பிள்ளை ‍

செப்டம்பர் 16-30

– ஏ.வி.பி.ஆசைத்தம்பி

சூரியன் மறைந்துவிட்டான். மணி ஏழு ஆக இன்னும் சில நிமிடங்களே இருந்தன. ஞானமணி வீட்டு வாசலில் நின்றுகொண்டு தெருவையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அவள் பார்வை தெருக்கோடியை நோக்கியபடியே இருந்தது. வீதி வழியே சென்ற ஆடவர்கள், ஞானமணியை ஒரு வினாடி ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே சென்றார்கள். ஆனால் அவள் யாரையும் லட்சியம் செய்யவில்லை. தன் பார்வையை ஒரே இடத்தில் வைத்திருந்தாள்.

கொஞ்ச நேரங் கழித்து அவள் முகத்தில் ஒரு புன்னகை தோன்றியது. தூரத்திலே சில சிறுவர்கள் சேர்ந்து வருவதைப் பார்த்து, அச்சிறுவர்கள் நெருங்கி வந்ததும், அதில் ஏழு வயதுள்ள ஒரு பையன், அம்மா! என்று ஞானமணியைப் பார்த்துக் கூறிக் கொண்டே ஓடி வந்தான்.

வாடா கண்ணே! காப்பி சாப்பிட எவ்வளவு நேரம் காத்திருப்பது? ஏன் இன்னிக்கு இவ்வளவு நேரம்? பள்ளிக் கூடத்திலிருந்து நேரா வந்தாயா, என்ன? என்று ஞானமணி கொஞ்சுங் குரலில், அந்தப் பையனை அணைத்துத் தூக்கியவாறே கேட்டாள்.

இன்னிக்கு ஒரு கல்யாணத்தைப் பார்க்கப் போனேனம்மா! அதுதான் இவ்வளவு நேரம்!

கல்யாண வீட்டுக்கா போனே? தெரியாத வீட்டுக்குப் போகலாமா?

வீட்டிலே இல்லம்மா கல்யாணம், நம்ம ஊர் மைதானத்தில்!

மைதானத்திலா? அதென்ன கல்யாணமடா இராஜா?

அம்மா! அந்தக் கல்யாணத்திலே கொட்டு இல்லை; பந்தலும் இல்லை. தாலி கட்டறதும் இல்லை.

தாலி இல்லாமலா கல்யாணம் நடக்குது? உனக்கெல்லாம் அது தெரியாது!

போம்மா! நான் என்ன பொய்யா சொல்றேன். நிஜம்மா, அய்யர்கூட கிடையாதம்மா! அய்யருக்குப் பதிலா ஒரே ஒரு தாடிக் கிழவன் வந்திருக்கிறாரம்மா!

அந்தத் தாடிக் கிழவன்தான் அய்யரா இருக்கும்!

இல்லைம்மா! அய்யரே உதவாதுன்னு பேசினாரம்மா அந்தக் கிழவன். அவர் பேர் என்ன தெரியுமா? பெரியார் ராமசாமியாம்.

என்ன, ராமசாமியா? ராமசாமியா?

ஏனம்மா இப்படி ஆச்சரியப்படுறே? என்று தன் தாயைப் பார்த்து மகன் கேட்டான்.

அதற்கு அவள் ஒன்றுமே பதில் சொல்லவில்லை. ஆணி அடித்தாற்போல், சிலை மாதிரி நின்றாள்.

ராமசாமி! ராமசாமி! என்ற சொற்கள் அவள் இருதயத்தில் இருந்து எழுந்து கொண்டிருந்தன. சட்டென்று தன்னை நிதானப்படுத்தினாள். தன் குழந்தையை வாரி எடுத்துக்கொண்டு உள்ளே போய் காப்பி சாப்பிட்டதும் படிக்கச் சொல்லிவிட்டு, தன் அறைக்குள்ளே போனாள். அந்த ராமசாமி என்கிற வார்த்தை அவளை வாட்டியது. எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்த பயங்கரச் சம்பவங்களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அவள் மனக்கண்முன் தோன்றியது. ஓவென்று படுக்கையிலே புரண்டு அழுதாள். ஆம்; அந்த ராமசாமி என்ற வார்த்தையிலேதான் அவள் வாழ்க்கையின் ரகசியம் மண்டிக் கிடந்தது.

ஞானமணி பிறவியிலேயே பணக்காரி. உயர்ந்த ஜாதிக்காரி. ஆனால், ராமசாமி கீழ் ஜாதியல்ல, ஞானமணிக்கு வேறு ஜாதி. அதோடு ஒரு தொழிலாளியின் வயிற்றிலே பிறந்தவன்; பரம ஏழை!

குழந்தைப் பருவத்திலே இருவரும் கூடி விளையாடினர். அந்த அறியாப்பருவத்திலேகூட, நீ கணவன்; நான் மனைவி என்று ஞானமணி கூறுவாள். அப்போது அதை யாருமே தடுக்கவில்லை. ஜாதி அங்கே தலைகாட்டவில்லை. குறுக்கே நிற்கவில்லை. அந்தக் காலத்தில் ஒரே தெருவில் இருவரும் இன்புற்று வாழ்ந்தனர்.

அறியும் பருவம் வந்தபோது அந்தச் சிறு விளையாட்டு வளர்ந்து வளர்ந்து காதலாகியது.

முன்போல் அவர்களால் இருக்க முடியவில்லை. ஜாதி, பணக்காரத் தன்மை, ஆச்சாரம், சமூகம் ஆகிய அத்தனையும் இப்போது இடையே வந்து நின்றன. வாய்க்குப் பதில் கண்களே பேசின. தொட கைகள் பயன்படவில்லை. உள்ளத்தின் உணர்ச்சிகள் ஒன்றோடு ஒன்று மோதின.

மண்ணாங்கட்டியால் ஆக்கப்பட்ட மடச் சமூகக் கட்டுப்பாடு என்ற அணைக்கட்டு, எத்தனை நாளைக்குத்தான் இருக்கும்? ஒரு நாள் அது உடைந்தது. ராமசாமிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில்,  அன்பரே!

நான் பெரிய மனுஷியாகி விட்டேனாம்; வீட்டை விட்டு வெளியேறக் கூடாதாம். யார் கண்ணிலும் படக் கூடாதாம். ஏன்தான் நான் பெரிய மனுஷியானேனோ?
இந்தக் கலியுகத்திலும் கடவுள் முன்போல் காட்சியளித்து வரம் தருவதாய் இருந்தால், இந்தப் பெரிய மனுஷிப் பட்டம் எனக்கு வேண்டாமென்று கேட்க தவங்கூடச் செய்வேன். நான் பெரிய மனுஷி ஆனது, அடிமையாய் இருக்க சுயராஜ்யம் வாங்குவது போல் இருக்கிறது. எவ்வளவு பைத்தியக்காரத்தனம் போங்கள்!

உணர உணர, உரிமை அதிகரிப்பதுதான் அறிவுடமை என்று சொல்வார்கள். ஆனால், அறியாப் பருவத்திலே எங்களுக்கு இருந்த உரிமை, சுதந்திரம், எல்லாம் பருவமடைந்தவுடன் எங்களிடத்திலே இருந்து பறிக்கப்படுகிறது. இந்தச் சமூகத்திலே எங்களுக்குள்ள நீதியைப் பாருங்கள். கருப்பையில் ஆண் வர்க்கம் ஒரு தரம்தான் குடியிருக்க முடியும்; வெளியிலும் வரமுடியும். ஆனால், நாங்கள் அப்படியல்ல, எப்படிப்பட்ட பெண்ணும், கருவிலே இருமுறை இருக்க வேண்டியதிருக்கிறது. ஆரம்பத்திலே கருவிலே வசித்து விட்டு, உங்களைப்போல் வெளிவருகிறோம். பிறகு பருவமடைந்தவுடன், வீடு என்ற கருவிலே எவர் கண்ணிலும் படாதபடி நுழைந்து வாழுகிறோம். கல்யாணம் என்பதுதான் எங்களின் மறுபிறப்பு. அதிலும் விதவையாகி விட்டால், மீண்டும் கருவீடு புகவேண்டும்; மூன்றாம் முறையாக, அப்புறம் சாவுதான் மறுபிறப்பு!

இந்த நிலையில் பெண்ணாய்ப் பிறக்க யார்தான் விரும்புவர்? நான் எப்படியோ பிறந்து விட்டேன்; பெரிய மனுஷியும் ஆகிவிட்டேன். உங்களோடு பேச ஏதோ ஒரு உணர்ச்சி என்னைத் தூண்டுகிறது; என் வாய் துடிக்கிறது. வாய்ப்பில்லாமல் வாழுகிறேன். நான் மலர்; என்னை யாராவது பறிக்க வேண்டும்; அல்லது நான் வாடி வதங்குவதைத் தவிர வேறு வழியில்லை. உங்களின் குறுகுறுத்த பார்வையில் ரீங்காரம் என்ற ஆசையைக் காண்கிறேன். செடியோடு பின்னிக் கிடக்கும் பெண்ணால் எங்கும் அசைய முடியாது. வண்டுதான் வரவேண்டும். வீட்டைச் சுற்றிக் கோட்டை இருந்தாலும் வண்டுக்கு இறக்கை உண்டு. வழி சொல்லத் தேவையில்லை; விழித்திருப்பேன் இரவு.  எப்படியும் வர வேண்டுகிறேன்.

காதலி,

ஞானமணி. கடிதத்தைக் கண்ட ராமசாமி கண்ணுறங்கவே இல்லை. அவள் இட்ட வேலையை முடிக்க, கொஞ்சமும் பயமின்றி கோட்டை ஏறிக் குதித்தான். எழுதியபடியே, ஞானமணி காத்திருந்தாள்.

அன்று, கடந்தகால நிகழ்ச்சி பற்றியே பேசி முடித்தனர். அந்தக் காரிருளில் காதல் மணமும் முடித்துக் கொண்டனர். இப்படியாக இரு நாளைக்கு ஒரு முறை இரவிலே சந்தித்தனர்; இன்பங்கண்டு வந்தனர். ஆனால் ஞானமணிக்கு ஒரு பக்கம் கலக்கம் ஏற்பட்டது. கடவுள் அவளைக் காட்டிக் கொடுக்க ஆரம்பித்தார். அவள் அடிவயிறு கனக்க ஆரம்பித்தது. கர்ப்பமாகியிருப்பதை உணர்ந்தாள். தன் காதலனிடம் அதை அறிவித்தாள். பாவம், அவன் என்ன செய்வான்? ஏதோ மருந்து கொடுத்துப் பார்த்தான்; பலிக்கவில்லை. வேறு வழி தெரியாமல் திகைத்தனர். தன்னைப் படைத்த ஆண்டவனைச் சபித்தாள் ஞானம்.

ஏ, கடவுளே! உன்னை சர்வேஸ்வரன் என்று சொல்லுகிறார்களே உனக்கு இருக்கலாமா ஓரவஞ்சனை? ஒரு கண்ணில் சுண்ணாம்பும் மற்றொரு கண்ணில் வெண்ணையும் வைப்பதுதானா நீ அறிந்த நீதி? உன் படைப்பிலே ஆணுக்கு உயர்வும், பெண்ணுக்குத் தாழ்வும் இருக்கலாமா? சமதர்மம் உனக்குமா தெரியாமல் போய்விட்டது?

இன்னும் சில நாட்களில என்னை உலகம் விபசாரி என்று அழைக்கும்! மானமிழந்த வேசி என்று கூறும்! என்னைக் காட்டிக் கொடுக்கப் போவது வேறொன்றுமில்லை; நீ படைத்த இந்தப் பாழும் வயிறுதான்! பந்தைப்போல் புடைக்கப் போகிறது அது. நான் விபசாரி என்பதற்கு அதுதான் அடையாளம்!

பெண்கள் சோரம் போனால் காட்டிக் கொடுக்க நீ படைத்தது இந்த வயிறே! ஆனால், ஆண்கள் சோரம் போனால் அவர்களைக் காட்டிக் கொடுக்க நீ எதைப் படைத்தாய்? அவர்கள் கை வீங்குமா? அல்லது கால் வீங்குமா? ஒன்றுமில்லையே! இதுதானா உன் நீதி? அவர்களையும் காட்டிக் கொடுக்க நீ எதையாவது படைத்திருந்தால் உலகில் எங்களுக்கு இந்த அவல நிலை இருக்குமா? பயப்பட வேண்டிய அவசியம் ஏற்படுமா? இப்பொழுது நான் என்ன செய்வது?

நீதியில்லாக் கடவுளை நினைத்து நினைத்து சபித்தாள்; கண்ணீர் விட்டாள். ஏழை மகன் ராமசாமி அவளைப் பார்த்துப் பார்த்து பரிதாபப்பட முடிந்ததே தவிர, எதுவும் செய்ய முடியவில்லை. இப்படி இருக்கும்போது ஒரு நாள் இரவில், ராமசாமி! நீங்கள் எழுதிய கடிதத்தில் ஒன்று எப்படியோ என் தந்தையிடம் சிக்கிவிட்டது. உங்களைக் கொல்ல சதி செய்து கொண்டிருக்கிறார் என்று ஞானமணி கூறினாள். ஆனால் ராமசாமி, ஞானம்! இந்த ஏழை சாவதைப் பற்றிக் கவலை இல்லை; நீ ஆனந்தமாய் இருந்தால் போதும் என்றான்.

நீங்கள் இல்லாமல், நான் இருப்பதும் ஒன்றுதான், இறப்பதும் ஒன்றுதான்.

பின் என்ன செய்யச் சொல்கிறாய் ஞானம்?

அன்பரே! உம்மை என் தந்தை கொன்றாலும் கொல்லாவிட்டாலும், என் வயிறு என்னைக் காட்டிக் கொடுப்பது நிச்சயம். நான் எப்படியும் தப்பமுடியாது. அதனால் இப்போதே நாம் ஓடிவிடுவது நல்லது!
ஓடவா? இந்த ஏழைக்கு அது முடியுமா?

ஏன் முடியாது? ராமசாமி, நாளை தயாராய் வாருங்கள். நான் வேண்டிய மட்டும் பணம் கொண்டு வருகிறேன். அதை வைத்து, கண் காணாத தூரம் போய் எப்படியோ பிழைத்துக் கொள்வோம். நீங்கள் ஒன்றும் யோசிக்க வேண்டாம். போய்விட்டு நாளை இரவு தயாராக வாருங்கள் என்று சொல்லி அனுப்பினாள். ராமசாமிக்கு என்னமோ பயமாகத்தான் இருந்தது!

காரணம் இன்றி மானம் கெடுவதைவிட, காரணத்தோடு கெட்டாலும் பரவாயில்லை என்று எண்ணியே ஞானம் துணிந்து விட்டாள்.

சொன்னபடியே, ஞானம் இரண்டாயிரம் வரை ரொக்கம் எடுத்துக் கொண்டு, சில நகைகளையும் எடுத்துச் சுருட்டி வைத்துக் கொண்டு, நடு இரவு தோட்டத்திலே காத்திருந்தாள் ராமசாமிக்காக! பதட்டத்தோடு ராமசாமியும் வந்து சேர்ந்தான்.

என்ன, புறப்படலாமா என்று ஞானம் கேட்க, நீ தயார்தானா? என்று ராமசாமி திருப்பிக் கேட்டான்.

நான் எப்போதோ தயாராகி விட்டேன். நேரமாகிறது வாருங்கள் போகலாம் என்று ஞானம் கூறியதும், இருவரும் புறப்பட்டனர்.

ஆனால் திடீரென்று அப்போது மாடியிலிருந்து, இவர்களை நோக்கி யாரோ பேட்டரி விளக்கை அடித்தார்கள். சட்டென்று ராமசாமி விளக்கு வந்த திக்கை நோக்கினான். மறுநிமிடம் அய்யோ! அப்பா! என்று கீழே விழுந்தான். அவன் மார்பில் குண்டு ஆழமாகப் பாய்ந்திருந்தது! கையிலே இருந்த பணத்தையும் நகையையும் கீழே போட்டு விட்டுப் பதறி நின்றாள் ஞானம்.

ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா? உடனே பங்களாவிற்கு வாருங்கள்! யாரோ, திருடன்! சுட்டு வீழ்த்தி விட்டேன் _ இப்படியாக மறுவினாடி போன் அங்குமிங்கும் பறந்தது.

போலீஸ்காரர்கள் வருவதற்குள் ராமசாமி மாண்டான். ராமசாமியின் பெற்றோர் அழுது கொண்டே நின்றார்கள். யார் அழுதால் என்ன? ராமசாமியின் பக்கத்திலே நகை, பணம்! இதைவிட வேறு சாட்சியமும் வேண்டுமா?

இல்லை! ராமசாமி கள்வன் இல்லை; என் காதலன். வேண்டுமென்றே என் தந்தை பழிவாங்கி விட்டார். நகையும் பணமும் நான்தான் கொண்டு வந்தேன். அவர் குற்றமற்றவர்! என்று பாவம், பெண்ணாய்ப் பிறந்த ஞானந்தான் சொல்லமுடியுமா?
உரிமை பறிக்கப்பட்டு, மாட்டுக்குச் சமமாக  மனித சமுதாயத்தில் விடப்பட்ட ஊமை வர்க்கம் என்ன செய்ய முடியும்? பேச வாய் திறக்கத்தான் செய்தது; இரக்கமற்ற தந்தையும், மதியற்ற மானமும் அதைப் பூட்டி விட்டன. தந்தையின் கட்டுப்பாடு எவ்வளவோ இருந்தும், கண்ணீரை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

கண்ணீரைக் கண்டோர், களவு கொடுத்தவள் அழுவதில் ஆச்சரியமில்லை என்றே எண்ணினர். ராமசாமியின் பிணம் அறுவைக்குப் பின் எரிக்கப்பட்டது. ஞானத்தை அவள் பெற்றோர் மனம்போல் திட்டினர். என்னதான் திட்டினாலும் அவள் கர்ப்பம்…?
அதை நினைத்தால் அவர்களுக்கே பயமாக இருந்தது. குடும்பத்தின் பெயர் கெட்டுவிடுமே என்று பயந்தனர். மகள் வாழ்வு இனி கெட்டாலும் சரி, அவள் எப்படிப் போனாலும் சரி, மானம் போகாதபடி மாங்கல்யம் போட மாப்பிள்ளை தேடினர்.

பணம் வேலை செய்யும்போது ஆளுக்கா பஞ்சம், நீ, நான் என்று முந்தினர், நல்ல நாளில் முகூர்த்தம். நடைப் பிணமாய் இருந்த ஞானத்தின் கழுத்தில் மஞ்சள் கயிறு ஏறியது. மணமான எட்டரை மாதத்தில், தங்க விக்கிரகம் போல ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

எப்படியோ குறைமாதத்தில் குழந்தை பிறந்து விட்டது! நல்லவேளை, தாய்க்கு ஆபத்தில்லை! என்றுதான் மக்கள் பேசினர். ஆம்; பெரிய இடத்து விஷயம். மாறிப் பேசினால் மனஸ்தாபம்! மதிப்பாகப் பேசுவது சகஜந்தானே? எல்லாம் சுமூகமாக முடிந்தது. ஞானத்தின் பெற்றோருக்கு இப்போது நிம்மதி ஏற்பட்டது. ஞானமும் கடந்த காலத்தை நினைப்பதில் பயனில்லை என்று உணர்ந்தாள். ஏதோ புருஷனோடு எப்படியோ இணைந்து வாழ்வதுதான் இனிது என்று நினைத்தாள். ஆகவே ராமசாமியைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து, ஏழு வருடம் எப்படியோ வாழ்ந்துவிட்டாள். அதோடு புதிய கணவனுக்கு ஆறு மாதத்திற்கு முன்புதான் ஒரு பெண் குழந்தையும் பெற்றாள்.

இப்படி இருக்கும்போதுதான், ராமசாமிக்குப் பிறந்த மூத்த மகன் பள்ளிக்கூடம் போய் வீட்டுக்குப் பிந்தி வந்த காரணத்தைக் கூறும்போது, பெரியார் ராமசாமி பெயரைச் சொல்லியதும், பழைய நிகழ்ச்சியின் நினைவுகள் மூளையைத் தாக்கின. அவளை அறியாமல் அழுகை வந்துவிட்டது. ராமசாமியை எண்ணிக் கண்ணீர் விட்டாள்.

தொட்டிலிலே தூங்கிய ஞானத்தின் கைக்குழந்தை விழித்துக் கொண்டு அழுதது. ஞானம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்துபோய் தொட்டிலைப் பிடித்து ஆட்டிக்கொண்டே ஆராரோ, ஆரிராரோ! கண்மணி நீ உறங்காய் என்று தாலாட்டினாள்.

ஆனால், அந்தத் தாலாட்டுப் பாட்டு, காதலுக்குக் கட்டுப்பாடு விதித்து முட்டுக்கட்டை போடும் இந்த மூடச் சமூகத்திலே பிறந்து வளர்ந்து வரும் ஒவ்வொரு குழந்தையையும் பார்த்து, கண்மணி! நீ யார் யாரோ… யாராரோ? என்று இடித்துக் கேட்பதுபோல் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *