விவசாய உற்பத்தி பெருக என்ன செய்ய வேண்டும்?

செப்டம்பர் 16-30

உண்மையில் கிராமங்களைச் சீர்திருத்த வேண்டுமானால் நான் சொல்லப்போகும் முக்கியமான காரியங்களைச் செய்ய வேண்டும். விவசாயம் உடலுழைப்பில் நடைபெறுவதை மாற்றி அதை ஒரு தொழில் முறையாக, அதுவும் இயந்திரத் தொழில் முறையாக (இன்டஸ்ட்ரியல் ஆக) ஆக்கப்பட வேண்டும்.

 

உழுவதும், விதைப்பதும், அறுப்பதும் இயந்திரத்தால் செய்யப்பட வேண்டும். கிணறு வெட்டுவதும் தண்ணீர் இறைப்பதும் _ பாய்ச்சுவதும் இயந்திரத்தால் செய்யப்பட வேண்டும்.

அந்த அளவுக்குப் பூமிகளைத் திருத்தி இணைக்க வேண்டும். அதற்குப் பயன்படாத பூமியைத் தனிப்படுத்தி அடிக்கடி பாடுபட வேண்டிய அவசியம் இல்லாத பயிர் செய்ய வேண்டும்.

விளைபொருளால் ஆக்கப்படும் பண்டங்கள் ஆங்காங்கே விவசாயிகள் கூட்டுறவு முறையில் ஆக்கப்பட்டு அந்தப் பயன் விவசாயிகளுக்கே கிடைக்க வேண்டும். பல கிராமங்களை ஒன்றாக இணைத்து ஒரு சிறு நகரமாக ஆக்கி அதில் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, பார்க்கு, சினிமா, டிராமா, தமாஷ் அறை, வாசகசாலை, புத்தகசாலை, ரேடியோ நிலையம், நல்ல ரோடு, கால அளவுப்படி போக்குவரத்துள்ள பஸ் ஸ்டேஷன், போலீஸ் ஸ்டேஷன், நன்றாய் படித்த ஒரு நீதிபதி, சகல சாமான்களும் கிடைக்கத்தக்க கடைகள் ஏற்படுத்த வேண்டும்.

இயங்கும்படியான சுற்றுப்பயணக் கண்காட்சி சாலைகள் அடிக்கடி பற்பல விதத்தில் அமைத்து ஊர்கள்தோறும் சுற்றிச்சுற்றி வரும்படியாகவும் ஆன காரியங்கள் செய்ய வேண்டும்.

ஆங்காங்கு அப்பீல் கோர்ட்டுகள், குறைதெரியும் அதிகாரிகள் சுற்றுப்பிரயாணம் செய்து ஆங்காங்கு வாராவாரம் காம்ப் போடவும் ஆன ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சென்னை 10 லட்சம் ஜனத்தொகை கொண்ட நகரம். கோவை ஒரு லட்சம் ஜனத்தொகை கொண்ட நகரம். ஈரோடு 50,000 ஜனத்தொகை கொண்ட நகரம். இதுபோலவே இப்போது கிராமமாகப் பாவிக்கப்படும் ஈரோட்டிற்குப் பக்கத்தில் உள்ள கொல்லம்பாளையம், மூலப்பாளையம், சூரம்பட்டி மேட்டுவலசு என்கின்றவை போன்ற பக்கப் பக்கக் கிராமங்கள் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு ஏதோ ஒரு பெயர் கொண்ட சர்க்கிள் ஆக்கி 2500 அல்லது 5000 ஜனத்தொகை கொண்ட நகரமாக ஆக்கிவிட்டு அதை நகரத்தார்கள், தரகர்கள் சுரண்ட முடியாமல் செய்ய வேண்டும்.

நகரத்தார்களுக்காகத்தான் அவர்கள் வாழ்கிறார்கள்; வாழவேண்டும் என்று சொல்லப்படுவதை அடியோடு மாற்ற வேண்டும்.

அதோடு கூடவே அந்த இடங்களில் அவற்றிற்குத் தக்கபடி இயந்திரத்தால் செய்யப்படும் சிறுசிறு தொழிற்சாலைகளை நிறுவி அவர்கள் வேறு ஊருக்குப் பிழைப்புக்குப் போகாதபடி பிழைப்பு ஏற்படுத்த வேண்டும். கிராமத்தான், பட்டிக்காட்டான், குப்பைக்காட்டான் என்கின்ற பெயர்கள் ஒரு மனிதனுக்கு ஏன் இருக்க வேண்டும்? அதுவும் பாடுபட்டு உழைக்கும் மனிதனுக்கு ஏன் இருக்க வேண்டும்?

ஆதலால், அப்பெயர்கள் இல்லாமல் செய்யப்பட்டுவிடவேண்டும்.

மேல்நாடுகளில் பெரும்பான்மையான கிராமங்கள் நான் விரும்புகிறபடிதான் இருக்கின்றன.

அதாவது, தார்போட்டுக் குழாய், தண்ணீர், எலக்டிரிக் பவர், பஸ் சர்வீஸ், பள்ளிக்கூடம், விளையாட்டு மண்டபம், சமநீதி, தொழிற்சாலை ஆகியவை இல்லாத இடங்கள் (கிராமங்கள்) மேல் நாடுகளில் காண்பது மிகமிக அதிசயமாகும். ரஷ்யாவில் மாத்திரம் சில இடங்கள் கிராமங்கள் போல் காணப்படுகின்றன. அதுவும் இதற்குள் நகரமாகி இருக்கும். மற்றபடி அய்ரோப்பாவில் கிராமங்கள் என்ற நிலை இல்லவே இல்லை. இருந்தபோதிலும், அது அந்த இடத்திற்கு ஏற்ற வாழ்வாய் இருக்கலாமே தவிர பிராமணனுக்குத் தொண்டு செய்வதற்கே கடவுள் சூத்திரர்களை _ பஞ்சமர்களைப் படைத்தார் என்பது போல் நகரத்தார் நல்வாழ்வு வாழ்வதற்கே கிராமங்கள் ஏற்பட்டன என்கின்ற முறையில் கிராமங்கள் அங்கு இல்லை. அங்கு ஏதாவது ஒன்றிரண்டு இருந்தபோதிலும் இங்கு இருக்கக்கூடாது என்று சொல்லுவேன்.

அப்படியானால், விவசாயம் யார் செய்வது? யார் பூமியைப் பயிர் செய்வது என்று கேட்கப்படலாம். இது, கச்கூசு எடுக்கும் சக்கிலி, பறையர், ஒட்டர் என்பவர்களுக்குப் படிப்புக் கொடுத்து மேன்மக்களாக ஆக்கி விட்டால் கக்கூசு எடுப்பவர்கள் யார் என்று கேட்பது போல் கேட்கப்படுவதாகும். அதற்கு என் பதில் அந்தத் தொழில்களை நாம் எல்லோரும் (எல்லா இடத்தில் உள்ளவர்களும்) விகிதாச்சாரம் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

***

கீழான தொழில், ஈனமான தொழில், கஷ்டமான தொழில், சரீர உழைப்பு அதிகமாகவும், பயன்மிக்க அற்பமாகவும் குறையாகவும், வாழ்வில் இழிவாகவும் இருக்கும்படியான தொழில் முறைகளை நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும். அதுதான் நாட்டு முன்னேற்றமாகும்.

கப்பல் கட்டி எவனோ ஒருவன் கோடீஸ்வரனாவது முன்னேற்றமாகாது. எங்கேயோ ஒரு இரும்புத் தொழிற்சாலை வைத்து யாரோ கோடீஸ்வரன் ஆனால் நாட்டுக்கு முன்னேற்றமாகிவிடாது.

நான் கூறுகிற முன்னேற்றம் செய்ய முடியவில்லையானால், அதற்கு அதாவது அப்படிப்பட்ட இழிவான, கீழான பிரயாசையான வேலை செய்பவர்களுக்கு அதிக லாபமும், சலுகையும், மேன்மையும் இருக்கும்படியான பிரதிபலன் அடையச் செய்ய வேண்டும். இரசாயன முறை, விஞ்ஞான முறை, யந்திர முறை முதலியவைகளைக் கையாண்டு அவைகளை கிராமங்கள் என்பவைகளில் இருந்து தொடங்குவோமானால் இந்தப் பிரச்சினைகள் சுலபத்தில் தீர்ந்துவிடும். கிராமம் என்கின்ற பெயரும் நிலையும் தானாக மாறிவிடும்.

இதைப் பொதுவுடைமை என்றோ சமதர்மம் என்றோ முட்டாள்தனமாய் கருதாமல் முற்போக்கு என்ற முறையில் சிந்தித்தால்தான் இதில் உள்ள நியாயமும் உண்மையும் விளங்கும்.

தொழிலாளிகளும் கிராமவாசிகளும் முன்னைவிட இப்போது சிறிது பணம் அதிகம் சம்பாதிப்பதைக் கொண்டு திருப்தி அடையக்கூடாது.

தொழிலாளிக்கும் முதலாளிக்கும் முன் இருந்த வித்தியாசமும், கிராமத்தானுக்கும், பட்டணத்தானுக்கும் முன் இருந்த வித்தியாசமும் பணப்பெருக்கினால் முன்னைவிட அதிகமாகிவிட்டதே தவிர குறையவில்லை.

அந்த வித்தியாசமானது முன்னைவிட அதிகமான பேதத்தையும், இழிவையும், மனக்குறையையும் உண்டாக்கி மிக்க கீழ்மகனாக ஆக்கிவிட்டது.

பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடமாகும்.

– நூல்: கிராமச் சீர்திருத்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *