அய்யா அவர்கள் இரவு நீண்ட நேரம் கடையில் இருந்துவிட்டு வீட்டுக்கு வருவார். அய்யா வரும்வரை விழித்திருந்து உணவு பரிமாறுவார் நாகம்மையார். ஒரு நாள் நீண்ட நேரமாகியும் அய்யா வீட்டிற்கு வரவில்லை. எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாகம்மையார் அருகில் இருந்த தூணில் சாய்ந்தபடியே அயர்ந்து தூங்கிவிட்டார். அய்யா வீட்டிற்கு வந்ததுகூடத் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தார்.
இதனைப் பார்த்த அய்யாவின் அம்மா மருமகளை எழுப்பிச் சாப்பாடு எடுத்து வைக்கும்படிக் கூறியுள்ளார். அரைகுறைத் தூக்கத்தில் பதற்றத்துடன் எழுந்தார் நாகம்மையார். தூக்கக் கலக்கத்திலேயே சாதம் வைத்தார். காய்கறிக் கூட்டு வைப்பதாக நினைத்து அருகில் பசு மாட்டுக்காகக் கலக்கி வைத்திருந்த பருத்திக் கொட்டை புண்ணாக்குக் கலவையை எடுத்து வைத்தார். அருகில் ஒரு பாத்திரத்தில் மாடு குடிப்பதற்காக கழுநீர் வைக்கப்பட்டிருந்தது. அதனை ரசம் என நினைத்து ஒரு டம்ளரில் எடுத்து வைத்துவிட்டுப் படுத்துவிட்டார்.
அய்யாவுக்கு முதலில் இதனைப் பார்த்துத் திகைப்பும் ஆத்திரமும் வந்தாலும், அடித்துப் போட்டாற்போல் நாகம்மையார் தூங்குவதைப் பார்த்ததும் பரிதாபமும் அனுதாபமும் ஏற்பட்டுள்ளது. அய்யா அவர்களின் அம்மாவை அழைத்துக் காட்டியுள்ளார். அய்யாவின் அம்மாவுக்கோ கோபம் வர முறைத்துப் பார்த்துள்ளார். உடனே அய்யா, அவளை முறைத்து என்னம்மா பிரயோசனம்? பகல் முழுக்க எவ்வளவு கடுமையாக வேலை செய்திருந்தால் இந்தப் பெண் இப்படி உடலும் புத்தியும் சுவாதீனமில்லாமல் தூங்குவாள்? ஒரேடியா வேலை வாங்காமல் பகலில் கொஞ்ச நேரம் தூங்க விட்டிருந்தால் இப்படி அடித்துப் போட்டதுபோல் தூங்குவாளா? என நயமாகப் பேசியுள்ளார். அய்யாவின் அம்மா சின்னத்தாயம்மையாருக்கும் உண்மைநிலை புரிந்தது.
பெண்ணடிமைத்தனத்தில் மூழ்கிக் கிடந்த அந்தக் காலத்திலேயே பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கழுநீரைச் சாப்பாடாகப் படைத்த மனைவியின்மீது கோபப்படாமல் உடல் உழைப்பின் அயர்வைக் காரண காரியத்துடன் சிந்தித்து, பிற்காலத்தில் பெண் விடுதலை இயக்கப் போராளியாகத் திகழ்ந்து வெற்றிபெற்றவர் நம் அய்யா அவர்கள்.