நாட்டு மக்களின் பொது நலத்துக்கும், ஏழை மக்களின் வாழ்க்கை உயர்விற்கும், பொருளாதார நிலையை விருத்தி செய்து அது எல்லா மக்களுக்கும் ஓர் அளவுக்காவது சமமாய் பரவப்படும்படியாயும், ஒரே கையில் ஏராளமாய் குவியாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியமானதும், அவசியமானதுமான காரியமாகும். ஆதலால், அந்த அளவுக்குப் பயன் ஏற்படும்படிச் செய்ய வியாபாரம், லேவாதேவி, விவசாயம் முதலிய துறைகளில் சில மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என்பது யாவரும் ஒப்புக்கொள்ளத் தக்கதாகும்.
அப்படிச் செய்வதிலும் பலாத்காரம் செய்வதோ, திடீரென்று தலைகீழ் புரட்சியான காரியங்களால் மனித சமூகத்தில் பயமும், அதிருப்தியும், சமாதான பங்கமும் ஏற்படும்படிச் செய்து சட்டம், சமாதானம் சீர்குலையும்படிச் செய்வதோ ஆகிய காரியங்கள் இல்லாமல் பொதுஜன உபயோககரமான தொழிற்சாலைகள், வியாபாரங்கள், லேவாதேவி முதலான காரியங்களை அரசாங்க நிர்வாகத்திற்குள்ளாகவே கொண்டு வரும்படிச் செய்வதும் அரசாங்க நேர்பார்வை நிர்வாகத்திற்குட்பட்ட கூட்டுறவு முறையின் கீழ் அவை நடைபெறும்படிச் செய்து லாப நஷ்டங்கள் எல்லா மக்களுக்கும் சமமாய் இருக்கும்படிச் செய்வது முதலான சமதர்மக் கொள்கையே இயக்கத்தின் பொருளாதாரத் தத்துவமாகும்.
– குடிஅரசு அறிக்கை, 10.03.1935,