இளங்காலைப் பொழுது…! கதிரவன் தன் புதுமுகத்தை வெளியுலகிற்குக் காட்ட செஞ்சாந்து ஒப்பனையுடன் வந்து கொண்டிருந்தான்.
மேற்கே கிணற்றிலிருந்து மோட்டார் தண்ணீர் சள, சளவென வாய்க்காலில் வந்து, கரும்புப் பயிருக்குள் புதுமணப் பெண் போல நாணத்துடன் ஓடிக் கொண்டிருந்தது!
நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அவன் முகத்தில் வழியும் அரும்பு வியர்வையைக் கழுத்திலிருந்த சல்லாத்துண்டில் அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
அவளை நினைக்க, நினைக்க இப்பொழுதெல்லாம் மனம் அவனுக்கு உருகிப்போகிறது!
அவனது கைபேசி மணியொலித்தது…!
அவள்தான் பேசுகிறாள்… எடுக்கக் கூடாது. அவளிடம் கோபித்துக்கொள்ள வேண்டும். ஆமாம், நேற்று எத்தனை முறை அவளுக்குப் பேசியிருப்பான்? அவள் வேண்டுமென்றே தன் பேசியை அணைத்துவிட்டாளே!
அய்ந்து முறை மணி ஒலித்தது,
ஆறாவது…
ஏழாவது…
இப்படி பத்துமுறை மணி அடித்து ஓய்ந்தபோதுதான்.. ஒருவாறு அவனுக்கு, அவள் மீதிருந்த பொய்க்கோபம் தணிந்தது. அவளிடம் பேசினான்.
என்ன செய்தியாம்…?
ஏன் இப்படிக் கோவிச்சுக்கிறீங்க? போன் எடுத்து எங்கிட்ட பேசினா கொறைஞ்சா போயிருவீங்க…?
ஒருவித நாணத்துடன் மறுமுனையிலிருந்து கேட்டாள் அவள்.
நா, உனக்கு எத்தனை முறை போன் போட்டிருப்பேன்… நீ, கொஞ்சங்கூட மரியாதையில்லாம எடுக்கல!
அதனாலதா… இப்ப, நா அழைச்சப்போ நீங்க போன எடுக்கலியா?
ஆமாம்! இப்ப அதுக்கு என்னன்றே? கொஞ்சம் பொய்க்கோபத்துடனும், சிறிது காட்டமாகவும் கேட்டான் அவன்.
லூஸ் மாதிரிப் பேசாதே…! நேத்துத்தா என் வீட்டுக்காரனை மீண்டும் கோவை மருத்துவமனையில் சேத்துட்டு வந்தேன்…!
அப்படியா…? ஆச்சரியம் கொண்டவனாக அவன்.
என்ன னொப்படியா…? அவனோட தொந்தரவு தாங்க முடியலீங்க!
மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சுட்டானா?
அதே பிரச்சினைதான்! இதுவரைக்கும் எழுபதாயிரம் வரைக்கும் செலவு பண்ணி, குடிக்காம இருக்க வைத்தியம் பண்ணினேன்! இப்ப மீண்டும் வூட்டுல டார்ச்சர் பண்றான். கொழைந்தைகளை அடிக்கிறா… என்னைய அடிக்கிறா…! பாத்திரபண்டமெல்லா ஒடைக்கிறா.! பீரோவைக் கடப்பாறையால குத்திக் கிழிக்கிறான்! இவங்குடிக்கிறது மட்டுமல்லாம, தெனமு நாலஞ்சு குடிகாரப்பயனுகளக் கூட்டிவந்து… வூட்டுக்குள் குடிச்சு கூத்தடிக்கிறா.! படிக்கிற பிள்ளைகள வச்சுக்கிட்டு, நா என்ன பண்றதுன்னே தெரியலீங்க…! அழுகிறாள். மீண்டும் தொடர்ந்து பேசுகிறாள்…
நேத்துத் தூங்கிக்கிட்டு இருந்த பிள்ளைகளை நடு இரவுன்னும் பாக்காம வெளில தொரத்தறா…! எங்கிட்ட, எம் பையன் சொல்றா… இவனை நா அருவாள எடுத்து ஒரே வெட்டா வெட்டிட்டு… ஜெயிலுக்குப் போயிரம்மா, நீங்களாவது நல்லாயிருங்கன்னு சொ
ல்லும்போது…! என் மனசு என்ன பாடுபடும்?- நீங்களே சொல்லுங்க!
ஓவென்று அழுதாள் அவள்.
அழாதே…! அழாதே….!
தோடு, கொலுசெல்லாம் அடகுவெச்சு, நா குடி ஒழிப்பு மருத்துவமனையில சேத்துவிட்டு வந்திருக்கேனுங்க… இப்ப…!
எங்கிட்ட பணம் கேட்டாக் குடுத்திருப்பேனே…! எதுக்காக தோடு, கொலுசெல்லாம் அடகுவச்சே…!
ரெண்டு வருஷத்துக்கு முன்னேயே எம் புருஷனுக்குக் கல்லீரல் வீங்கிப் போச்சுன்னு நாஞ்சொல்ல, நீங்க இருபத்தையாயிரம் கடனா எனக்குக் குடுத்து… வைத்தியம் பாத்துக்கச் சொன்னீங்க. அந்தக் கடனைக் கூட நா, இன்னும் அடைக்கல. மீண்டும் உங்ககிட்ட எந்த முகத்தை வெச்சுக் கடன் கேக்க முடியும்? பொண்ணு 11ஆவது படிக்கிறா… பையன் 9ஆவது படிக்கிறான். வீட்டுவாடகை குடுத்து, கரண்டுபில் கட்டி… சாப்பாட்டுக்கு வாங்கி, எல்லாம் நா பொம்பள பாக்கறே…! இவன் ஆம்பள, தெனமும் குடிக்கக் காசு கேட்டு என்னைத் தொல்லை பண்றா… வேலைக்குப் போகாத நாயி!
சரி, அதை விடு! அதனாலதா நீ போனை எடுக்கலை அப்படித்தானே? இங்க என்னோட கதை அதைவிட மோசமா இருக்கு…! அதை உன்னோட பகிர்ந்துக்கலாம்னுதா… நேத்து, உனக்குப் போன் பேசினேன். சரி.. என்னோட கஷ்டம் என்னோடவே இருக்கட்டும்! சரி! சாப்பிட்டாச்சா?
பேச்சை மாற்றி, அவளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சி செய்தான்.
அதுகேட்டு கல, கலவெனச் சிரித்தாள் அவள்.
இந்தச் சிரிப்புதா என்னோட கவலையப் போக்கற மருந்தா இருக்கு. சரி, சொல்ல வந்ததைச் சொல்லிட்டுச் சிரி!
உங்களோட மனைவி நேத்து, என்ன கொடுமை பண்ணினா, அந்தச் செய்திய, எங்கிட்ட கொஞ்சம் இறக்கி வையுங்க…! சிரித்துக் கொண்டே அவள் சொன்னாள்.
அந்தக் கன்றாவிய நீயும் கேட்கணுமா? சொல்றேன்! அவ பெத்த ஒரு பையனுக்கு வாயிக்கு ருசியா சாப்பாடு ஆக்கிப் போட மறுக்கிறா. என்னையும், அவனையும் ஏதோ எதிரிகளைப் பார்க்கிற மாதிரிப் பாக்கறான்னா பாத்துக்கோ. ஒரு தடவை கொழம்பு வச்சா.. நாலு நாளைக்கு வச்சிருக்கா! கெட்டுப் போனதை எப்படிச் சாப்பிடறது? எப்படியோ அவளோட இருபது வருஷமாக் குப்பை கொட்டியாச்சு! ம்ம்.!
பையன் கல்லூரி போயிட்டானா?
விடுமுறைக்கு நாலு நாளு வந்திருந்தான். இவளோட தொந்தரவு தாங்காம… ஆஸ்டலுக்குப் போயிடறேன்னு போயிட்டான். எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு! உன்னோட இப்படி நாலு வார்த்தை இதமா பேசினாத்தா… கொஞ்சம் ஆறுதலா இருக்கு!
சரி! அதவிடுங்க! அவுங்க குணம்தா உங்களுக்குத் தெரியுமே? அடுப்புல விசில் சத்தங்கேக்குது… இருங்க அப்புறமா பேசிக்கலாம்!
சரி! வச்சிர்றேன்!
இருவரும் உரையாடலைத் துண்டித்துக் கொண்டனர்.
ஒரு மாதமிருக்கும்!
அவன், அவளிடம் பேசவேண்டும் என்றெண்ணி, தன் பேசியில் எண்களை விரலால் அழுத்திக் கொண்டிருக்கும்போது, அவளே அவனிடம் பேசினாள்.
என்னங்க…! எனக்கு, இப்படியொரு நெலமை வரக்கூடாதுங்க! வரவே கூடாது! அழுதாள் அவள்.
ஏன்? என்ன நடந்தது? வெவரமாச் சொல்லு!
எம் புருஷனுக்கு மனநிலை சரியில்லாமப் போயிருச்சுங்க! வீட்டுல எல்லாத்தையும் போட்டு அடிக்கிறா. தன்னோட துணிய தானே கிழிச்சுக்கிறா. மீண்டும் அவன் போதைக்கு அடிமையாயிட்டானுங்க!
அவனைத் திருத்தவே முடியாது போலிருக்கு…!
ஆஸ்பத்திரியில குடுத்த மாத்திரைகளைச் சாப்பிடாம காசு கேட்டு என்னைய, அடிச்சுத் துன்புறுத்தறானுங்க! பாத்திர பண்டமெல்லாம் வித்து டாஸ்மாக்குக்குப் போறா. நேத்து புள்ளைக நோட்டு புத்தகங்களையெல்லாம் எடைக்குப் போட்டு, குடிச்சுட்டு வர்றானுங்க! என்னால… அவனோட வாழப் பிடிக்கலைங்க! அவனை நா, கொலை செய்துடுவேனோன்னு பயமா இருக்குங்க!…
விம்மி, அழுதுவிட்டு, மீண்டும் தொடர்ந்தாள்.
அவனை எங்காவது மனநலக் காப்பகத்தில சேக்கணும் அல்லது மாத்திரை மருந்துகளைக் குடுத்து சாகடிச்சுட்டு, நா ஜெயிலுக்குப் போகணும்ங்க! ஏந்தான் பொண்ணாப் பொறந்தோம்னு இருக்குங்க!
அழுது சிறிது ஓய்ந்தபின் அவன் தொடர்ந்தான்…
மொதல்ல, அழுவதை நிறுத்து! அந்த மாதிரி விபரீத முடிவெல்லாம் எடுக்கிறது கோழைத்தனம். முட்டாள்தனம்! உன்னோட பிள்ளைங்க எதிர்காலத்தை நெனைச்சுப் பாரு! அப்புறம் யோசுச்சு ஒரு முடிவுக்கு வருவோம். உன் வீட்ல நடந்ததை நீ, சொல்லிப்புட்டே! என் வீட்ல என்ன நடந்தது தெரியுமா உனக்கு?
சொல்லுங்க! கண்களில் வழியும் கண்ணீரை முந்தானையால் துடைத்துக்கொண்டே கேட்டாள்!
சோகத்துடன் விவரிக்கத் தொடங்கினான் அவன்.
எம் மனைவி… அவ, அப்பா வீட்டுக்குப் போயி ரெண்டுவாரம் ஆச்சுன்னு உங்கிட்ட சொன்னே இல்லியா?
ஆமா! சொன்னீங்க!
எனக்கு இப்ப, விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிச்சிருக்கா! நா, இதை உங்கிட்டச் சொல்லப் போன் பண்ண நெனைச்சே, ஆனா, உன்னோட சோகக்கதைய, எங்கிட்டச் சொல்லி முந்திக்கிட்டே!
இப்ப நாம என்ன செய்யறதுங்க? உடனடியாக முடிவு எடுக்கணுங்க. பசங்க படிப்பு, எதிர்காலம் எல்லாம் வெறும் கனவா, கானல் நீரா போயிரும்ங்க! எனக்கும் பாதுகாப்பில்லாம போயிரும் போல இருக்கு. முந்தா நாளு, வழக்கம்போல டவுனுக்குப் போயி காய்கறி வாங்கி வந்து சந்தைக்குப் போனேன். எவனோ என் நெலைமையத் தெரிஞ்சுக்கிட்டு, எங்கையப் பிடிச்சு இழுக்கிறா! என்னோட மொபைலுக்கு, லாட்ஜிக்கு வாரியான்னு கெட்ட வார்த்தையால எஸ்.எம்.எஸ். அனுப்புறானுங்க! இதை யாருகிட்ட சொல்ல… உங்ககிட்டத்தா சொல்ல முடியும்!
சரி… அழுவதை நிறுத்து! நா, கேக்கறதுக்குப் பதில் சொல்லு!
கேளுங்க, சொல்றேன்!
எனக்கும், உனக்கும் பழக்கம் எப்படி ஏற்பட்டது தெரியுமா?
உங்க ஊருக்குக் காய்கறி விற்க… சந்தைக்கு வரும்போது, உங்களைச் சந்திச்சேன்! உங்க மச்சினன் வீட்டுத் திருமணத்துக்கு மொத்தமா காய்கறி வேணும்னு கேட்டாங்க. கொடுத்தேன்.. ஆனா… அவங்க காய்கறி சரியில்லேன்னு, பணம் கொடுக்க மறுத்துட்டாங்க! நீங்கதான் அதுக்குரிய பணத்தைக் கொடுத்தீங்க. உங்க மனிதாபிமானம் எனக்குப் புடிச்சிருந்தது. அதிலிருந்து உங்களுக்கும் எனக்கும் பழக்கம். பழக்கமட்டுமல்ல! உண்மையான அன்பு… நேசம், நம்பிக்கை… ஏன்? ஒரு ஆழமான நட்பு… ஒருவிதத்தில அதை காதல்னுகூட சொல்லிக்கலாம்ங்க. இது தொடர்ந்து வந்திக்கிட்டிருக்கு!
ஆமாங்க…! சுருக்கமா, எம் மனசில என்ன இருக்கிறதுனு உங்களுக்குத் தெரியும், உங்க மனசில என்ன இருக்கிறதுனு எனக்குத் தெரியும்!
ஆமா… உனக்கென்ன வயசு?
முப்பத்தஞ்சு! உங்களுக்கு…
எனக்கு நாப்பத்தேழு வயசு!
ஆமா, இதெல்லாம் எதுக்குக் கேக்கறீங்க?
சொல்றேன்! என்னைப் புடிச்சிருக்கா?
இதென்ன கேள்வி. ரொம்பப் பிடிச்சிருக்கு!
என்னோட வசதிகள், நிலபுலன்கள், வீடு, எனக்கிருக்கிற சமூக அந்தஸ்து, குடும்ப கவுரவம் இதுக்காகத்தான் என்னை விரும்பற… அப்படித்தானே?
அதெல்லாம் துளிகூட இல்லீங்க! நீங்க மத்தவங்கள மதிக்கிற குணம். உதவிசெய்யிற மாண்பு. என்னைப்போல அபலைகளுக்கு ஆதரவு செய்யிற பெருந்தன்மை. இதெல்லாம்விட எம்மேல நீங்க வச்சிருக்கிற அன்பு… இதெல்லாம் இருக்கிற உங்கள நா விரும்பறதுல ஒன்னும் வியப்பு இல்லீங்க!
நீ சொல்றது போலத்தான் நானும் உம்மேல அன்பு வச்சிருக்கேன். தவறா எடுத்துக்காதே. நாம ரெண்டு பேரும் இப்ப இருக்கிற பொருந்தாத் திருமணத்தைச் சட்டப்படி ரத்து செய்துவிட்டு, மீண்டும் நாம சட்டப்படி திருமணம் செஞ்சுக்குவோம்! ஏற்கெனவே மணமான நாம மறுமணம் செய்யறதுக்கு உனக்கு மனம் ஒப்புக்குமா?
நா, ஒப்புக்கிறேங்க! ஆனா.. இந்த ஊரு, சமூகம் உங்களுக்கு என்னால, உங்களப்பத்தி இழிவா, அவமானமாப் பேசினா… அதை என்னால பொறுத்துக்க முடியாதுங்க! அதுதான் எனக்குக் கவலையா இருக்கு!
எனக்கு அந்த வலியத் தாங்கிக்கற இதயம் இருக்கு! நாலு பேருக்காக நாம வாழல. நாம நமக்காக, நம்ம குழந்தைகளுக்காகத்தான் வாழறோம். உன்னோட ஒன்றுக்கும் உதவாத கணவன், என்னோட அடங்காப் பிடாரியான மனைவி நமக்கு இனித் தேவையில்லை என்னை நம்பாம என் மனைவி விவாகரத்துச் செய்ய முன்வந்துட்டா. உன் கணவனும் குடிக்கு அடிமையாகி உன்னை வாழாவெட்டியாக்கி _ குழந்தைகளையும் பாதுகாக்கத் தவறிக்கிட்டிருக்கான். நீயும் சட்டப்படி உன் கணவனுக்கு விவாகரத்து மனுச் செய்திடு. நாம சட்டப்படி கணவன்_மனைவிங்கிறதைவிட மனமொத்த இணையராய் வாழலாம். நம்ம பிள்ளைகளின் எதிர்காலத்தையும் உத்திரவாதமா காப்பாத்தலாம்! நீ என்ன சொல்றே?
நாளைக்கு உங்கள இது சம்பந்தமா வந்து பார்க்கறேனுங்க. அதற்கான செயல்களைச் செய்யிங்க! திருமணம்ங்கிற போர்வையில என்னைப்போல அபலைகளுக்கும், முரண்பாடான மனைவி அமைந்த உங்களுக்கும் கட்டுப்பாடு கொண்ட மரபுவழி தாம்பத்ய வாழ்வு இனி வேண்டாம். இருவரோட நம்பிக்கையின்பால் கொண்ட மனமொத்த நண்பர்களா இனி வாழ்வோம்னு நீங்க சொன்னது எனக்குப் பிடிச்சிருக்குது. நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து இந்து மதஞ்சார்ந்த மரபுள்ள திருமணந்தான் போலியான _ நாடகத் திருமணம்னு நம்ம திருமணங்கள் நிரூபிச்சிருக்குங்க! நாலு பேருக்காக _ போலி கவுரத்துக்காக _ இழிவான வாழ்வைச் சுமந்து தினம் தினம் துன்பப்பட்டுக்கிட்டு வாழ எனக்குப் பிடிக்கலீங்க! நீங்க சொல்வதை முழுமையாக ஒப்புக்கிறேங்க!
ஆமா, மரபுகள ஒடைச்ச, புது சமுதாயம் உருவாக்க நீ முன் மாதிரியா ஒப்புக்கிட்டது எனக்கு மகிழ்ச்சியா இருக்கு! நாளை உனக்காகக் காத்திருப்பேன்!
நாளை சந்திப்போங்க! அலைபேசியை அணைத்தாள் அவள்.
ஊசிப்போன பழைய மரபுகளை உடைத்து புதிய நம்பிக்கை, நட்புரிதலுடன் கூடிய இல்லற வாழ்க்கையை நோக்கி இருவரும் பயணிக்கத் தயாராயினர்.
– ப.கல்யாணசுந்தரம்