பிரிட்டிஷ் மண்ணிலே … பிரிட்டிஷாரைக் கண்டித்த பெரியார்

செப்டம்பர் 16-30

இங்கிலாந்தில் மெக்ஸ்பரோ லேக் பார்க்கில் 26.-6.-1932-இல் ஒரு தொழிலாளர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கூடியிருந்தனர். இக்கூட்டத்தில் தொழிலாளர் தலைவர் தோழர் லான்ஸ்பரி ஒரு சொற்பொழிவாற்றினார். அதற்கு விடை கூறும் முறையில் பெரியார் ஈ.வெ.ரா. பேசியது இது:-_

இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத்தகுந்த சமூகமாகக் கருதலாம். ஆனால், நாங்கள் பிரிட்டிஷ் தொழிற்கட்சியை மிகமிகப் பரிகசிக்கத்தக்க விஷயமாய்க் கருதுகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

இந்தியச் சுரங்கங்களில் 10 மணி நேர வேலைக்கு எட்டு அணா கூலி கொடுத்து இந்தியர்களிடம் வேலை வாங்கப்படுகிறது. சுமார் 40 ஆயிரம் பெண்கள் தினம் அய்ந்து அணா கூலிக்கு பூமிக்குள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமையையும், ஆபாசத்தையும் நிறுத்த தொழிற்கட்சி அரசாங்கம் என்ன செய்தது?

அவ்வளவோடு மாத்திரம் அல்லாமல், இந்தியாவானது -_ இந்திய அரசர்களும், ஜமீன்தார்களும், முதலாளிமார்களும், அய்ரோப்பிய வியாபாரிகளுமே ஆதிக்கம் வகிக்கும்படியானதும், குடித்தனக்காரர்களுக்குப் பாத்தியமும், பொறுப்பும் இல்லாததுமான ஓர் அரசியல் சபை மூலம் நிர்வாகம் நடக்கும்படியான காரியத்திற்கு உதவி செய்கிறார்கள்.

ஆதலால், யார்க்ஷையர் தொழிலாளிகளே! நீங்கள் இந்தப் போலிக் கட்சிகளையும், கொள்கைகளையும் நம்பாமல், மனித சமூக விடுதலைக்கும், சுதந்திரத்துக்கும், சமத்துவத்துக்கும் உண்மையாகவே போராடுவதற்காக உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை எதிர்நோக்கிக் கொண்டிருங்கள்.

* * *

பயணத்தால் என்ன கிடைக்கும்?

பட்டிக்காட்டில் உள்ளவனுக்கு தாலுக்கா ஒரு கண்காட்சி! தாலுக்காவை விட்டு வெளியே வராதவனுக்கு ஜில்லா ஒரு கண்காட்சி! ஜில்லாவிலிருப்பவனுக்கு மாநிலத்தின் தலைநகர் கண்காட்சியாகும். தலைநகரில் இருப்பவனுக்கு பம்பாய் _- லண்டன் போன்ற பெரிய நகரங்கள் கண்காட்சியாகும்! இம்மாதிரி பெரிய நகரங்களைப் பார்ப்பதும் ஒரு கண்காட்சி போன்றுதான் ஆகும்.

ரயிலைவிட்டு இறங்கி வண்டியில் ஏறி தாஜ்மஹால் ஓட்டலில் இறங்கித் தங்கிவிட்டு வந்தால் விஷயம் தெரியாது. விஷயம் தெரியவேண்டுமானால் வீதியில் நன்றாகத் திரியவேண்டும். அப்போதுதான் அந்நாட்டு மக்கள் என்ன கருதுகிறார்கள். அவர்களது நிலை என்ன _ -வாழ்க்கைமுறை எப்படி என்பவைகள் தெரியும். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தவன் பி.ஏ. படிப்பாளிக்குச் சமமாகும். வேண்டுமானால் இங்கிலீஷ் பேச எழுத காலேஜில் பயிலவில்லை எனலாம். ஆனால் இச்சுற்றுப் பயணத்தில் தானே சிறிது சிறிதாக அந்த அறிவு ஏற்பட்டுவிடும். பி.ஏ. படிப்பாளிகூட இவனுக்குச் சமமாக மாட்டான். அன்றைய ரஷ்யாவில்… கஷ்டப்படுகின்ற தொழிலாளிகள் அரசாங்கத்தை நடத்துகின்றவர்களாயிருக்க வேண்டும். ஜனங்களின் நன்மைக்காக, ஜனங்களாலேயே நடத்தப்படுகின்ற அரசாங்கமாயிருத்தல் வேண்டும். இந்தியாவைப்பற்றியுள்ள வறுமையை அகற்றக்கூடிய அரசாங்கமாயிருக்க வேண்டும். பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அய்க்கிய தேசம், முதலியனவெல்லாம் குடியரசு நாடுகளாகவே இருக்கின்றன. ஆனால் எங்கும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. ரஷ்யா ஒன்றில் மட்டும் வேலையில்லாத் திண்டாட்டமே கிடையாது. ஒரு சில பிச்சைக்காரர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் வயது சென்றவர்களும், அங்கவீனர்களுமே. அவர்களை அரசாங்கம் போஷிக்கிறது. உண்மையில் அது ஒரு புதிய உலகம். அதுபோல் முன்னொரு போதும், எந்நாட்டிலும் சீர்திருத்தம் நடந்தேறியதேயில்லை. அந்நாடு தொழிலாளர்மயமாகவே இருக்கிறது. தோட்டி முதல் தொண்டமான் ஈறாக எல்லோரும் அரசாங்கத் தொழிலாளராகவே கருதப்படுகின்றனர். அங்கு எல்லா மனிதரும் சமமாகவே கருதப்படுகின்றனர். மக்களுக்குள் உயர்வு தாழ்வு என்பதே கிடையாது.

* * *

சுதந்திர உணர்ச்சி

நான் இதுவரை எனது உடைகளை மாற்றிக்கொள்ளவில்லை. தலைக்கு மாத்திரம் ஒரு கம்பளி குளிர் (மங்கி கேப்) குல்லாய் போட்டுக் கொண்டேன். ஆகாரம் ரொட்டி, முட்டை, காப்பி இவைகள்தான் முக்கியமாய் உபயோகிக்கிறேன். முட்டை இவ்விடம் மிக மலிவு, 2 அணாவுக்கு 5 முட்டை கிடைக்கின்றது.

இந்தப் பக்கத்துக்காரர்களுக்கு நான் ஒருவனே தாடி வைத்தவனாகவும், ஒரு புதுமாதிரி மனிதனாயும் காணப்படுவதால் யாரும் குறிப்பாய்ப் பார்ப்பதும் மற்றும் மரியாதை செய்வதுமாய் இருக்கிறார்கள். கூடுமான வரையில் ஜனங்கள் நமது ஜனங்களைவிட நல்ல குணமுள்ளவர்களாகவும், விவேகிகளாகவும் இருக்கிறார்கள்.

இந்தியன் என்றால் மிகப்பிரியமாய்ப் பேசுகிறார்கள். அய்ரோப்பியரிடம் வெறுப்பாய் இருக்கிறார்கள். இவ்விடத்தில் பெண்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், சுதந்திர உணர்ச்சியும் தைரியமும், துணிவும் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைகள் சிறுவர்கள் ஆகியவர்களுக்கு நமது பக்கத்திய குழந்தைகளைவிட அதிக புத்தியும், சுதந்திர உணர்ச்சியும் துணிவும் இருக்கின்றன.

– நூல்: அய்ரோப்பாவில் பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *