தமிழர்களில் யாரொருவர் அறிவாளியாக இருந்தார்களோ அவர்களைக் கொச்சைப்படுத்துவது பார்ப்பனர்களின் சுபாவம். அதற்கு பாரதியாரும் விதிவிலக்கல்ல. பாரதியார் கட்டுரைகள் என்ற நூலில் (ஸ்ரீமகள் கம்பெனி வெளியீடு) சமூகம் என்ற தலைப்பில் பக்கம் 74இல் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். பகவன் என்ற பிராமணனுக்கும் ஆதி என்ற பறைச்சிக்கும் ஔவை, திருவள்ளுவர், கபிலர், பரணர், உப்பை, உறுவை, வள்ளி என்ற குழந்தைகள் பிறந்து… என்று எழுதியிருக்கிறார். பாரதியார் ஒரு கவிஞர்; ஆராய்ச்சியாளர் அல்ல. ஔவை, திருவள்ளுவர், கபிலர், பரணர் ஆகியோர் வாழ்ந்தது வரலாறு. அவரவர் இயற்றிய பாடல்களைத் தவிர அவர்களைப் பற்றிய வேறு சான்றுகள் யாதும் கிடையாது.
குறிப்பாக அவர்கள் பிறந்த வருடம், மாதம், தேதி, பெற்றோர் பெயர் போன்ற எதுவும் ஆதாரப்பூர்வமாகக் கிடையாது. அவ்வாறிருக்க அவர்களின் தகப்பனார் பார்ப்பனன் என்று கூறுவது அவர்களைக் கொச்சைப்படுத்துவதாகும்.
மேலும் பாரதியாரின் ஜாதி வெறி எவ்வளவு என்பதை மேற்படி புத்தகத்தின் 79ஆம் பக்கத்தில் பார்க்கலாம். அது அந்தப்படி இந்தியா முழுவதையும் பிராமண தேசமாக செய்துவிட்டால் நல்லதென்பது என்னுடைய அபிப்பிராயம் என்று கூறியுள்ளார். வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் கருத்துப்படி ஆரியர்கள் வந்தேறிகள். அதாவது, ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ஆசியாவிலிருந்து ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய் வழியாக இன்றைய இந்தியாவிற்கு வந்தவர்கள். திராவிடர்கள் இந்நாட்டின் பூர்வகுடிகள். இனத்தால் ஆரியர்கள், மனுதர்ம சாஸ்திரப்படி பிராமணர்கள். அதாவது நான்கு வர்ணத்தில் முதல் வர்ணம். தமிழகத்தைப் பொறுத்தவரை அவர்கள் பார்ப்பனர்கள். அதைப் பாரதியாரே ஒப்புக் கொண்டு அவருடைய கவிதைகள் அனைத்திலும் பார்ப்பனன் என்றுதான் பாடியிருக்கிறார். இந்தியாவில் மொத்த ஜனத்தொகையில் பார்ப்பனர்கள் 100க்கு 3 வீதம் ஆவர்.
அவ்வாறு 100க்கு 3 வீதம் உள்ள மக்கள் பெயரால் 100க்கு 97 வீதம் வாழும் மக்கள் உள்ள நாட்டை (அதிலும் முகம்மதியர், கிறிஸ்தவர், சீக்கியர், பௌத்தர் மேலும் மதநம்பிக்கை அற்றவர்கள் கணிசமாக வாழும் நாட்டை) பிராமண தேசமாக மாற்றிவிட வேண்டும் என்று தன் ஜாதி அபிமானத்தை/அபிப்பிராயத்தைத் தெரிவித்துள்ளார்.
– ஆர்.டி.மூர்த்தி, திருச்சி