பழுதடைந்த கணினி, வீடியோ கேம், செல்பேசிகள், குறுந்தகடுகள், டி.வி.டி.கள், தொலைக்காட்சிப் பெட்டி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களின் கழிவுகளாலும் குளிர்சாதனப் பெட்டி, ஓவன், துணி துவைக்கும் இயந்திரம் போன்ற எலக்ட்ரிக் பொருட்களின் கழிவுகளாலும் நிலர், நீர், காற்று, சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதுடன் பல்வேறு நோய்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இ_கழிவுகள் என்றழைக்கப்படும் இவை மக்காத தன்மை உடையன.
இ_கழிவுகளில் பெலாடியம், வெள்ளி போன்ற உலோகங்களும் தீமை தரும் காரீயம், காட்மியம், பாதரசம் போன்ற உலோகங்களும் உள்ளன.
மும்பையில் மட்டும் ஓர் ஆண்டிற்கு 25,350 டன் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்திய அளவில் இ_கழிவுகளைக் கொட்டுவதில் மகாராட்டிரம் முதல் இடத்திலும் தமிழகம் 2ஆவது இடத்திலும் உள்ளன.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் அதிக அளவில் இந்தக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. 5 சதவிகித இ_கழிவுகளே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
எந்த நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்ததோ அவர்களிடமே பழுதடைந்த பொருள்களைக் கொடுக்க வேண்டும். இவற்றை முழுமையாகப் பிரித்து, பின்பு மறுசுழற்சிக்கு அனுப்பி உலோகங்களைக் காய்ச்சி வடித்துப் பிரித்தெடுக்கலாம். வெளிநாடுகளில் இருந்து இ_கழிவுகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கக் கூடாது. மத்திய மாநில அரசுகள் சட்டம் இயற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இ_கழிவுகளினால் ஏற்படும் விளைவுகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று அய்.நா. சபையின் தென்கிழக்காசிய இயற்கை வளப் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரும், மதுரை காமராசர் பல்கலைக்கழக சுற்றுச் சூழல் துறையின் தலைவருமான முத்துச்செழியன் கூறியுள்ளார்.