ஜெயேந்திரர் ஆள்வைத்துத் தாக்கினார்
நீண்ட நாட்களாக நடைபெற்றுவரும் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் ஆள்வைத்து ராதாகிருஷ்ணனைத் தாக்கியதாக சங்கரராமனின் மகன் ஆனந்த் சர்மா சாட்சியம் அளித்துள்ளார்.
எனது தந்தை சங்கரராமன் காஞ்சி வரதராஜபெருமாள் கோவிலில் திருப்பணி செய்து வந்தார். அதேபோல் ராதாகிருஷ்ணனும் திருப்பணி செய்துவந்தார். இதனால் இருவருக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில், 2001இல் ஜெயேந்திரர் சீனாவுக்குப் போக முடிவு செய்தபோது, எனது தந்தை எதிர்ப்புத் தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதனால், எனது தந்தைக்கும் ஜெயேந்திரருக்கும் பகை இருந்தது. எனது தந்தை காஞ்சி மடத்தில் நடக்கும் பிரச்சினைகள், தவறுகள் குறித்து அடிக்கடி கண்டித்து வந்தார். இதையடுத்து, 2002இல் நசரத்பேட்டையில் உள்ள வெங்கடேஸ்வரா ஆயுர்வேத கல்லூரியில் எனது தந்தை, ரிசர்வ் பாங்க் வைத்தியநாதன் ஆகியோரை வரச்சொல்லி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, சோமசேகர கனபாடிகள் பெயரில் மடத்தில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டி எனது தந்தை கடிதம் எழுதினார். அதை மடத்தின் அபிமானிகளுக்கு தபால் மூலம் அனுப்பினார்.
நான்தான் அந்த தபால்களை அனுப்புவேன். அந்தக் கடிதங்களை ரிசர்வ் பாங்க் வைத்தியநாதன், ராதாகிருஷ்ணன், பாம்பே சங்கர், டெக்கான் சுப்பிரமணியம், ஆடிட்டர் சங்கர், ரிக்வேதி வைத்தியநாதன் உள்ளிட்ட பலருக்கு அனுப்பியுள்ளார்.
இந்த நேரத்தில்தான் மந்தைவெளியில் உள்ள வீட்டில் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டார். சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் கடிதம் எழுதியது ராதாகிருஷ்ணன்தான் என்று நினைத்து அவரை ஜெயேந்திரர் ஆள்வைத்துத் தாக்கியுள்ளார். இதையறிந்த எனது தந்தை ரிசர்வ் பாங்க் வைத்தியநாதனுக்கு போன் செய்தார். போனில், கடிதத்தை ராதாகிருஷ்ணன் எழுதியதாக தவறாகப் புரிந்துகொண்டு அவரைத் தாக்கியுள்ளனர் என்று பேசினார்.
இதையடுத்து, நானும் எனது அம்மாவும் கடிதம் எழுத வேண்டாம் என்று எனது தந்தையிடம் கூறினோம். அதனால் 6 மாதங்கள் கடிதம் எழுதாமலிருந்தார். தாக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் பட்டினப்பாக்கம் போலீசில், கடிதத்தை நான் எழுதவில்லை. ஆனால், நான் எழுதியதாக நினைத்து என்னை ஆள்வைத்துத் தாக்கியுள்ளனர். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஆபத்து வந்தால் அதற்கு ஜெயேந்திரர்தான் காரணம் என்று கூறியுள்ளார். இந்நிலையில்தான் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள தேவராஜசுவாமி தேவஸ்தான அலுவலகத்தில் எனது தந்தையைக் கொலை செய்தனர். போலீஸ் விசாரித்த போது நடந்த சம்பவங்களைத் தெரிவித்தேன் என்று 5ஆவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி தண்டபாணி முன்பு ஆனந்த் சர்மா கூறியுள்ளார். 22ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் ரிசர்வ் வங்கி வைத்தியநாதன் சாட்சியளிக்க உள்ளார்.
காவல்துறையால் தேடப்படும் ஆசாராம் பாபுவின் மகன்
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் இருவரும் தங்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக சூரத் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதனை அறிந்த நாராயண் சாய் தலைமறைவாக உள்ளார். வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக குடியுரிமை அதிகாரிகளுக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நாராயண் சாய்க்கு நோட்டீசும் அனுப்பியுள்ளனர்.