பிப்ரவரி 16_28 உண்மை சபரிமலையில் இருப்பது அய்யனாரா? அய்யப்பனா? என்ற கட்டுரையில் கேரளாவில் உள்ளவர்கள் செல்வதில்லை. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மக்கள்தான் செல்கிறார்கள் கேரள அரசுக்கு நல்ல வருமானம். மகரஜோதி என்பது தானாகத் தெரிவதல்ல, மனிதர்கள்தான் ஏற்றுகிறார்கள் என்பதை தேவசம் போர்டு தலைவர் கூறிவிட்டார். கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட் அரசே அரசு வருமானத்திற்காக இதுவரை மறைத்துள்ளது. அரசே பக்தியை வியாபாரமாக்கும்போது தனிப் பட்டவர்கள் ஏமாறத்தான் செய்வார்கள். வருமானத்திற்காக பக்தி, கோயில் என்று சில பேருடைய சுயநலத்திற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகப் புரிந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே மகரஜோதி உண்மையை பிட் நோட்டீஸ் அடித்து வெளியிட்டுவிட்டது. உண்மை இப்பொழுதுதான் வெளியாகிறது.
-ஈ.சிதம்பரம்
மதுரை
ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைவரிசை விஷயத்தில் 1.76 லட்சம் கோடி நாட்டிற்கு நஷ்டம் என்பது குறைந்த பணம் இல்லை. இந்த நஷ்டம் ஒருவரால் செய்திருக்கமுடியாது. பல பேர் சேர்ந்திருந்துதான் செய்திருக்க முடியும். இந்த நஷ்டம் திடீர் என்று ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஏனென்றால், விதை போட்டால் செடி மரமாவதற்குப் பல வருடங்கள் ஆகும். விதை யார் போட்டார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும். ராசாவினால் நாட்டிற்கு நஷ்டம் என்று கூறுகிறார்கள். அதே சமயம் டி.வி. மீடியா, பத்திரிகை ஆட்கள் மற்றும் பலருக்கும் லாபம் கிடைத்திருக்கின்றது. தராசில் 1 கே.ஜி வெய்ட் வைத்தால் ஒரு பக்கமாகச் சாயும். தராசு முள் ஒரு வினாடிகூட நேராக நிற்காது இருபக்கமும் ஆடிக்கொண்டே இருக்கும். இப்போது குறைகூறும் எதிர்க்கட்சிகள் ஒருவரும் குற்றம் செய்யாத யோக்கியவாதிகளா!. பொறுமையாக விசாரிக்க வேண்டும்.
– வி.பி.எம். மணி
சென்னை – 42
வணக்கம். உண்மை மாத இதழ் பலமுறை படித்துள்ளேன். கடிதம் எழுதுவது இது முதல்முறை. சிந்தனைத் துளி பகுதி மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுவது. அய்யப்பனைப்பற்றிய கட்டுரை _ கவர் ஸ்டோரி மிகச் சிறப்பு. கடவுளைப் பற்றி சில அய்யங்கள் ஏற்பட்டன. அவை,
1. தூய்மையான இடம் என்று சொல்லுகிறார்கள்! ஆனால், மிகப்பெரிய அமைச்சர் வரும்போது தூய்மை மட்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுமக்கள் மீது குப்பைகள் வீசப்படுகிறது! இதற்கான காரணம்.
2. பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்தபோது கருவறையில் கடவுள் உள்ளாரா இல்லையா!
3. பூசாரிகளுக்கும் – ஆசாமிகளுக்கும் உள்ள வேறுபாடு.
4. தினந்தோறும் ஆலயம் செல் என்று கூறுபவர்கள் மனதை சுத்தமாக வைப்பது இல்லை ஏன்?
– ஆ. ரேவதி, தாரமங்கலம், சேலம் மாவட்டம்.