளியீடு: சாளரம்,
854 (ப.எண்.387)
அண்ணா சாலை,
சைதாப்பேட்டை,
சென்னை _ 15.
பக்கங்கள்: 120
விலை: ரூ.15/-
சமூக விழிப்புணர்-வுக்கும் மறுமலர்ச்சிக்கும் வித்திட்ட மெக்காலே கல்வித் திட்டம் தோன்றிய விதம், இந்தியாவுக்கு மெக்காலே அனுப்பப்பட்ட சூழ்நிலை, அவரது வாழ்க்கைக் குறிப்பு, சாதனைகள் வரலாற்றுப்பூர்வமாக தெளிவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆங்கில வழிக் கல்வி உருவாகக் காரணம், காரணமாக இருந்தவர்கள், வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள், இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட கல்லூரி, கற்பிக்கப்பட்ட பாடங்கள், பயின்ற மாணவர்கள், கிறித்தவ மதகுருமார்கள், மத அமைப்புகளின் பங்கு ஆகியனவும் விளக்கப்பட்டுள்ளன.
அய்ரோப்பாவின் மொழிகள் ரஷ்யாவை நாகரிகமடையச் செய்த விதம் மற்றும் சாக்சான் மற்றும் நார்மனின் மூலத்தைவிட சமஸ்கிருதம் தாழ்வானது என்ற கருத்துகள் விளக்கமாக இடம் பெற்றுள்ளன. மெக்காலே கல்வித் திட்டத்திற்கு ஏற்பட்ட ஆதரவு எதிர்ப்பு அலைகள், இந்திய தண்டனைச் சட்டத்தை உருவாக்கிய மெக்காலே கருத்து மற்றும் ஆய்வாளர்களின் கருத்துகளைத் தாங்கி நிற்கிறது.
குறும்படம்
பீ…
-அமுதன்
செல்பேசி : 86952 79353
மனிதக் கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதைத் தடுக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும்கூட, வீதிகளில், கால்வாய்களில் குழந்தைகள் கழித்துள்ள மலத்தை அள்ளும் அவலமான நிலைக்குத் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆளாகின்றனர். பொதுக் கழிப்பிட வசதி போதுமான அளவில் இல்லாதது காரணமாக இருப்பினும், கழிப்பிட வசதி இருக்கும் இடங்களிலும் மக்கள் முறையாகப் பயன்படுத்துகிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
தெருக்களைத் துப்புரவு செய்யும் பெண் கால்களுக்குப் பாதுகாப்புத் தரும் செருப்பைப் பத்திரமாக கழற்றி வைத்துவிட்டு வீதியில் கிடக்கும் மலங்கள்மீது சாம்பல் போட்டுக் கூட்டி அள்ளுகிறார். அந்த வேலையைச் செய்வதால் அவருக்கு வரும் நோய்த்தொற்றுகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை.
துப்புரவுத் தொழிலாளர்களும் மனிதர்கள்தான் என்பதை மனிதாபிமானத்தோடு சிந்திக்க வைத்துள்ளது. இந்தப் படம் வெளிவந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியும், இன்றும் முக்கியமான படமாகத் திகழ்கிறது.