இணையதளம் – http://www.tnreginet.net/
சொந்தமாக வீடு, காலி இடம், தோட்டம், காடு வாங்க நினைப்பவர்கள் தாங்கள் வாங்கப் போகும் இடம் தற்போது யாருக்குச் சொந்தமாக உள்ளது? இதற்கு முன்பு அதனை அனுபவித்தவர் யார்? அந்த இடத்தின் பேரில் ஏதேனும் வங்கிக்கடன் வாங்கப்பட்டுள்ளதா? வங்கிக் கடன் வாங்கப்பட்டிருப்பின் அதனைச் சரியான முறையில் திருப்பிச் செலுத்தியுள்ளனரா? வேறு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்வதற்கான வில்லங்கச் சான்றிதழ் பெறுவதற்கு உதவிபுரியும் இணையதளம்.
பெயர், முகவரி, தொலைப்பேசி எண், மாவட்டம், என்று கேட்கப்பட்ட விவரங்களைத் தட்டச்சு செய்து சமர்ப்பித்தால் வில்லங்கச் சான்றிதழினைப் பெற்றுக் கொள்ளலாம்.
நூல்
நூல்: எதிர்க்குரல்
ஆசிரியர்: மனுஷ்யபுத்திரன்
விலை: ரூ. 140/_
வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,
105, ஜானி ஜான்கான் சாலை,
இராயப்பேட்டை, சென்னை _ 14
தொடர்புக்கு: 044 _ 43993029
சமூகம், சுகாதாரம், அரசியல், நீதி என்று பல்வேறு கோணங்களில் மக்கள் எதிர்கொண்ட (ஜூலை 2013 _ நவம்பர் 2013) பிரச்சினைகள், குழந்தைகள், பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரங்கள், அரசியல் நிகழ்வுகள், அதற்கான காரணங்கள், எதிர்கொள்ளும் விதம், அதற்கான தீர்வு அல்லது மக்களை விழிப்படையச் செய்யும் முறை என்ற நிலையில் அலசி ஆராயப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் ஊடகங்களில் வெளி வந்த செய்திகள் என்றாலும், மறுக்கப்பட்ட _ மறைக்கப்பட்ட உண்மைகள் பலவற்றைத் தாங்கி ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அமைந்துள்ளது.
குறும்படம்
பருவமழை பொய்த்து, விளைநிலங்கள் இன்று விலை நிலங்களாக உருமாறி வரும் சூழலில் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் _ விவசாயிகளின் உயிர்கள் பலியாகும் நிகழ்வினை எடுத்துக் காட்டியுள்ள படம்.
இளம் தலைமுறையினர் பணம் ஓரளவு கிடைத்தால் நிலத்தை விற்றுவிட்டு வேறு ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என நினைக்கின்றனர். ஆனால், மூத்த தலைமுறை விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு நிகராக தங்கள் உயிரையே எண்ணுகின்றனர்.
மழை வராதா என்று மனதில் புரையோடி நிற்கும் விவசாயிகளின் எண்ணத்திற்கு -_ ஏக்கத்திற்கு கனவில்தான் மழை பெய்கிறது. மழைத்துளிக்குப் பதில் கண்ணீர்த் துளிகளையும் தனது இரத்தத்தையும் விவசாயிகள் மண்ணில் சிந்தும் நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க உணர்த்தப்பட்டுள்ளது.