இணையதளம் http://periyarpinju.com/
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்பெறும் விதத்தில் அமைந்துள்ள இணையதளம்.
பிஞ்சுகளின் மனதில் நன்னெறியையும் நம்பிக்கையையும் ஊட்டும்வகையில் ஆசிரியர் தாத்தா பேரன் பேத்திகளுக்கு எழுதும் அன்புமடல், பகுத்தறிவுச் சிந்தனைக்கு வழிவகுக்கும் கதைகள், அறிவியல் செய்திகள், மூளைக்கு வேலை கொடுக்கும் சுடோகு, சிந்திக்க வைக்கும் படக்கதை, உலகச் செய்திகள் போன்ற பல்வேறு தகவல்களுடன் பரிணமிப்பதே பெரியார் பிஞ்சு மாத இதழ்.
முந்தைய இதழ்கள் பகுதியில், நாம் படிக்க விரும்பும் இதழின் மாதத்தைக் கிளிக் செய்து செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், கணினியிலேயே விளையாடுவதற்கு ஏற்றபடி சுடோகு, சீராக படத்தை அடுக்கும் படப்புதிர் போன்ற விளையாட்டுகளும், குழந்தைகளுக்கான காணொளிகளும் இந்தத் தளத்தைக் கூடுதலாக ரசிக்க வைக்கின்றன.
நூல்:
வடநாட்டில் பெரியார் (தொகுதி 1, 2)
தொகுப்பாசிரியர்: கி.வீரமணி
வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை,. வேப்பேரி, சென்னை_7.
பக்கங்கள்: தொகுதி 1: 224, தொகுதி: 2: 384. விலை: தொகுதி 1: 90, தொகுதி 2: ரூ.150. உலக மக்கள் அனைவரும் மூடநம்பிக்கைகளில் இருந்து _ மூடப் பழக்கவழக்கங்களில் இருந்து மீள வேண்டும் என எண்ணியவர் தந்தை பெரியார் அவர்கள். தமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்க வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார். பம்பாய், கல்கத்தா, பாட்னா, கான்பூர் போன்ற இடங்களுக்குச் சென்று ஆற்றிய உரைகள், நடத்திய மாநாடுகள், இயற்றிய தீர்மானங்கள், சந்தித்த நபர்கள், பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகள், அய்யாவின் உரைக்கு _ கருத்துக்கு பத்திரிகைகள் கொடுத்த சிறப்பு, பொதுமக்களிடம் காணப்பட்ட வரவேற்பு போன்ற பல செய்திகளை உள்ளடக்கிய நூல்.
தந்தை பெரியாரை _ அவரது தடம் பிறழாத கொள்கைகளை _ சொல் வீச்சுகளைப் படம் பிடித்துக் காட்டி அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் இடம்பெற வேண்டிய கருத்துப் பெட்டகமாகத் திகழ்கிறது.
ஒலிவட்டு Audo CD
தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள்
தொடர்புக்கு : பெரியார் புத்தக நிலையம்
தொலைப்பேசி : 044௨6618161
பரபரப்பான இன்றைய உலகில் புத்தகங்களைப் படிப்பதற்குப் பலருக்கு நேரம் இருப்பதில்லை. ஒலிப் புத்தகங்களின் தேவை அதிகரித்துவிட்டது. பேருந்தில், ரயிலில் பயணம் செய்யும்போது பயனுள்ள கருத்துகளைத் தெரிந்து கொள்ள உதவும் வகையில் தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் ஒலிப் புத்தக வடிவில் வெளிவந்துள்ளது.
தந்தை பெரியாரின் கருத்துகளை _- கொள்கைகளை இளைய தலைமுறையினரும் தெரிந்து பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பின் இந்த உலகம் எப்படி எல்லாம் மாறியிருக்கும், அறிவியலின் கண்டுபிடிப்புகள் எப்படி உருவாகியிருக்கும் என்பதை முன்கூட்டியே சிந்தித்துச் சொன்ன அறிவு ஆசானின் சிந்தனைகள்,
இனிவரும் உலகம், கடவுளும் மதமும் ஒழிய வேண்டும் ஏன்?, தமிழனை அடிமையாக்கியவை எவை? என்ற மூன்று தலைப்புகளில் மிளிர்கின்றன. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் குரலில் இனிவரும் உலகம் ஒலிக்கிறது.
தொடர்ந்து தந்தை பெரியாரின் சிந்தையைக் கவரும் கருத்துச் செல்வங்கள் வெளிவரும் என்ற அறிவிப்பு அடுத்தடுத்த ஒலிப் புத்தகங்களையும் எதிர்பார்க்க வைக்கிறது.