திருமதி சாந்தி பாபு |
உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகிக்கும் மகளிர் பிரதிநிதிகள் எப்படிச் செயல்படு கிறார்கள்?அவர்களின் செயல்பாடுகள் போதுமானதா?என்பது பற்றி அவனாசி ஊராட்சி மன்றத் தலைவராகப் பணியாற்றும் திருமதி சாந்தி பாபு அவர்களிடம் பேசினோம். தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு சிறந்த ஆலோசனைகளையும் முன் வைத்தார்:\ எங்கள் ஒன்றியத்தில் எடுத்துக் கொண்டால் பெண் உறுப்பினர்கள் சிலர் தங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டுதான் இருக்கிறார்கள். அடிப்படை வசதிகள் செய்வதிலேயே கணவருடன் சில பெண்களின் கருத்துக்கள் முரண்பாடாக இருக்கும். உதாரணமாக, பெரும்பாலான பெண்கள் நாம் உயிர் வாழ்வதற்கான குடிநீர்ப் பிரச்சினைக்கும் சுகாதாரத் தேவைகளுக்கும் முக்கியத்துவம் தருவார்கள். ஆனால் ஆண்கள் சாலைகளுக்கும், பாலங்களுக்கும், முக்கியத்துவம் தருவார்கள். இப்படி, தன் கணவருக்குக் கட்டுப்பட்டு சாலைக்காக என்னிடம் மனு கொடுத்துவிட்டு, பின்பு தொலைபேசி மூலம் சாலை இப்போதைக்கு வேண்டாம், மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டிதான் அவசியம். ஆகவே, அந்த நிதியை நீர்த் தொட்டிக்கு ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், கணவருக்குத் தெரிய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார், நான் பிறகு அவர்கள் இருவரையும் அழைத்து மனிதனின் முக்கியத் தேவை எதன் அடிப்படையில் அமைகிறது என்று விளக்கி, பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் பற்றியும் எடுத்துக் கூறி, மக்கள் பிரதிநிதி ஆகிய நாம் அனைவருக்கும் உதாரணமாக இருக்க வேண்டும் என்று எடுத்துக் கூறினேன். இன்று அப்பெண் உறுப்பினர் சுதந்திரமாகச் செயல்படுகிறார்.
பெரும்பாலான இடங்களில் பதவியில் உள்ள பெண்களின் கணவர்களே அனைத்துப் பணிகளையும் செய்து வருவது தொடர்கதையாக உள்ளது. இது தொடர்பாகக் கிளம்பிய புகாரைத் தொடர்ந்து, அதிகாரிகள் ஒவ்வொரு கூட்டத்திலும் பெண் கவுன்சிலர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும். பணிகள் முழுவதும் அவர்களே செய்ய வேண்டும்’ என, அறிவுறுத்தினர். மேலும், உள்ளாட்சிகளில் பெண்களின் பங்கு குறித்து தொண்டு நிறுவனங்கள் பெண் சேர்மன், கவுன்சிலர்களுக்கு விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தி அவர்கள் சுயமாகச் செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தின. இது ஓரளவிற்குப் பயனளித்தது. பெண்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவது தொடர்பாக அரசு திட்டமிட்டு, கிராம அளவில் பெண்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ஆறு முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் வகையில் அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.இன்று பெண்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.பல துறைகளிலும் உயர் பதவிகளை வகித்து சாதனைகள் புரிந்து வருகின்றனர்.
ஜப்பானியப் பெண்களில் பெரும்பாலோர் தொழில் முனைவோர்களாக உள்ளனர். நம் நாட்டிலும் பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவது மிகவும் அவசியம். சிவில் சர்வீஸ் துறையில் பெண்களின் பங்கு 10 சதவிகிதத் திலிருந்து கடந்த அய்ந்து ஆண்டுகளில் 25 சதவிகிதமாக அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. நீதித்துறை, அரசியல்துறை போன்ற துறைகளிலும் பெண்களின் பங்கு அதிகரிக்க வேண்டும். நான் இறுதி யாண்டு படிக்கும் பொழுதே அகில உலக கருத்தரங்கில் கலந்து கொண்டு எனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்ததால் அமெரிக்க நிறுவனம் ஒன்று சம்பளமாக சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கு வேலை வாய்ப்பு அளித்தது. ஆனால், நான் அந்த வாய்ப்பை நிராகரித்து இந்தியாவிலேயே எங்கள் குடும்பத்தினரோடு எங்கள் கிராமத்தில் இருப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி என்று கூறிவிட்டேன். இன்று பொறியியல், மருத்துவம் படித்தவர்கள், எத்தனை பெண்கள் கிராமத்தில் வசிக்கிறார்கள் என்று சொல்லுங்கள். கிராமத்துப் பெண்கள் நிலை மிகவும் பரிதாபகரமானதாகும். பட்டணத்துக்காகவே கிராமங்கள் இருந்து வருகின்றன. கிராம சீர்திருத்தம் என்பது பட்டணங்களில் வாழ்பவர்களின் சௌகரியத்துக்காகச் செய்யப்படும் காரியமேயாகும். கசாப்புக் கடைக்காரன் ஆட்டைப்பற்றிக் கவலை கொள்ளுவது போல்தான் பட்டணக்காரன் கிராமத்தைப்பற்றிக் கவலை கொள்ளுவதாய் இருக்கிறது. அரசியல்தானாகட்டும், சமூகவியல் தானாகட்டும் எவ்வளவுதான் முற்போக் கடைந்தாலும் கிராமக்காரனின் நிலை ஒரே மாதிரிதான். அவன் பாடுபட்டு உழைத்து வஸ்துக்களை உண்டாக்க வேண்டியதும், அதன் பலனை பட்டணக்காரன் அனுபவிப்பது மல்லாமல் கிராமத்திற்க்கு உருவாக்கப்படும் திட்டங்களையும் கிராமத்தையும் கிண்டலடிக்கும் மனோபாவம் இன்று நிலவுகிறது .
பெரியார் கூற்றைப் போல இன்றைய பெண்கள், வெறும் அலங்காரத்தோடு திருப்தியடைந்து விடுகிறார்கள், அல்லது திருப்தி செய்யப்பட்டு விடுகிறார்கள். எனவே, இவர்களுக்கு விடுதலை வேட்கை பிறப்பது அரிதாயிருக்கிறது. ஆம், நம் பெண்கள் இன்று செய்துகொண்டிருப்பது என்ன என்பதைச் சற்று சிந்திப்போம். இன்றைய பல இந்தியப் பெண்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பு என்னவென்றால் பத்தாயிரம் முதல் அய்ம்பதாயிரம் சம்பளத்தில் ஒரு வேலை, ஒரு கார், ஒரு பிளாட், தான் பணிபுரியும் நிறுவனத்திலேயே வேலை பார்க்கும்படியான கணவன், சன்டே ஷாப்பிங், நுனிநாக்கு ஆங்கிலம் இதையும் தாண்டிச் சிந்திப்பவர்கள் கவிஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும், இயக்குநர்களாகவும், வலைப்பூவிலும், முகநூலிலும் தன் சிந்தனையை வெளிபடுத்துகின்றனர். புதிய சட்டம் போடணும். தொலைநோக்குப் பார்வையுடன் திட்டம் தீட்டணும் என்று வாயளவில் பேசிக்கொண்டும் , மனதளவில் எண்ணிக்கொண்டும் இருக்கும் பெண்கள் அதிகம். சட்டத்தையும், திட்டத்தையும் நடைமுறைப்படுத்த நம் தகுதியை எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் கேள்வி. பெண்களாகிய நாம் நம் தகுதிகளையும், ஒதுக்கீடுகளையும் பயன்படுத்தி தகுந்த சமூகப் பொறுப்பை (பதவி) அடையவேண்டும். மேலும், நமக்குக் கிடைத்த உள்ளாட்சிப் பொறுப்பில் திறம்படச் செயலாற்றி படிப்படியாக மேல் பொறுப்புகளுக்குச் சென்றால்தான் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கொடுக்க முடியும் .
பெண்களின் சக்தியை ஓங்க வைத்து, அதைத் தகுந்த அளவில் பயன்படுத்தினாலன்றி, எந்த ஒரு சமுதாயமும், நாடும், நிலைத்த, நீடித்த வளர்ச்சியை அடைய முடியாது. பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்கும் பெண்களுக்குச் சம உரிமை அளிப்பதைத் தவிர வேறு ஓர் ஆயுதம் இருக்க முடியாது!