தோழர்களே! எனது கிராமச் சீர்திருத்தத் திட்டம் என்பது என்னவென்றால், நாட்டில் கிராமங்களே எங்கும் இல்லாதபடி அவற்றை ஒழித்து விடுவதேயாகும். அது மாத்திரமல்லாமல், கிராமங்கள் (க்ஷிவீறீறீணீரீமீ) என்கின்ற வார்த்தைகள் அகராதியில்கூட இல்லாதபடி செய்துவிட வேண்டும். அரசியலிலும்கூட கிராமம் என்கின்ற வார்த்தைகள் இருக்கக்கூடாது என்றே சொல்லுவேன். கிராமம் என்கின்ற எண்ணத்தையும், பெயரையும், அதற்கு ஏற்ற பாகுபாட்டையும், பாகுபாட்டு முறையையும் வைத்துக் கொண்டு நீங்கள் என்னதான் கிராமச் சீர்திருத்தம் செய்தாலும் பறையன், சக்கிலி என்பவர்கள், எப்படி அரிஜனன் ஆனானோ அதுபோலவும், ஆதிதிராவிடன் ஆனானோ அதுபோலவும்
போன்ற மாற்றம்தான் ஏற்படுமே ஒழிய, பறையன் மற்ற மனிதர்களைப் போல மனிதனானான் என்கின்ற மாற்றம் எப்படி ஏற்படாதோ அதுபோல் கிராமச் சீர்திருத்தம் செய்யப்படுவதால் நல்ல கிராமம் ஆயிற்று என்றுதான் ஏற்படுமே ஒழிய மற்றபடியான நகரத்தன்மையும், நகர மக்கள் அனுபவிக்கும் உரிமையையும் அனுபவிக்க முடியவே முடியாது.
கிராமம் என்று ஒரு குப்பைக்காடு எதற்காக இருக்க வேண்டும்? ஆடு, மாடு, எருமை மேய்ப்பதும், அவைகளைக் காப்பாற்றி பால், தயிர், நெய், மோர் உற்பத்தி செய்வது கிராமத்தான்; அவ்வளவையும் அனுபவிப்பது நகரத்தான். இதற்கு என்ன ஆதாரம்? கிராமவாசி கிராமத்தில் இரவு 3 மணிக்கு எழுந்து மாட்டுக்குத் தண்ணீர் வைத்து, கொட்டத்தைக் கூட்டிச் சுத்தம் செய்துவிட்டு 4 மணிக்குப் பால் கறந்துவிட்டு கஞ்சிகாய்ச்சிக் குடித்துவிட்டு 5 மணிக்குப் புறப்பட்டு 3, 4, 5 மைல் நடந்து 6 மணிக்கு நகரத்துக்கு வந்து நகரத்து மக்களை அய்யா பாலு அம்மா பாலுக்காரி நான் என்று சொல்லிக் கதவைத் தட்டி எழுப்பி பால் ஊற்றிவிட்டுப் போகிறார்கள். தங்கள் பிள்ளை குட்டிகளுக்குப் பால், நெய் ருசியே தெரியாமல் செய்து விடுகிறார்கள். இதற்கு நகரத்தார் பணம் கொடுக்கிறார்கள் என்பது உண்மைதான். கிராமத்தான் கையில் கிடைத்த இந்தப் பணம்தான் என்ன ஆகிறது. போலீசுக்கு ஒரு பங்கு, முனிசிபல் சிப்பந்திகளுக்கு ஒரு பங்கு போனது போக கனமாக ஏதாவது மீதியிருந்தால் அது வக்கீலுக்கும் அதிகாரிகளுக்கும் போகிறது.
நல்ல பெரிய விவசாயி என்பவனும் கிராமத்தில் இருந்தால் இதுபோல்தான். கிராமத்தான் பாடுபட்டுப் பயிராக்கித் தானியமாக்கி நகரத்துக்-குக் கொண்டுவந்தால், நகர வியாபாரி கிராமத்தானின் பயிர்ச்செலவு _ முட்டுவலிக்குக்கூட பத்தும் பத்தாமல் கணக்குப் போட்டு விலைபேசி ஒன்றுக்கு ஒன்றேகாலாக ஏமாற்றி அளந்து வாங்கிக் கொண்டு மொத்தக் கிரையத்தைத் தரகு, மகிமை, சாமிக்காக, நோட்டு வட்டம், வாசக்காரிக்கு, கலாஸ்காரனுக்கு, வெத்திலை பாக்குச் செலவு என்றெல்லாம் பல செலவுகணக்குப் போட்டுப் பிடித்துக்கொண்டு மீதி ஏதோ கொஞ்சம் கொடுக்கிறான். பணத்தை மொத்தமாகக் கண்டறியாத கிராம விவசாயி தன் மீது கருணைவைத்து, கடவுள் இவ்வளவு ரூபாயை கைநிறையக் கொடுத்தார் என்று கருதிக்கொண்டு காப்பி சாப்பிட்டு சினிமாப் பார்த்து விட்டு ஊருக்குப் போகிறான். வியாபாரியோ இந்தச் சரக்கை வாங்கி, இருப்பு வைத்து அதிக விலைவரும்போது விற்று லாபமடைந்து லட்சாதிபதியாகி மாடமாளிகை கட்டிக்கொண்டு கிராமவாசியை வண்டி ஓட்டவும், மாடு மேய்க்கவும், வீட்டு வேலை செய்யவும், உடம்பு பிடிக்கவும் வேலைக்கமர்த்திக் கொள்ளுகிறான்.
சர்க்காருக்கும் கிராமவாசி என்றால், கசாப்புக் கடைக்குப் போகும் ஆடுகள் போலக் காணப்படுகிறார்கள்.
ஆகவே கிராமம் என்பது தீண்டப்படாத மக்கள் நிலையில்தான் இருந்துவருகிறது. கிராமத்தார் அல்லாத மற்றவர்களுக்கு உழைப்பதற்கு ஆகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த அடிப்படையை வைத்துக்கொண்டு கிராமத்தை எவ்வளவு சீர்திருத்தினாலும் கிராமம் சூத்திரன் _ தீண்டாத ஜாதியான் நிலையில்தான் இருக்கும்.
எனவே, சமுதாயத்தில் மக்கள் மனிதத்தன்மை பெறவேண்டுமானால் பிராமணன் என்ற ஒரு ஜாதியும், பறையன் என்ற ஒரு ஜாதியும் அடியோடு இல்லாமல் மனிதன் என்கின்ற ஜாதிதான் இருக்கவேண்டும் என்று எப்படிக் கருதுகிறோமோ அதுபோல் ஊர்களிலும், பட்டணம் நகரம் என்று சில ஊர்களும், கிராமம், குப்பைக்காடு என்றும் இல்லாமல் பொதுவாக ஊர்கள்தான் இருக்கவேண்டும் என்று ஆக்கப்படவேண்டும். – நூல்: கிராமச் சீர்திருத்தம்