– கி.வீரமணி
(எழுத்தாளர் சோலை எழுதிய வீரமணி ஒரு விமர்சனம் நூலிலிருந்து அவசரநிலை பிரகடனம் குறித்த செய்திகள் தொடர்கின்றன)
கைது செய்யப்பட்ட தி.மு. கழகத் தோழர்களும் ஒவ்வொருவராகக் கொண்டு வரப்பட்டனர். ஆமாம், வீரமணியையும் அவர்களையும் எதற்காகக் கைது செய்தனர்? அந்த நிமிடம்வரை காரணம் சொல்லப்படவில்லை. ஏதோ திகில் படம் பார்க்கும் மனநிலையில்தான் எல்லோருமே இருந்தனர்.
முதல் நாள் மாலைவரை ஆளும் கட்சியினர் என்ற முறையில் தி.மு. கழகத்தினரின் கூப்பிட்ட குரலுக்குக் காத்திருந்த காவல்துறை அதிகாரிகள், இன்றைக்கு அதே கழகத்தினரைச் சுட்டெரிக்கும் கண்களால் பார்த்தனர்.
நிலைமை தெரியாது காப்பி கிடைக்குமா? டீ கிடைக்குமா? என்று தி.மு. கழகத் தோழர்களும் கேட்டு வைத்தனர்.
இன்னும் சிறிது நேரத்தில் கீழ்வானம் சிவந்துவிடும். பொழுது புலர்ந்துவிடும். நடிகவேள் எம்.ஆர். ராதாவைக் கைது செய்து அழைத்து வந்தனர். எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கில் சிறை சென்ற அவர் தண்டனைக் காலம் முடிந்து சில மாதங்களுக்கு முன்னர்தான் விடுதலையாகி இருந்தார். தம்மை ஏன் கைது செய்தனர் என்று அவருக்கும் புரியவில்லை. ஆனால், அவரைப் பார்த்ததும் அனைவரின் மன இறுக்கமும் தளர்ந்தது.
ராதா அவர்கள் ஆணையர் அலுவலகத்தை நோட்டம் விட்டார். சுவர்களில் மாட்டப்பட்டிருந்த ஆணையர்களின் படங்களைப் பார்த்தார்.
ஏம்பா, வீரமணி இவங்களெல்லாம் யாரு? சுவர்களில் இருந்த படங்களைப் பார்த்துக் கேட்டார்.
இவர், அய்.ஜி. அருள் என்றார் வீரமணி.
அடுத்து தொங்குகிறாரே அவரு யாரு?
அவர் அய்.ஜி. ராஜரத்தினம். ஏற்கெனவே பணி செய்தவர்கள் என்றார் வீரமணி.
அந்த வரிசையில் திருவள்ளுவர் படமும் இருந்தது.
ஏம்பா வீரமணி, நம்ம திருவள்ளுவர் எப்போ அய்.ஜி.யாக இருந்தார்? என்று ராதா கேட்டார்.
அவ்வளவுதான், கனத்த மனச்சுமையுடன் இருந்த அனைவருமே வாய்விட்டுச் சிரித்துவிட்டனர்.
சொல்ல மறந்துவிட்டோம். நள்ளிரவில் வாங்கிய சுதந்திரம் என்ற நூலைப் படிப்பதற்கு முன்னரே அன்றைய நள்ளிரவில் வீரமணியின் சுதந்திரம் பறிபோய்விட்டது.
அமர்ந்த நிலையிலேயே பலர் கண் அயர்ந்தனர். மேஜைமீது சிலர் முடக்கிப் படுத்தனர். கைது செய்யப்பட்டவர்கள் காலைப் பொழுதிலும் கொண்டு வரப்பட்டனர். காலைக்கடன் முடிந்ததும், மதியம் அனைவரும் சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சரித்திரத்தில் கறைபடிந்த ஒரு அத்தியாயம் இணைக்கப்பட்டது.
சென்னை மத்திய சிறைச்சாலையின் கதவுகள் திறந்தன. வீரமணியும், ஏனையோரும் உள்ளே நுழைந்தனர். க்யூ வரிசையில் நிற்கச் சொன்னார்கள். அவர்கள் கொண்டு சென்ற உடைமைகளை வாங்கிக்கொண்டனர். அனைத்தும் ஜெயிலர் அறையில் அடைக்கலம் புகுந்தன.
அனைவரின் அங்க அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டன. அதன்பின்னர் ஜெயிலர் கயூம், வார்டர்கள் மகாலிங்கம், செந்தூர்பாண்டியன் ஆகியோர் வந்தனர். அதிகாரத் தோரணையை அவர்களுடைய பூட்ஸ் கால்களின் ஒலியே உணர்த்தியது. அவர்களுடைய கொள்ளிக் கண்கள் வீரமணியைக் கூர்ந்து பார்த்தன. நாராச நடையில் அர்ச்சனைகள் நடந்தன. காணிக்கை வார்டர்கள் என்ற ஆயுள் கைதிகளும், அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். அவர்கள் கற்கால மனிதர்களாகவே காட்சி அளித்தனர். அன்றைய கற்கால மனிதனின் கைகளில் கூர்மையான கற்கள் இருந்தன. இவர்களுடைய கைகளில் குண்டாந்தடிகள் இருந்தன. வேறுபாடு அவ்வளவுதான். ஆனால், வார்டர்களாக வடிவெடுத்த காவலர்கள் கற்கால மனிதர்களைவிடக் காட்டு மிராண்டித்தனமாக நடந்துகொண்டனர்.
வீரமணிக்கு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பி. ஆசைத்தம்பி நின்று கொண்டிருந்தார். அவர் மக்கள் பிரதிநிதி என்பதுகூட அந்த வார்டர்களுக்கு மறந்து போய்விட்டது. அவருடைய சட்டைப் பையில் சிகரெட் பாக்கெட் வைத்திருந்தார். அதுதான் குற்றம்.
உனக்கு அறிவு இருக்கிறதா? ஏற்கெனவே ஜெயிலுக்கு வந்தவன்தானே! ரூல்ஸ் தெரியாதா? என்று ஜெயிலர் கத்தினான். மிசாவின் கொடுமை எப்படி இருக்கும் என்பதனை அப்போதே தம்மால் உணர முடிந்தது என்கிறார் வீரமணி.
சென்னை மத்திய சிறையின் கடைசிப் பகுதி 9 ஆம் நம்பர் பிளாக். அதில் ஒரு அறையில் வீரமணி அடைக்கப்பட்டார். 8 அடிக் கொட்டியில் எட்டுப் பேர் வீதம் அடைக்கப்பட்டனர். ஏறத்தாழ 120 பேர் அந்த பிளாக்கில் இருந்தனர். அந்த பிளாக்கில் முன்னர் தொழுநோயாளிகள் அடைக்கப்பட்டிருந்தனர் என்பதற்கு அறைகளில் நிரம்ப அடையாளங்கள் இருந்தன.
திராவிடர் கழக மாணவர் மாநாட்டைத் திறந்து வைத்தவர் இளம் வழக்குரைஞர் சத்தியேந்திரன். மாவட்ட நீதிபதியாக இருந்த சத்தியேந்திரனின் புதல்வர். அவரும் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார். அவர்களுடைய குடும்பமே சிவகங்கையில் அய்யாவை வழிகாட்டியாகக் கொண்ட கொள்கைக் குடும்பம். வீரமணியோடு இளம் வழக்குரைஞர் சத்தியேந்திரனும் கைது செய்யப்பட்டு சிறைக்கு வந்திருந்தார்.
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் எஸ்.பி. தட்சிணாமூர்த்தி, தென்னார்க்காடு மாவட்டத் தலைவர் முதியவர் பண்ருட்டி நடேசன், வில்லிவாக்கம் அ. குணசீலன், ராயபுரம் மு.போ. வீரன், புவனகிரி சச்சிதானந்தம் ஆகிய அய்யாவின் தொண்டர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். மாநிலம் முழுதும் கைது செய்யப்பட்ட தொண்டர்கள் ஆங்காங்கே மாவட்ட மத்திய சிறைகளில் அடைபட்டிருந்தனர்.
வீரமணி கொண்டு சென்ற பெட்டி, படுக்கைகளை இரண்டு வாரகாலமாக அவருக்குத் தரவில்லை. பதினைந்து நாள்களும் ஒரே உடைகளைத்தான் அணிந்திருந்தார். வேறு வழியின்றி கொட்டடி திறக்கப்படும்போது பனியன், ஜட்டியை மட்டும் கசக்கிப் பிழிந்து காய வைத்து அணிந்துகொண்டார்.
தமது வாழ்நாளில் இதுபோன்று அழுக்கைச் சுமந்த அனுபவம் இதற்குமுன்னர் ஏற்பட்டதே இல்லை என்கிறார் வீரமணி.
அன்று நள்ளிரவு சிறையில் மயான அமைதி. ஒன்பதாம் பிளாக்கை நோக்கி வார்டர்கள் வருகிற காலடி ஓசை கேட்டது.
கீரிச்…
பிளாக்கின் கதவு திறக்கப்பட்டது. அந்த பிளாக் முழுக்க மின்சார விளக்குகள் இல்லை. ஒரே ஒரு மின் விளக்கு மட்டும் அழுது கொண்டிருந்தது.
தலைவாசலைத் திறக்க வார்டர்கள் உள்ளே வந்தனர். வீரமணியிருந்த கொட்டடியின் கதவுகள் திறக்கப்பட்டன. அப்போது அவர் அரைகுறைத் தூக்கத்தில் இருந்தார்.
உள்ளே போ! ஒரு வார்டனின் மிரட்டல்.
ஒரு இளைஞர் உள்ளே அடியெடுத்து வைத்தார். தட்டுத்தடுமாறி திகைத்து நின்றார். கொட்டடியின் கதவு பூட்டப்பட்டது.
உள்ளே வந்த இளைஞர் வீரமணியின் கால்களை உராய்ந்துவிட்டார். ஏன் வீரமணிமீதே விழுந்துவிட்டார். உடம்பெல்லாம் அடி.
யாரது? வீரமணி கேட்டார்.
ஸ்டாலின் என்று பதில் வந்தது. அலறி அடித்துக்கொண்டு எழுந்தார் வீரமணி. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை அப்படியே கட்டித் தழுவிக்கொண்டார். திராவிட இயக்கத்தின் வாரிசு, அரசியல் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற வந்திருந்தது என்றார் வீரமணி.
அந்த அறையிலிருந்த அனைவரும் விழித்துக் கொண்டனர். வெளியே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதனை ஸ்டாலின் மூலம் அறிய அனைவருக்கும் ஆவல். ஆனால், வீரமணியும், ஏனையோரும் எந்தச் சிறையில் இருக்கிறார்கள் என்பது வெளி உலகிற்குத் தெரியாது. பட்டப் பகலிலேயே தமிழகம் தடுமாறிக் கொண்டிருந்தது.
அச்சம் தவிர் என்பது முதல் பாடம்; அந்தப் பாடத்தில் ஸ்டாலின் தேறிவிட்டார்.
வீரமணிக்குப் படுக்கையும் இல்லை; தலையணையும் இல்லை. பகலில்கூட அவர் அறைக்குள்ளே பூட்டப்பட்டிருந்தார். உணவுவேளையின்போது மட்டும் கொட்டடிக் கதவு சிறிது நேரம் திறந்திருக்கும். அங்கே ஆயுள் கைதிகளைக் கண்காணிக்க வார்டர்கள் காத்திருப்பர். அவர்கள் வீரமணியை மட்டுமல்ல, அனைவரையுமே ஒருமையில்தான் பேசுவார்கள். சிறை அதிகாரிகள் அவர்களுக்கு அப்படிப் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.
யூதர்களைப் படுகொலை செய்ய சித்திரவதை முகாம்களை _ முள்வேலி முகாம்களை இட்லர் உருவாக்கியிருந்தான். மனிதநேயம் மரித்துப்போன அந்த முகாம்களில்கூட இந்த அளவிற்குச் சித்திரவதைகள் நடந்திருக்காது என்கிறார் வீரமணி.
ஒரு மாத காலம்வரை வீரமணி பகலிலேயே இருளில்தான் இருந்தார். சிறைக் கொட்டடியின் இருளைச் சொல்லவில்லை. சிறைச் சுவர்களுக்கு வெளியே என்ன நடைபெறுகிறது என்பது எதுவுமே அவருக்குத் தெரியாது. படிக்கப் பத்திரிகைகள் கொடுக்கப்படவில்லை. வானொலிச் செய்தியைக் கேட்க முடியாது. அவரைச் சந்திக்க உறவினர்கள் அனுமதிக்கப்படவில்லை. வீரமணி எந்தச் சிறையில் இருக்கிறார் என்ற செய்திகூட அவர்களுக்குத் தெரியாது. கொடுமையே அறமாகக் கூத்தாடிக் கொண்டிருந்தது.
பிப்ரவரி 2 ஆம் தேதி இரவு ஒன்பது மணி. ஒன்பதாம் நம்பர் பிளாக்கின் கொட்டடிகள் ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டன. மாலையில், கணக்குப் பார்த்துக் கைதிகளை அறைகளில் பூட்டி விட்டால், பின்னர் விடிந்த பிறகே கதவுகளைத் திறக்கவேண்டும். இது விதி. இதற்கு மாறாக அறைக் கதவுகள் திறக்கப்பட்டன. ஒவ்வொரு அறையிலிருந்தும் அலறல் சத்தம் கேட்டது.
நெஞ்சுவலியுள்ளவர்களையோ, நோயாளிகளையோ எக்காரணம் கொண்டும் அடிக்கக் கூடாது என்பது சிறைச் சட்டம். ஆனால், அந்தச் சட்டத்தை எரித்துவிட்டு சிறை அதிகாரிகள் சர்வாதிகாரத்தின் விளையாட்டுப் பிள்ளைகளாக கோரத்தாண்டவம் ஆடினர்.
உங்கள் அறையைச் சோதனையிடப் போகிறோம். ஒவ்வொருவராக வெளியே வாருங்கள் என்று ஆயுள் கைதி வார்டர்கள் கத்தினர். பயந்துகொண்டே வந்த ஒவ்வொருவரும் மயங்கி விழும்வரை தாக்கப்பட்டனர். கை, கால்கள் முறிந்தன; ரத்தம் சிந்தினர்.
அன்றைக்கு ஸ்டாலின் வேறு ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்தார். நீதான் இன்னார் மகனா? என்று கேட்டுக்கொண்டே அவரையும் அடித்தனர். அவர் ஆவேசத்தை அடக்கிக் கொண்டார். இன்றைக்கும் அவரது தேகத்தில் சிறை தந்த தியாகத் தழும்புகளைக் காணலாம்.
கடைசியாக வீரமணி இருந்த அறை திறக்கப்பட்டது. கொலைகார ஆயுள் கைதிகளைக் கண்காணிக்கும் வார்டர்களின் காட்டுக் கூச்சல்.
(ஒவ்வொருவராக வெளியே வாங்கடா).
வீரமணி வந்தார். இரும்புப்பூண் போட்ட தடிகள் வார்டர்களின் கரங்களில் சுழன்று கொண்டிருந்தன. சரமாரியாக அடி விழுந்தது. அவர்களுடைய கைகள் ஓயும் மட்டும் உடம்பின் எல்லா அவயவங்களையும் பதம் பார்த்தனர். மன உறுதியோடு வீரமணி அந்தச் சித்திரவதைகளை ஏற்றுக்கொண்டார்.
உள்ளே போடா.
வீரமணி நடக்க முடியாது கொட்டடிக்குள் சென்றார். அடுத்து விடுதலை நிருவாகி சம்பந்தம் அழைக்கப்பட்டார். அவர் நடுங்கிக் கொண்டே கொட்டடியை விட்டு வெளியே வந்தார். கோரப் பசியெடுத்த குண்டாந்தடிகள் விளையாடின.
வீரமணி ஓடி வந்தார். அய்யா, அவரை அடிக்காதீர்கள். அண்மையில்தான் அவருக்கு முதுகுத் தண்டுவட ஆபரேஷன் நடந்தது என்று கெஞ்சினார்.
அவனுக்கு நீ என்ன சிபாரிசாடா நாயே என்று ஒரு வார்டன் வெறிக் கூச்சலிட்டான். இன்னொருவன் மீண்டும் வீரமணியைத் தாக்கினான். ஆபாச அர்ச்சனைகள் நடந்தன. ஒருவன் லத்திக் கம்பால் வீரமணியின் கண்ணைக் குத்தினான். ஒரு நரம்பு அறுந்தது. பார்வை பழுதாகிவிடுமோ என்ற அச்சம்.
அதன்பின்னர் திடீர் திடீரென்று வீரமணியின் கண்கள் வீங்கின. சைனஸ் பிரச்சினையும் இணைந்தது. அவருடைய முகம் வீங்கியே விட்டது.
இறந்துவிட்டாரோ என்று எண்ணும் அளவிற்கு சம்பந்தம் அடிபட்டு பேச்சு மூச்சற்று கீழே சாய்ந்தார். அவரை வீரமணியும், மற்றவர்களும் மெதுவாக அறைக்குள் அழைத்துச் சென்றனர்.
ஏதோ இமயத்தை வீழ்த்தியதுபோல பெருமிதத்துடன் வார்டர்கள் வெளியேறினார்கள். ஒன்பதாம் பிளாக்கில் புயல் அடித்து ஓய்ந்துவிட்டது. கோரப்புயலின் கொடுஞ் சீற்றத்திலிருந்துகூட மனிதன் தப்பிவிடலாம். ஆனால், அன்றைக்கு ஒன்பதாம் பிளாக்கில் அடைபட்ட எவருமே தப்பவில்லை.
அவர்கள் என்ன சமூக விரோதிகளா? அவர்களுக்குச் சிறையில் பெரிய மரியாதை உண்டு.
அவர்கள் என்ன கள்ளநோட்டு அடித்தவர்களா? கஜானாவைக் களவாடியவர்களா? அவர்களுக்குச் சிறையில் ராஜமரியாதை உண்டு.
ஆனால், வீரமணியைப் போன்ற சமூக சிந்தனையாளர்களுக்கும், அய்யாவின் அடிச்சுவட்டில் நடைபோட்டவர்களுக்கும், அண்ணாவின் கரம்பற்றி நடை பயின்றவர்களுக்கும் அவசரநிலைப் பிரகடனம் அநியாயமாகத் தண்டனை வழங்கியது.
அன்றைய சிறைக் கொடுமைகளைச் சகித்துக் கொண்ட வீரமணி, தம்மைவிட அடிபட்டு வீழ்ந்த தோழர்களுக்காகக் கண்ணீர் சிந்தினார். அவர் சொன்னார்,
தாக்கப்பட்டவர்களிலேயே மிகக் கொடூரமான முறையில் இனிப் பிழைப்பார்களா என்று அய்யப்பட்ட அளவிற்கு சிட்டிபாபு, ஆர்க்காடு வீராசாமி, முரசொலி அடியார், கோடம்பாக்கம் குமார் ஆகியோர் தாக்கப்பட்டார்கள். முடிந்த அளவு மனதுக்குள் அவர்களுக்காக அழுதோம். ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டோம் என்கிறார் வீரமணி.
வீரமணியின் கண்கள் வலி எடுத்தன. இனி அவருக்குத் தீவிர சிகிச்சை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று சிறை மருத்துவமனை மருத்துவர்கள் கருதினர்.
வீரமணியின் கைகளில் விலங்கு மாட்டப்பட்டது. அவர் அரசினர் பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவரின் அறையிலேயே சிகிச்சை; சிறிது நேரம் ஓய்வு; மீண்டும் சிகிச்சை; அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்கூட கண்களைக் குளமாக்கிக் கொண்டனர். ஒரு ரவுடி தாக்கப்பட்டதுபோல் வீரமணி தாக்கப்பட்டிருக்கிறார் என்பதனை அவர்களால் அறிய முடிந்தது.
அரசினர் மருத்துவமனைக்கு வீரமணி அழைத்து வரப்பட்டிருக்கிறார் என்ற செய்தி தெரிந்து, அவருடைய குடும்பத்தார் மின்னலைப்போல் பறந்து வந்தனர். ஆனால், அவர்களால் எட்டி நின்று அவரைப் பார்க்க முடிந்ததே தவிர அருகில் வர முடியவில்லை. நலமா என்று ஒரு வார்த்தை கேட்கவும் முடியவில்லை. வீரமணியைச் சுற்றி அவ்வளவு கெடுபிடியான கட்டுக்காவல். அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களைக்கூட உளவுத் துறையினர் கண்காணித்தனர்.
– (நினைவுகள் நீளும்)