– சு.அறிவுக்கரசு
எல்லாமே சுதந்திரத்தால்
இத்தனையும் நடத்திட வேண்டும் என்கிற திட்டம் இந்துமகா சபாக்காரர்களிடம் பல ஆண்டுகளாகவே இருந்தது. ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்டத்தின் ஆட்சியும் (RULE OF LAW) மக்களை மதரீதியாகப் பிரித்துப் பார்க்காமல் மனித நேயத்துடன் சமமாக நடத்தியதாலும் இந்துவெறியர்களின் முயற்சி எதுவும் நடைபெறவில்லை. முயற்சிக்கப்படவுமில்லை. ஆனந்த சுதந்திரத்தை அடைந்துவிட்டோம் என்று ஆனந்தப் பள்ளுப் பாடியவர்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததும் மதவெறியர்கள் தங்கள் வஞ்சகத் திட்டங்களை ஒவ்வொன்றாகத் தொடங்கினர்.
அவ்வப்போது அந்தராத்மாவுடன் பேசும் பாக்யம் பெற்ற மகாத்மா (காந்தியார்) நூறாண்டுக்காலம் வாழ்வேன், அதுவரை எனக்குச் சாவு கிடையாது என்று கூறிக் கொண்டிருந்தவர். அவரைச் சுட்டுக் கொன்று கூத்தாடினர் இந்து வெறியர்கள். அடுத்ததாக பாபர் மசூதிக்குள் திருட்டுத்தனமாக இருட்டு நேரத்தில் நுழைந்து குழந்தை ராமன் பொம்மையை வைத்து நாட்டையே அமளிக் காடாக ஆக்கிவிட்டனர்.
மூவர் கும்பல்
இத்தனையும் நடந்தது மூன்று அரசு அதிகாரிகளால். மாவட்ட மாஜிஸ்திரேட் கே.கே.கே.நாயர், நகர மாஜிஸ்திரேட் குருடட் சிங், மற்றும் சிவில் நீதிபதி பீர் சிங் எனும் தாக்குர் ஜாதிக்காரர். சதித் திட்டத்தை உருவாக்கித் தந்தவர்கள் நாயரும் குருடட்டும் என்றால் கூட்டுச்சதிகாரன் பீர் சிங். இந்த நபரை மேற்கண்ட இரண்டு சதிகாரர்களும் சந்தித்தனர். தங்கள் திட்டம் இதுவெனக் கூறினர். சதிக்கு உடந்தையாகத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். மதவெறி பிடித்த உயர்ஜாதி இந்துவான பீர்சிங் எல்லா வகையிலும் உதவுவதாக வாக்களித்தார். செய்தார். நீதி கெட்டது! யாரால்?
சிவில் வழக்குகள்
இடத்திற்கு உரிமை கோரி கோபால் சிங் விஷாரத் தாக்கல் செய்த சிவில் வழக்கு ராமச்சந்திர தாஸ் பரம்ஹன்ஸ் (திருட்டுத்தனமாக மசூதிக்குள் நுழையப் பயந்துகொண்டு ஓடிவிட்ட ஆள்) என்பவரால் தொடர்ந்து நடத்தப்பட்டது. 1959இல் நிர்மோகி அகாரா அந்த இடத்தில் பங்கு கேட்டு வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டது. 1961இல் இசுலாமிய சன்னி வக்ஃபு போர்டும் உரிமைகோரி வழக்குப் போட்டது.
1964இல் தொடங்கப்பட்ட விசுவஇந்து பரிஷத் எனும் ஆர்.எஸ்.எசின் மற்றோர் அமைப்பு ராமனுக்குக் கோவில் கட்டப் போகிறோம் என்று ஆரம்பித்தது. அந்நிலையில் 1986இல் ஃபைசாபாத் மாவட்ட நீதிமன்றம், பூட்டிய மசூதியைத் திறந்துவிட உத்தரவிட்டதுடன் உள்ளே கள்ளத்தனமாக வைக்கப்பட்ட ராமன் பொம்மைக்குப் பூசை செய்ய பக்தர்களுக்கு அனுமதியளித்தது.
காங்கிரசும் குற்றவாளி
அப்போது இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி என்பவர். நேருவின் பேரன். இந்திரா காந்தியின் மகன். காங்கிரசுக்காரர். பாபர் மசூதி அமைந்துள்ள இடத்திற்கு உரிமை கோரித் தாக்கலாகியிருந்த எல்லா சிவில் வழக்குகளையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது விசாரணைக்கு 1989இல் எடுத்துக் கொண்டது.
அதே ஆண்டில் கரசேவை என்ற இயக்கம் விசுவ இந்து பரிஷத்தால் தொடங்கப்பட்டது. இந்திய நாடு முழுவதிலிருந்தும் செங்கல்கள் கொண்டு வரப்படும் இயக்கம் தொடங்கப்பட்டது. 9.11.1989இல் லட்சக்கணக்கான செங்கல்கள் பாபர் மசூதிக்கு அருகில் கொட்டப்பட்டன.
லால்கிஷன் அத்வானி தலைமையில் நடந்த ர(த்)த யாத்திரை 1990 அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடந்தது. நாட்டில் பெரும் கொந்தளிப்பை உண்டு பண்ணியது.
1992 அக்டோபர் மாதத்தில் கரசேவை மீண்டும் தொடங்கப்படும் என்று விசுவஇந்து பரிஷத் அறிவிப்பு வெளியிட்டது. நாடு முழுக்க பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியப் பிரதமராக அப்போதிருந்தவர் நரசிம்ம ராவ். தெலுங்கு நியோகிப் பார்ப்பனர். காங்கிரசுக்காரர்.
கரசேவை 6.12.1992இல் நடந்தது. டாக்டர் அம்பேத்கரின் மறைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதியை ஏன் தேர்ந்தெடுத்தனர் என்பது புரியாத புதிர். அன்று பாபர் மசூதி கரசேவகர்களால் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது. சந்தோஷத்தால், உமாபாரதி எனும் பா.ஜ.க. பெண்மணி மற்றொரு பா.ஜ.க.காரரான முரளி மனோகர் ஜோஷி என்பவரின் இரு தோள்களின் மீதும் தன் இரு கால்களைப் பரப்பி அமர்ந்துகொண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்.
பாஜக – காங்கிரஸ்
அப்போது உத்தரப் பிரதேச முதலமைச்சர் பா.ஜ.க.காரரான கல்யாண் சிங். சட்டத்திற்குப் புறம்பாக எதுவும் நடக்காது என்று இவர் உறுதியளித்தாராம். அதை நம்பி எதுவும் செய்யாமல் இருந்துவிட்ட பிரதமராக நரசிம்ம ராவ். காங்கிரசுக்காரர். தூரத்தில் ராணுவத்தினரை நிறுத்தி வைத்து நாடகம் நடத்தியவர்.
1949 முதல் நடந்த சதிச் செயல்களில் நகமும் சதையுமாகச் செயல்பட்டவர்கள் இந்துமகா சபாக்காரர்களும் இந்திய தேசிய காங்கிரசுக்காரர்களும்.
பட்டேல், பந்த், லால்பகதூர் சாஸ்திரி, நேருவின் பேரன் ராஜீவ், நரசிம்ம ராவ் என எல்லோருமே சதிச் செயலுக்கு மானசீக ஆதரவு தந்து மறைமுகமாகச் செயல்பட்டவர்களே! விதிவிலக்கு ஜவகர்லால் நேரு மட்டுமே!
15.3.2002இல் மீண்டும் ராமன்கோவில் கட்ட கரசேவை என்றது வி.எச்.பி. அதற்கு வந்து திரும்பியவர்கள் ரயில் தீவிபத்தில் இறந்ததும், பதிலடியாக இரண்டாயிரம் முசுலிம்கள் குஜராத்தில் இனப்படுகொலை செய்யப்பட்டதும் வரலாற்றின் ரத்தவாடை வீசம் பக்கங்கள்.
குரங்கு அப்பம் பிரித்த கதையாக
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு 30.9.2010இல் வந்தது. பாபர் மசூதி அமைந்திருந்த 2.67 ஏக்கர் இடம் இந்துக்கள், முசுலிம்கள், நிர்மோகி அகாரா பைராகிகள் ஆகிய மூன்று பிரிவினருக்கும் சமமாக உரிமை உடையது என்கிற தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிமன்றத் தீர்ப்புகள் என்னைக் கட்டுப்படுத்தும். ஆனால் அவற்றை நான் கவுரவப்படுத்த வேண்டும் என்கிற கட்டாயமில்லை என்ற பொருள்பட டாக்டர் அம்பேத்கர், நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட வாசகங்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அங்காவது நியாயத் தீர்ப்பு வழங்கப்படுமா?
அய்யப்பாடுகள்
பகுத்தறிவாளர்கட்குச் சில அய்யங்கள்!
500 ஆண்டுகளுக்கு முன்பு (கி.பி.1528இல்) அயோத்தியாவுக்கு வந்து ஒருவாரம் தங்கிய பாபர் அங்கிருந்த பழமையான ராமன்கோவிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டுவித்ததாக ஃபைசாபாத் மாவட்ட கெஜட்டிர் கூறுகிறது என்று கேகேகே நாயர் போன்ற அதிகாரிகள் தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அப்படியானால், தன் கோவிலை மாற்றுக் கொள்கையினர் இடிக்கும்போது அதைத் தடுக்க ஒன்றும் செய்யாமல் கையாலாகாத கடவுளாக இருந்த ஆரிய வீரன் ராமனைக் கடவுளாக வழங்கலாமா?
1992இல் டிசம்பர் 6இல் இந்துமதத்தவர் இடித்து பாபர் மசூதியைத் தரை மட்டமாக்கிய போது சர்வ வல்லமை படைத்த அல்லா ஏன் தடுக்கவில்லை? சர்வசக்தி படைத்தவர் என எப்படி ஏற்க முடியும்? தவிர்க்கமுடியாத இரு கேள்விகளுக்கும் இரு மதத்தவரும் பதில் அளிப்பார்களா?
– (முற்றும்)