வாஸ்து
வீடு காற்றோட்டமா இருக்கணும் சமையல் அறை வசதியா இருக்கிறமாதிரி புது வீட்ட நல்ல என்ஜினியர்கிட்ட சொல்லிக் கட்டுங்க என்றாள் மனைவி மங்களம்.
முதல்ல நான் சொல்றதக் கேளு, மனையடி வாஸ்து பாக்றவங்களைக் கூட்டிவந்து வாஸ்தை முடிவு பண்ணித்தான் வீட்டைக் கட்டணும் என்றார் கணவர் கோவிந்தன்.
வீடு நமக்குக் கட்றதுக்கு, சாஸ்திரக்காரனும் சம்பிரதாயக்காரனும் வந்து கட்டுற வீட்டில் குடியிருக்கப் போறதில்லை என வாதிட்டாள் மங்களம்.
உனக்கு ஒன்னும் தெரியாது. காசு செலவு செஞ்சு கட்டுறவன் நான். எனக்கு வாஸ்துதான் முக்கியம் என மங்களத்தின் வாயை அடைத்து, வீட்டு வேலையில் பல வாஸ்துக்களை முன்வைத்து துரிதமாக நடத்திக் கொண்டிருந்தார்.
ஏங்க சமையல் கட்டுல இந்த ஜன்னலை இந்தப் பக்கம் வச்சுக்கொடுங்களேன் எனக் கெஞ்சினாள் மங்களம்.
உனக்கு ஒன்னும் தெரியாது, வடக்கு வரக்கூடாது என மீண்டும் வாயை அடைத்தார்.
வீடு முடிந்து திருஷ்டிப் பூசணி, சங்கு, கற்றாழை, மாவிலை தோரணம், வீட்டின் முன்பாகத் தொங்கவிடப்பட்டு மாட்டின் சிறுநீரை வீடு முழுவதும் தெளித்து கணபதி ஹோமம் என அய்யருக்குப் பல ஆயிரங்களோடு புதுமனை புகு விழா முடிந்தது.
கூண்டுக்கிளியாக அடைப்பட்டுக் கிடந்த மங்களம் திடீர் என மாரடைப்பால் மரணமடைந்தாள்.
கோவிந்தனின் வாழ்வு தனிமைப்படுத்தப்பட்டுப் போனதை நினைத்து மனம் வருத்தத்துடன் புது வீட்டின் பின்புறத் தோட்டத்தில் அமர்ந்து மங்களம் வளர்த்துவிட்டுப்போன மரங்களைப் பெருமூச்சுவிட்டபடி பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்தக் கொய்யா மரத்தின் கிளைகளில் சிட்டுக்குருவிகள் சிங்காரமாய் கூடு கட்டி குஞ்சுகள் பொரித்து மகிழ்ச்சியோடு கீச் கீச்சென சிருங்காரமிட்டு கூடிக்குழவிக்கொண்டிருந்தன.
இந்தக் குருவிகள் எந்த வாஸ்தைப் பார்த்தன? இவ்வளவு மகிழ்ச்சியோடு இருக்கின்றன. சிந்திக்க ஆரம்பித்து மனம் கொதித்தவராய் சமையல் அறையில் மங்களம் மாற்றி வைக்கச் சொன்ன ஜன்னலை ஆவேசமாக இடித்துக் கொண்டிருந்தார் கோவிந்தன்.
– அணு கலைமகள்