மாணவர்கள் டி-_சர்ட், ஜீன்ஸ் போடக் கூடாது; டிராக் சூட் எல்லாம் போட்டுக் கொண்டு கல்லூரி வரக்கூடாது. மாணவிகள் சேலை, சுடிதார் தவிர வேறு உடைகள் போடக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில்! இக்கட்டுப்பாடுகளெல்லாம் ஏற்கெனவே பொறியியல் கல்லூரிகளில் அதிகாரப்பூர்வமின்றி நடைமுறையில் இருக்கின்றனவாம்.
அடடே! என்ன இது? எதற்கு இந்தக் கட்டுப்பாடுகள்? கண்ணியம் காக்க! கல்லூரியின் மேன்மையைக் காக்க! பண்பாட்டைக் காக்க! இவையெல்லாவற்றையும் தாண்டி, நாடெங்கும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய உடைகளைப் பெண்கள் அணியக்கூடாது என்றெல்லாம் பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதன் இன்னொரு வடிவமாகத்தான் இந்தக் கட்டுப்பாடு!
பாலியல் வன்முறைக்கும் பெண்கள் அணியும் உடைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது குறித்து யோசித்தால், இரண்டுக்கும் தொடர்பேயில்லை என்பதுதான் தேசிய குற்றவியல் புள்ளிவிவரங்கள் மூலமாக நாம் பெறும் உண்மை. பாலியல் வன்முறைக் குற்றங்களில் மிக அதிகமான அளவு, கணவனால், குடும்ப உறுப்பினர்களால், நெருங்கிய உறவினர்களால், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களால், தெரிந்தவர்களால்தான் நடைபெறுகிறது என்று கூறுகின்றன புள்ளி விவரங்கள். அதுமட்டுமல்ல, நடக்கும் குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்கள் யாரென்றால், 2 வயதுக் குழந்தை முதல் 90 வயது பாட்டி வரை உண்டு. இவர்கள் அணிந்திருப்பது ஆபாசமான உடையா? அது ஆபாசமாகத் தெரிகிறது என்றால் குற்றம் யாரிடம் என்பதல்லவா கேள்வி!
ஆபாச உடை அணிந்ததால் எத்தனை பேர் பாலியல் வன்முறைக்குள்ளானார்கள் என்று எடுத்துப் பார்த்தால் இவர்கள் கூறும் வாதம் எவ்வளவு சொத்தையானது என்று தெரியும். உடனே கண்ணியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அதென்ன கண்ணியம்? கண்ணியம், ஒழுக்கம் என்றெல்லாம் சொல்லிவிட்டால் வாயைக் கட்டி விடலாம் அல்லவா? இவர்கள் சொல்லும் கண்ணியமான உடைகள் என்பவை என்ன? கல்லூரிக் கல்வித் துறையின் அறிவிப்பின் அடிப்படையில் சேலையும், சுடிதாரும் கண்ணியமானவை. (வாசல் வரை டிராக் சூட் போட்டு, பனியன் போட்டு வந்தாலும், வாசலுக்குள் நுழையும் முன் சட்டையும் பேண்ட்டும் போட்டுக் கொள்வார்கள் இளைஞர்கள். நடிகன் திரைப்படத்தில் வீட்டிலிருந்து வரும்போது இழுத்துப் போர்த்திக் கொண்டு கிளம்பும் நாயகி, கல்லூரியில் நுழையும்போது சேலையிலிருந்து வேறு உடைக்கு மாறுவதாக ஒரு காட்சி இருக்கும். அதுதான் நினைவுக்கு வருகிறது.)
சுடிதார் எவ்வளவு காலமாக கண்ணியமான உடை என்ற பட்டியலில் வந்தது? தொடக்கத்தில் சுடிதார் புழக்கத்துக்கு வந்தபோது, அது ஆபாசமாக இருக்கிறது என்று எதிர்த்தார்கள். தாவணி, சேலைதான் உடுத்தலாம். அதுதான் கண்ணியமானது என்றார்கள் இந்தக் கண்ணியவான்கள்!
இவர்கள் வாதப்படியே பார்த்தாலும், சேலையைப் போல வசதிக்குறைவான, உடலை வெளிக்காட்டுகிற வேறொரு உடை உண்டா? சுடிதார் என்பது வசதியானதும், எளிமையானதும், உடலைப் பெரிதும் மறைக்கக் கூடியதுமான உடையாகும். இது கண்ணியம் என்று கல்லூரிக் கல்வித்துறை சொல்கிறது. ஆனால் ஆசிரியைகள் சுடிதார் அணிந்துவரக் கூடாது என்று அறிவுறுத்துகிறது பள்ளிக் கல்வித்துறை. சுடிதார் அணிந்து வந்த ஆசிரியை திருப்பியனுப்பப்பட்டார்: சுடிதார், சல்வார் கமீஸ் அணிந்து பள்ளிக்கு வரக் கூடாது _ பள்ளிக் கல்வி அதிகாரி அறிவுரை என்று செய்திகள் வருகின்றன.
பயணம் செய்வதற்கும், பாடம் நடத்துவதற்கும் ஏற்ற உடையாக சுடிதார் இருப்பதாக, இளைய தலைமுறை ஆசிரியைகளே விளக்கம் சொன்னாலும் ஏற்க மறுக்கிறது பள்ளிக் கல்வித்துறை.
பள்ளியில் கண்ணியமில்லாத ஒன்று கல்லூரியில் கண்ணியமானதாக எப்படி மாறுகிறது என்பது நமக்குத் தெரியவில்லை.
சரி, இது ஒருபுறம் இருக்கட்டும். டி_ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து பையன்கள் வரக்கூடாது. ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாது என்கிறது அறிவிப்பு. ஜீன்ஸ் பேண்ட்_ல் என்ன கண்ணியக் குறைவு என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்கு என்ன விளக்கம் தருவார்களோ தெரியவில்லை.
மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு… விட்டால் பெத்தவங்களுக்கும் உடைக் கட்டுப்பாடு கொண்டு வருவாங்க போலவே! என்று உங்களுக்குச் சந்தேகம் தோன்றலாம். சந்தேகமே வேண்டாம். அதுவும் விரைவில் வர இருக்கிறதாம். இது குறித்து பள்ளிக் கல்வித்துறைக்குக் கருத்து இருப்பதாக ஆகஸ்ட் இறுதியில் செய்திகள் வந்துள்ளன. பள்ளிகளுக்குப் பிள்ளைகளை விடவும். அழைத்துச் செல்லவும் வரும் பெற்றோர் லுங்கி, நைட்டி அணிந்து வரவேண்டாம் என்று அறிவிப்பு சொல்லப் போகிறார்களாம். லுங்கி கவுரவமான உடையில்லை என்று சொல்கிறார்களா? உழைக்கும் மக்கள் உடுத்தும் உடை என்றால் அவ்வளவு இளக்காரமா?
லுங்கி அணிந்தவர் பிள்ளைகள் பள்ளியில் படிக்கக் கூடாதா? அல்லது அவர்கள் பள்ளிக்கு வரும்போது வாடகைக் கோட் வாங்கிப் போட்டுக் கொண்டுதான் வரவேண்டுமா? முழுக்கைச் சட்டையும் பேண்டும்தான் கல்லூரிகளில் போட்டுவர வேண்டும் என்றால் வேட்டி கண்ணியக்குறைவா?
பணக்கார மால்களிலும், காஸ்மோபாலிட்டன் கிளப்புகளிலும் லுங்கி, வேட்டி அணிந்து செல்லக்கூடாது என்று சொன்னபோது எழுந்த அதே உணர்வு இப்போதும் வரவேண்டாமா? வேட்டி அணிந்த முதல்வரும், நிதி அமைச்சரும் கூட இந்த அரங்குகளுக்குச் செல்லக் கூடாதா என்றொரு கேள்வி எழுந்ததே!
தன் இறுதிக் காலம் முழுக்க கைலி அணிந்துதான் அனைத்து மேடைகளிலும் பங்கேற்றார் தந்தை பெரியார். அரையாடை மனிதர்; எளிமையே வடிவானவர் என்று சொல்லிப் புகழப்படும் காந்தியாரெல்லாம் பள்ளிக்கூடம் இருக்கும் தெருப்பக்கம்கூட வரக்கூடாது போலிருக்கிறதே!
பள்ளிகள், கல்லூரிகள், மாணவ_மாணவியர் விடுதிகளில் முறையான பாதுகாப்பு வசதிகள், கல்வி வசதிகள் இல்லை. பெண்களுக்குக் கழிவறை இல்லை; அப்படியே இருந்தாலும், அதற்குப் பொது வெளியே பரவாயில்லை எனும் அளவுக்கு இருக்கிறது. இதையெல்லாம் குறித்துக் கவலைப்படாமல் அனாவசியமான விசயங்களில் எல்லாம் மூக்கை நுழைப்பது ஏன்?
உடை என்பது அவரவர் கால நிலை, இடம், தொழில் ஆகியவற்றைப் பொறுத்த வசதிக்குரியது. எம்.பி.ஏ. படிக்கும் மாணவிகளை பேண்ட், சர்ட், கோட் போட்டுக் கொண்டுதான் வரச் சொல்வார்கள். சில இடங்களில் முட்டி தொடும் மிடி போடுவார்கள். எனில் எம்.பி.ஏ.க்கு மட்டும்தான் அது கண்ணியமா? இதெல்லாம் எந்தக் கணக்குப் போட்டுக் கண்டுபிடிக்கிறார்களோ தெரியவில்லை.
இப்படி நாம் சொல்வதால் ஆபாசமான உடை அணிந்து கொண்டு செல்லுங்கள் என்பது பொருளல்ல. மாறிவரும் காலச்சூழலில் ஜீன்ஸ் அணியக்கூடாது என்று இளைஞர்களைச் சொல்வதும், சுடிதார் அணியக் கூடாது என்று ஆசிரியைகளைச் சொல்வதும் சரிதானா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கண்ணியம், நாகரிகம் போன்றவை குறித்த விவாதத்தைத் தொடங்கி, அது குறித்த பார்வையை அவர்களுக்கு உருவாக்கி அவர்களின் கருத்தையும் அறிந்து செயல்படுத்துதலே சரியானதாக இருக்க முடியும். அவசியமில்லாத கட்டுப்பாடுகளையெல்லாம் திணிப்பது, மாணவர்களது கவனத்தைத் திருப்புமே தவிர, அவர்களை உளைச்சலுக்கு உள்ளாக்குமே தவிர விடிவைத் தராது. பொருள் புரியாத, ஆபாச வாசகங்களைத் தாங்கிய உடைகளையெல்லாம் அணிந்து வருகிறார்கள் மாணவர்கள் என்றால், 18 வயது நிரம்பிய இருபால் இளைஞர்களிடம் அதுபற்றிய பார்வையைக் கூட உருவாக்க முடியாவிட்டால், அவர்கள் கல்வி கற்று என்ன பயன்? அதைக் கட்டுப்பாடு மூலம்தான் சாதிக்க முடியும் என்றால், கல்வி நிறுவனங்கள் என்ற சமூக அமைப்புகள் எதற்கு? பச்சைப் பிள்ளையைப் போல கிள்ளக் கூடாது கடிக்கக் கூடாது என்று கையில் குச்சியோடு திரிவதா?
தவிரவும், Moral Policing என்பது எவ்வகையிலும் வரவேற்கக் கூடியதா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அருவெறுக்கத்தக்க, ஆபாச உடைகளை யெல்லாம் (அவர்கள் சொல்வதுபோல்) அணிகிறார்கள் என்றால், அதற்கான சமூகச் காரணியை அறியாமல் வெறும் கட்டுப்பாடு என்பது பயன் தருமா?
பெண்ணுடலைப் போகப் பொருளாகக் காட்டத் தூண்டும், அதற்காக பெண்கள் தங்களைச் சிங்காரித்துக் கொள்ளத் தூண்டும் முதலாளித்துவ, ஆணாதிக்க விழைவுகளுக்குத் தாங்கள் பலியாவதா என்பது குறித்து இளைஞிகளிடம் பேசாவிட்டால் தீர்வு எப்படிக் கிடைக்கும்? அதுகுறித்த விவாதத்தை உருவாக்கியிருக்கிறோமா? குறைந்தபட்சம் இப்படியொரு பார்வை இருப்பதாவது தெரியுமா இருபால் இளைஞர்களுக்கும்!
இதையெல்லாம் விட்டுவிட்டு, மீண்டும் கலாச்சாரம், பண்பாடு, கண்ணியம் என்று பழமைவாதக் கருத்துகளுக்குப் புதிய பூண் போடுவதா? உடை அரசியல் குறித்த விவாதத்தை இளைஞர்களிடம் யார் முன்னெடுப்பது? தலைமுடி முதல் கால் நகம் வரை, அலங்காரப்படுத்திக் கொள்ளத் தூண்டும் விளம்பரங்கள் பற்றி நாம் பேச வேண்டாமா?
ஆண், பெண் வேறுபாடு உடையில் தெரியா வண்ணம் இருக்க வேண்டும் என்றார் பெரியார். உடையில் மட்டுமல்ல, சிகை உள்பட! பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கில் ஆண், பெண் அனைவருக்கும் சட்டை பேண்ட்தானே! ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லையே? உடைச் சமத்துவம் பற்றிப் பேசாமல், கலாச்சாரம், கண்ணியம், கட்டுப்பாடு என்றுதான் பேசப்படுமானால், நாளை உடும்பு மார்க் ஜட்டிகள் போட்டால்தான் கண்ணியம் என்று அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
Leave a Reply