நம்பிக்கைக்குரிய போலீஸ் அதிகாரிகளை போலி என்கவுன்டரில் சிக்கவைத்துவிட்டு, தனக்கு நெருக்கமான அமித் ஷாவை மோடி பாதுகாப்பதாக கூடுதல் தலைமைச் செயலாளருக்கு (உள்துறை) அனுப்பிய தனது ராஜினாமா கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார் இடைநீக்கம் செய்யப்பட்ட குஜராத் அய்.பி.எஸ். அதிகாரி டி.ஜி.வன்ஸாரா.
6 ஆண்டுகளுக்கும் மேல் சிறை வாழ்க்கையை அனுபவித்து வரும் வன்ஸாரா மோடியின் நம்பிக்கைக்குரிய மேனாள் அதிகாரி. சி.பி.அய்.ஆல் புலனாய்வு செய்யப்பட்டு வரும் 2003_06 இடையேயான 4 போலி என்கவுன்டர், சோராபுதீன், பிரஜாபதி, இஷரத் ஜஹான், சாதிக் ஜமால் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர், தேசத்தின் பாதுகாப்பிற்காக தியாகம் செய்த அதிகாரிகளை ஷா கைவிட்டுவிட்டார் என்றும், முதலமைச்சரைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், போலீஸ் அதிகாரிகள் வெறும் களப் பணியாளர்கள்தான், அவர்கள் கொள்கை வகுப்பாளர்களான மோடி மற்றும் ஷாவின் உத்தரவுகளைச் செயல்படுத்துபவர்கள்தான் என்றும் கூறியுள்ளார்.