அய்யாவின் அடிச்சுவட்டில்.. – 103

அக்டோபர் 01-15

இஸ்மாயில் கமிஷன் வெளியிட்ட உண்மைகள்!

அவசர கால நிலையில் நாங்கள் அனுபவித்தவற்றை விவரித்து எழுதியுள்ள எழுத்தாளர் சோலை அவர்கள் தொடர்கிறார்.

ஆரம்ப காலங்களில் வீரமணிக்கும் அளிக்கப்பட்டது கல்லும், மண்ணும் கலந்த உணவுதான். சில நாள் வேப்பெண்ணை கலந்தும் கொடுத்தார்கள். சிறுநீர்கூட உணவில் கலக்கப்பட்டதை இஸ்மாயில் கமிஷன் அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

ரசம் என்ற பெயரில் வெந்நீர். மாலையில் சிறிது கடலை. வேறு உணவே கிடையாது என்கிறார் வீரமணி.

1976 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 1977 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்வரை சென்னை மத்திய சிறையில் மிசா கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். அதனை மாண்புமிகு நீதிபதி எம்.எம். இஸ்மாயில் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் பதிவு செய்திருக்கிறது.

விடுதலை நிருவாகி சம்பந்தம் அடித்து வீழ்த்தப்பட்டதை அந்தக் கமிஷன் பதிவு செய்திருக்கிறது.

இதோ சம்பந்தம் பேசுகிறார்:

நான் செத்தவன்போல் கீழே விழுந்தேன்; அடிகள் வாங்கிய ஏனையோர் அறைக்குள் அனுப்பப்பட்டனர். என்னால் எழுந்திருக்க முடியவில்லை. என்னைச் சுற்றி நின்று கொண்டிருந்த வார்டர்களும், மற்றவர்களும், என்னை எழுந்திருக்குமாறு கேட்டு, எழுந்திருடா கழுதை, பாவலா செய்கிறாயா என்று கூறினர். அவர்கள் ஒருவர் மாற்றி ஒருவராகத் தடியால் என்னை அடித்தனர். வார்டர்களில் ஒருவர், என்னை வலது முழங்கால் முட்டிக்குக் கீழே எலும்பில் உதைத்தார். இரத்தம் கசிய ஆரம்பித்தது. ஏற்கெனவே அடிகளை வாங்கிக் கொண்டு அறைக்குள் அனுப்பப்பட்டிருந்த திரு.கே. வீரமணியும், திரு. தட்சிணாமூர்த்தியும் அப்போது அந்த இடத்திற்கு விரைந்து வந்து, அவரை அடிக்காதீர்கள், அவருக்கு முதுகுத் தண்டில் இரண்டு முறை ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது என்று கூறினர்.

மேலும், அடிகள் கொடுத்தால் அவர் இறந்துவிடுவார் என்று கூறினர். வார்டர் ஒருவர் கே. வீரமணியின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டு, ஒக்காளி ஒளி, நீ என்னடா சிபாரிசு என்று கூறினார்.

அடுத்த நாள் ஜெயிலர் திரு. கையூம் வார்டர்கள் புடைசூழ வந்து எங்களைப் பார்த்தார். என்னால் தரையில் உட்கார முடியவில்லையாதலால், நான் திண்ணைமேல் உட்கார்ந்திருந்தேன். கையூம், நீ மட்டும் என்னடா மேலே, இறங்கி கீழே உட்காரடா கழுதை என்று கூறி என்னை அங்கிருந்து இறங்கும்படிக் கூறினார். நான் எனது நண்பர்களின் உதவியுடன் கீழே உட்கார முயற்சி செய்தேன். வீரமணி எனது வருந்தத்தக்க நிலையை விளக்கி, என்னால் தரையில் உட்கார முடியாது என்பதையும் விளக்கிக் கூறினார். அதன் பிறகு கையூம் என்னைப் பார்த்து, மேலேயே உட்காருடா கழுதை என்று கூறினார். திரு.என்.எஸ். சம்பந்தம் சொல்லியுள்ள சாட்சியங்கள் கற்பனையானவை அல்லது புனைந்துரைக்கப்பட்டவை என்று நான் தள்ளிவிடுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று கூறுகிறார் மாண்புமிகு நீதிபதி இஸ்மாயில் அவர்கள்.

கண்களில் அடிபட்ட வீரமணி தொடர்ந்து சிகிச்சை பெற சிறையிலிருந்து அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டிருக்கவேண்டும். ஆனால், சிறைத் துறை அதிகாரியின் நிர்ப்பந்தம் காரணமாக சிறை மருத்துவமனை மருத்துவர் பரிந்துரை செய்யவில்லை. மேலும், இஸ்மாயில் கமிஷன் முன்பு அந்த மருத்துவர் பொய் சொன்னார்.

இதனையும் இஸ்மாயில் கமிஷன் பதிவு செய்திருக்கிறது.
இதோ படியுங்கள்!

திரு. கே. வீரமணியைப் பொறுத்தமட்டில், அவர் அடிக்கப்பட்டதனால் அவருடைய இடது கண்ணின் கீழ்ப்புறத்தில் வீக்கம் இருந்தது. அதனால் அவர் பெரிதும் தொல்லைப்பட்டார். அதற்காக சிகிச்சை செய்யவேண்டியது அவசியமாயிருந்தது. அவர் பொது மருத்துவமனையிலுள்ள காது, மூக்கு, தொண்டை நோயியல் துறைக்கு 1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி அன்று அனுப்பப்பட்டு 10 நாள்கள் ரேடியம் சிகிச்சை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார் என்பதில் எவ்விதமான கருத்து வேற்றுமையுமில்லை. அதுபோலவே, அவர் 1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் நாள் அன்றும், 1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் நாள் அன்றும் பொது மருமத்துவமனையில் ரேடியம் சிகிச்சை செய்துகொண்டது போக, எஞ்சிய 8 நாள்களில் ரேடியம் சிகிச்சை செய்து கொள்ளவில்லை என்பதிலும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை.

இதுகுறித்து திரு. கே. வீரமணியை ரேடியம் சிகிச்சைக் காக ஏன் மருத்துவமனைக்கு அனுப்பவில்லை என்று சிறை மருத்துவர் ரங்காச்சாரியைக் (P.W.11) கேட்டபோது, திரு. வீரமணி, பொது மருத்துவமனைக்குச் சென்று வரிசையில் நிற்கவேண்டிய இக்கட்டான நிலை காரணமாக, அங்கு தான் போக விரும்பவில்லை என்று அவரே தெரிவித்ததாகப் பதிலளித்துள்ளார்.

திரு. கே. வீரமணி, தான் மருத்துவமனைக்குப் போக விரும்பவில்லை என்று கூறியதை, மருத்துவர் அவருக்குச் சம்பந்தப்பட்ட ஆவணம் எதிலும் குறிக்கவில்லையென்றும், நடந்தவற்றைத் தனது நினைவிலிருந்தே சொல்வதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். இதிலிருந்தே மருத்துவரின் விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கில்லை.

கண் வலி காரணமாக 6.3.1976, 8.3.1976 ஆகிய இரு நாள்களும் பொது மருத்துவமனைக்குச் சென்று பெரிய மருத்துவரின் ஆய்வுரை பெற்ற ஒருவர் பொது மருத்துவமனைக்குச் சென்று நிற்கவேண்டிய இக்கட்டான நிலையிருப்பதால், தான் அங்கு செல்ல விரும்பவில்லை என்று அவரே தன்னிச்சையாகச் சொல்லியிருக்க முடியாது. எனவே, இதுகுறித்து மருத்துவரின் விளக்கத்தை நான் தள்ளிவிடுகிறேன். எஞ்சிய நாள்களுக்கு திரு. வீரமணியை ரேடியம் சிகிச்சை பெறுவதற்காக பொது மருத்துவமனைக்கு வேண்டுமென்றேதான் மருத்துவர் அனுப்பாமலிருந்தார். சென்னை மத்திய சிறைச்சாலையின் கண்காணிப்பாளருடைய தூண்டுதலின் பேரில் மருத்துவர் அவ்வாறு அனுப்பவில்லை என்ற முடிவிற்குத் தான் வருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
வீரமணிக்கு சிறை அதிகாரிகளும், மருத்துவர்களும் சிகிச்சை அளிக்க மறுத்ததை, மனிதாபிமானமற்ற செயலை நீதிபதி இஸ்மாயில் அவர்கள் சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

எனவே, மிசா காலச் சிறைக் கொடுமைகள் என்பது தன்மான வீரர்கள் சிந்திய ரத்தத் துளிகளால் எழுதப்பட்ட கருப்பு அத்தியாயமாகும்.

அவசர நிலை என்ற காட்டாட்சி டெல்லியில் முடிவிற்கு வந்தது. சர்வாதிகாரிகள் காகித ஓடத்தில் பயணிக்க முடியவில்லை.

சரியாக ஓராண்டு முடிந்த பின்னர் சென்னை மத்திய சிறையிலிருந்து வீரமணி விடுதலையானார். இவ்வாறு மிசா சிறையில் நாங்கள் பட்ட கொடுமைகளை வீரமணி ஒரு விமர்சனம் எனும் நூலில் விவரித்துள்ளார் எழுத்தாளர் சோலை அவர்கள்.

இதற்கிடையில் 17.9.1976 அன்று பெரியார் திடலில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா நடத்துவதற்கு காவல்துறை அனுமதிக்கான விண்ணப்பம் சுமார் 10 நாட்களுக்கு முன்பே உரிய காவல்துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் எல்லாம் முடிவடைந்துவிட்ட நிலையில், தமிழகம் முழுவதுமிருந்து தனிப் பேருந்துகளில் தோழர்கள் சென்னைக்குத் திரளத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ஆனால் 15-.9.1976 அன்று இரவு 10 மணிக்கு மேல், விழா நடத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்ற அறிவிப்பை காவல்துறை தந்தது. அடுத்தநாள் விடியற்காலை அம்மா அவர்களும் புலவர் இமயவரம்பன் அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஆகஸ்ட் இறுதி வாரத்தில் தமிழகம் முழுவதும் கழகத்தலைவர் அம்மா அவர்கள் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு மன்றங்களில் கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் உரையாற்றினார்கள். அவசரநிலை காலத்தில் நமது இயக்கப் பிரச்சாரத்தைப் பார்ப்பனர்கள் திட்டமிட்டுத் தடுத்ததைத் துணிவோடு சுட்டிக்காட்டி கழகத்தலைவர் அன்னையார் அவர்கள் ஆற்றிய உரையைத் தொடர்ந்து, தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவுக்கும் அன்றைய குடியரசுத் தலைவர் ஆட்சி தடை விதித்தது. கழகத் தலைவரையும் கைது செய்து காவலில் வைத்தது.

ஒரு தலைவரின் பிறந்தநாள் விழா, அவரது சொந்த இடத்திலேயே நடைபெற அனுமதி மறுக்கப்பட்டது, வரலாற்றிலேயே இதுவே முதல் நிகழ்ச்சியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தலைவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட செய்தியை விடுதலையில் வெளியிட சென்சார் அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். சென்னையில் நடைபெறவிருந்த தந்தை பெரியார் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்ற அறிவிப்பை செப்டம்பர் 16ஆம் தேதிதான் அறிவிக்க முடிந்தது. 16ஆம் தேதி இரவு தந்தை பெரியார் சிலைக்கு நடுநிசியில் எனது வேனில் சென்று எனது ஓட்டுநர் மாரியப்பனும், எனது மகன் அசோக்ராஜும் அய்யா சிலைக்கு மாலைபோட்டு, யாருக்கும் தெரியாமல் திரும்பினர்.

17.9.1976 அன்று, நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்ட செய்தியை அறிவதற்கு முன்பே பல்லாயிரக்கணக்கான கழகத் தோழர்கள் பெரியார் திடலை நோக்கிக் குவியத் தொடங்கிவிட்டனர். தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவுக்கு அனுமதி இல்லையா என்று கழகத் தோழர்கள் துயரவெள்ளத்தில் மூழ்கினர். தந்தையின் நினைவிடத்தில் கண்ணீர்விட்டு நின்றனர். காவல்துறை அதிகாரிகள் பெரியார் திடலுக்குள் நின்றுகொண்டு, வருகின்ற தோழர்கள் உடனே திடலைவிட்டு வெளியேறிவிட வேண்டுமாய் வற்புறுத்தி வந்தனர். கழக வரலாற்றில் இது ஒரு குறிப்பிடத் தகுந்த செப்டம்பர் 17 ஆகும்.

18.9.1976 அன்று மாலை 6 மணி அளவில் கழகத் தலைவர் அம்மா அவர்களும், மத்திய கமிட்டி உறுப்பினர் புலவர் கோ.இமயவரம்பன் அவர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள். இரவு 8 மணி அளவில் கழகத் தோழர்களுடன் அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.

20.9.1976 அன்று, மீண்டும் சந்திக்கிறேன் என்ற தலைப்பில் கழகத் தலைவர் அன்னையார் அறிக்கை வெளியிட்டார்கள். கழகத் தோழர்கள் தங்கள் இல்லங்களில் அமைதியாக தந்தை பெரியார் பிறந்தநாள் விழா எடுத்ததைப் பாராட்டி, தீவிரமாக தந்தை பெரியார் கருத்துகளைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை அதில் வலியுறுத்தி இருந்தார்கள்.  கூட்டங்கள் நடத்துவதற்கும், கழக அமைப்புகள் செயல்படுவதற்கும் அப்போது கடுமையான தடைகள் இருந்ததால், தந்தை பெரியார் நூல்களை ஏராளமாக மக்களிடையே பரப்புங்கள் என்று அறிக்கைமூலம் தெரிவித்தார்கள்.

24.12.1976 அன்று தந்தை பெரியார் நினைவு நாளாக இருந்தும், அன்று பெரியார் திடலில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க காவல்துறை மறுத்து, 26.12.1976 அன்று நிகழ்ச்சி நடத்த ஒருநாள் இடைவெளியில் காவல்துறையினர் அனுமதி தந்தார்கள். திடீரென நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கழகத்தலைவர் அம்மா மற்றும் கழகத் தோழர்கள் அதில் கலந்துகொண்டு பேசினர். தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டு 11 மாத இடைவெளிக்குப் பிறகு சென்னை நகரில் நடந்த முதல் கழகக் கூட்டம் இதுவே. பெரியார் திடலில் உள்ள அரங்கத்திலும் பல்வேறு காரணங்களைக் காட்டி பழிவாங்கும் போக்குடன் நிகழ்ச்சி நடத்த பல மாதங்கள் அனுமதிக்கவில்லை அன்றைய அரசு. சுமார் 8 மாத இடைவெளிக்குப் பிறகு மன்றத்தில் நிகழ்ச்சி நடத்த இப்போதுதான் முதன்முறையாக அனுமதியளித்தது.

இந்த நிகழ்ச்சிக்கு வில்லிவாக்கம் திராவிடர் கழகத் தலைவர் அ.தியாகராசன் தலைமை வகித்தார். கழகத் தலைவர் அம்மா, அம்பத்தூர் திருநாவுக்கரசு, வடசென்னை வி.எம்.நாராயணன், சைதாப்பேட்டை எம்.பி.பாலு, கலைஞர் கருணாநிதி நகர் எம்.எஸ்.அழகரசன் ஆகியோர் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினர். ஒரேநாள் விளம்பரத்தில் ஏராளமான பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுதும் மிசா சட்டத்தின் கீழ் சிறைப் பிடிக்கப்பட்டிருந்த கழக வீரர்கள், நான் உட்பட கழகத் தோழர்கள் 358 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் 23.1.1977 அன்று காலை விடுதலை செய்யப்பட்டோம்.

(நினைவுகள் நீளும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *