தோழர்களே! இந்த எலக்ஷன் முறையின் காரணமாக, பதவிக்கு வருவதற்குத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்ற காரணத்திற்காக ஓட்டுப் பெற்று, அதனால் பலனை உண்டாக்குவதைவிட இந்த ஓட்டுக் காரணமாக எவ்வளவு நல்ல வேட்பாளனையும் அயோக்கியனாக்கி விடுகிறார்கள். எவ்வளவு யோக்கியர்களா இருந்தாலும் வேட்பாளர்கள் ஒழுக்கத்தோடு இல்லை. நான் சீமையில் தேர்தல் நடந்ததைப் பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். முன்பெல்லாம் ஓட்டு இங்கு இருந்தது வெள்ளைக்காரன் காலத்திலே.
ஆனால் ஒரு அளவுக்குத் தகுதிபார்த்துக் கொடுப்பான். அபேட்சகர்களும் தகுதியுள்ளவர்களாகவே நிற்பார்கள். அப்ப பணம் கொடுக்காமல் தேர்தல். நாணயம், ஒழுக்கம் கெடாமல் காரியம் நடக்கும். அப்படித்தான் இருந்தது. அவன் போன பிறகு எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கணும்ன்னு ஆரம்பிச்ச பிறகு வேட்பாளர்களான இரண்டு பேர் நிற்பதில் போட்டி ஏற்பட்டு நாணயம் இல்லாமல் போய் விடுகிறது. காரணம் என்னா? கொள்கையில்கூட அவர்களுக்கு இலட்சியம் இல்லை. தேர்தலில் நின்றுவிட்டால் சரி, எப்படியாவது ஜெயிக்கணும். அதுக்கு எந்தவிதமான பித்தலாட்டமான ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்யணும். எவ்வளவு யோக்கியமான ஓட்டராக இருந்தாலும் அவன் எந்த அளவிற்கு நாணயமாயிருந்தாலும் அவனை நாணய மற்றவர்களாக ஆக்கி எந்த விதத்திலாவது ஓட்டு வாங்கணும். இதுதான் ஓட்டுரிமையிலே ஏற்படுகிற பலன்.
* * *
10 ஆயிரம் 20 ஆயிரம் செலவு பண்ணி எலெக்ஷனில் ஜெயிக்கணும்ன்னா, உண்மையான ஜனநாயகத்திலே 100க்கு 95 பேருக்கு வசதி வாய்ப்பு இருக்குமா? எத்தனை பேரு நம்ம ஜனங்களிலே இலட்ச ரூபாய் செலவு பண்ணி எலக்ஷனிலே ஈடுபட வாய்ப்போடு இருக்கிறாங்க? எந்தக் கட்சிக்காரனும் அபேட்சகரை எதிர்த்து நிற்கும் ஆளு ஓட்டுக்கு வந்தாலும், அவனிடம் ஓட்டர்கள் ரூ 5 கொடுக்கறீயா, 10 ரூபாய் கொடுக்கறீயான்னு கேட்கலாம். இது ஒன்னும் ரகசியமில்லே. நம்ம நாடு பூராவும் தெரிந்திருக்கிற ரகசியம் இது. இதைப் பற்றி யாருக்கும் கவலையில்லையே. இலட்சியம் பண்றதில்லையே? எல்லாக் கட்சிக்காரர்களும் காந்தியார் காலம் தொட்டு மக்களுக்கு ஓட்டுக் கொடுத்து வருகிறாங்க. ஓட்டுக்குப் பணம் கொடுத்து அவர்களை ஏச்சி, எப்படியாவது பதவிக்கு வரணும் அது தான் அபேட்சகர்களின் நோக்கம். இப்படிப் பணம் கொடுத்துப் பதவிக்கு வந்த பிறகு அதுதான் ஜனநாயகம்ன்னு பேசுறாங்க.
நான் இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நான் ஒரு சமுதாயச் சீர்த்திருத்தக்காரன் என்பதனாலே இதைச் சொல்லுகிறேன். நான் அரசியலில் இருந்தால் கூட இந்த அயோக்கியத்தனமான காரியங்களை எல்லாம் நானும் பண்ணித்தான் ஆகணும். காந்தி அரசியலில் நின்னாலும் பணம் கொடுத்துத்தான் ஆகணும், ஜவஹர்லால் நேரு எலெக்ஷனில் நின்னாலும் அவரும் பணம் கொடுத்துத்தான் ஆகணும். நம்ம காமராசர் எலெக்ஷனில் நிற்கணும்ன்னு சொன்னாலும் அவரும் இலட்ச ரூபாய் செலவு பண்ணித்தான் ஆகணும், அப்புறம் மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேணுமா? இப்படி எல்லாம் எலெக்ஷனில் ஜெயிச்சி வரணும்ன்னா இது என்னா ஜனநாயகம்? வெங்காய ஜனநாயகம் (சிரிப்பு கைத்தட்டல்) பணத்தினாலே ஜெயிக்கலாம், பித்தலாட்டத்திலே ஜெயிக்கலாம். மக்களை ஏய்க்கிறதினாலேயும் ஜெயிக்கலாம். (சிரிப்பு) அப்படி ஜெயிச்சி வந்ததுக்கு அப்புறம், அதை ஜனநாயகம் என்கிறான். ஜனநாயகத்தில் ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்கிறான்.
ஏன் இதையெல்லாம் சொல்றேன்னா? பணம் கொடுக்கிறதாலே நாணயம் கெட்டுப் போகுது ஒழுக்கம் கெட்டுப்போவுது. இந்த முறையிலே நல்லவன் _ யோக்கியன் வரமுடியாமல் போயிடுது. நல்ல மனுஷன் வருவதுக்கு வாய்ப்பும் இல்லாமல் போயிடுது இந்த மாதிரியான தேர்தல் முறையினாலே. ஆனதினாலே இந்த மாதிரியான, ஒழுக்கக்கேடான, நாணயக்கேடான, ஜனநாயகத்தை ஒழிக்கத்தான் நான் பாடுபடுகிறேன். (கைத்தட்டல்) இது மாறணும் விரைவிலே. (கைத்தட்டல்) சுத்த காலிப்பசங்களைக் கொண்டுவந்து விட்டுடுறாங்க, மகா அயோக்கியத்தனங்களைச் செய்யப் பயப்படாமே துணிஞ்சி தேர்தலில் வந்திடுறாங்க. பணத்துக்குத்தான் ஓட்டுத் தந்தாங்கன்னு அவனுக பதவிக்கு வந்த உடனே பொறுக்கித் திங்க ஆரம்பிக்கிறாங்க. இந்த மாதிரி நிலை நீடிக்கிறதினாலே நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கு _ கஷ்டப்படுகிற மக்களுக்கு எந்த விதமான பலனும் இல்லை.