பாகிஸ்தானில் அரசு என்று எதுவுமில்லை. பொம்மை அரசாங்கம் நீடிப்பதால் உள்நாட்டுத் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. மிக மோசமான, அதேநேரம் மிகச் சிறந்த காலகட்டத்தை இப்போது பாகிஸ்தான் கடந்து கொண்டிருக்கிறது. – இம்ரான்கான், தேரிக் இன்சாப் கட்சித் தலைவர், பாகிஸ்தான்
எகிப்துதான் நமக்கு முன்னோடி. நமது விடுதலைக்கும் அதுதான் வழி. சீனாவுக்கு எதிரான திபெத்தியர்களின் போராட்டம் விரைவில் ஆரம்பமாகும். அனைவரும் தயாராகுங்கள். – தலாய் லாமா புத்த மதத் தலைவர்
தமிழ்நாட்டில் வரலாற்று ஆசிரியர்களுக்கு மரியாதை இல்லை. அதனால் வரலாற்றையும் புராணத்தையும் குழப்பிக் கொள்கிறோம். வரலாறு படிக்கும்போது பாதியில் கடவுள் வந்துவிடுகிறார். இப்போது நிறைய மனிதக் கடவுள்கள் அவதாரம் எடுத்திருக்கிறார்கள். இப்படியே அவர்கள் பெருகி கடைசியில் கும்பிட ஆள் இல்லாமல் போய்விட வேண்டும். – கமலஹாசன், திரைப்பட நடிகர்
நாட்டின் கிழக்குப் பகுதியை ஆக்கிரமித்துள்ள எதிரிகளின் தாக்குதலை லிபிய ராணுவம் முறியடித்து வருகிறது. என்னைப் பதவியிலிருந்து நீக்க அந்நிய நாட்டு ராணுவ உதவியை எதிரிகள் நாடுகின்றனர். அப்படி அந்நிய நாடுகள் லிபியா விவகாரத்தில் தலையிட்டால், எனக்காகப் போரிட்டு ஆயிரக்கணக்கான லிபியர்கள் பலியாவார்கள். கடாபி, அதிபர், லிபியா
அதிகாரங்கள் சீன மத்திய அரசில் குவிந்துள்ளன. இவை பரவலாக்கப்பட வேண்டும். வரம்பற்ற அதிகாரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும். ஊழலைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளும், நீதி நியாயங்களும் காக்கப்படவேண்டும். வென் ஜியாபோ, பிரதமர், சீனா
தமிழர்கள் அனைவரும் தமிழில் பேச வேண்டும். அனைவரையும் தமிழில் பேச வைக்க படைப்பாளிகளால்தான் முடியும். தமிழகத்தில் உள்ள அறிவியல் படைப்பாளிகள் தாங்கள் கண்டுபிடிக்கும் பொருள்களுக்குத் தமிழில் பெயர் வைக்க வேண்டும். பொன்னவைக்கோ, பாரதிதாசன் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர்