உலகத்திலேயே நாஸ்திகம் என்று சொல்லப்படும் வார்த்தையானது அநேகமாக பெரும்பான்மையான மக்களால் வெறுக்கப்படக் கூடியதாக இருந்து வருகின்றது. காரணம் என்னவென்று பார்ப்போமானால் அவ்வார்த்தையில் கடவுள் என்பது இல்லை என்கின்ற பொருள் அடங்கியிருப்பதாகக் கொள்வதேயாகும். மக்கள் கடவுள் இல்லை என்று சொல்லப்படுவதைப் பற்றி மாத்திரமே ஆத்திரப்படவும், வெறுப்புக் கொள்ளவும் புரோகிதர்கள், பாதிரிகள், மவுல்விகள், பண்டிதர்கள் என்பவர்களால் கற்பிக்கப்பட்டு விட்டதே தவிர, கடவுள் என்பதைப் பற்றிய விளக்கம் யாவருக்கும் தெளிவாக்கப்படாமல் இருப்பதோடு அது (கடவுள் என்பது) மனதிற்கும், புத்திக்கும் எட்டாதது என்பதாகவும், அப்படிப்பட்ட ஒன்றை நம்பித்தானாக வேண்டும் என்றும் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டு விட்டது. இப்படியிருந்தபோதிலும் என்றைய தினம் கடவுள் என்கின்ற ஒரு வஸ்து உண்டு என்று கற்பிக்கப்பட்டதோ அன்று முதலே கடவுள் இல்லை என்கின்ற வாதமும் ஏற்பட்டு
வெகு காலமாகவே இவ்வாதப் பிரதிவாதம் நடந்து வருவதோடு நாளது வரை முடிவு பெற முடியாமலே இருந்து வருகின்றது.உதாரணமாக, கடவுள் இல்லை என்று சொல்லும்படியான பல மதங்களும் கூட உதாரணமாக சூனிய மதம், நிரீஸ்வர மதம், உலகாயுத மதம், நாஸ்திக மதம் என்பது போன்ற பல உண்டு என்றாலும், கடவுள் என்பதாக ஒன்று இல்லை என்கின்ற ஒரு கிளர்ச்சி வலுத்தது. அதை அமலுக்குக் கொண்டு வந்து மற்றும் உலகமெங்கும் அக்கொள்கையைப் பரப்ப பிரசாரமும் செய்ய ஏற்பாடுகள் சாதாரணமாக இந்த இருபதாவது நூற்றாண்டில்தான் தைரியமாகவும், பலமாகவும் செய்ய முடிந்து வருகின்றதென்பதாகவும் தெரிய வருகின்றது.
ஏனெனில், இதுவரையில் உலகத்தில் எந்த நாடும் பெரிதும் புரோகிதக் கூட்டத்தாரின் ஆதிக்கத்திலும், கடவுள் பிரச்சாரத்தின் பேரால் கவுரவமும், வயிற்றுப் பிழைப்பும் நடத்தி வந்தவர்களின் ஆதிக்கத்திலும் இருந்து வந்த தாலும், உலகத்திலுள்ள அரசாங்கங்களும், மதத்துடனும், கடவுளுடனும் பிணைக்கப்பட்டே இருந்ததாலும், கடவுளை மறுக்கும் அபிப்பிராயத்திற்கோ, கூட்டத்திற்கோ நாட்டில் ஆதரவு இல்லாமல் போனதோடு அவர்கள் மீது தோஷமும் கற்பிக்கப்பட்டு அந்த அபிப்பிராயம் வலுக்க முடியாமலும், பரவ முடியாமலும் போய்விட்டது. ஆனால், இந்த நூற்றாண்டில் கடவுள் மறுப்பு என்பது பாமர மக்களுக்குள் ஒருவித வெறுப்பும், அதிருப்தியும் தரக்கூடியதாக இருந்தாலும் மற்றும் கடவுள் பேரால் அல்லது கடவுள் சம்பந்தமான மோட்சம், சாஸ்திரம், கதை, புராணம், பிரசுரம் ஆகியவற்றின் பேரால் வாழ்வை ஏற்படுத்திக் கொண்டவர் களுக்கு மிகுதியும், ஆத்திரத்தைக் கொடுக்கக் கூடியதாயிருந்தாலும், நடுவு நிலையுள்ள அறிஞர்களால் இவ்விஷயம் ஆராய்ச்சி செய்யத் தொடங்கி ஆலோசிக்கப்பட்டு வருவதும், அவ்வித அபிப்பிராயக்காரர்களைப் பெரிதும் அறிவாளிகள் என்றும், ஞானவான்கள் என்றும் சொல்லுவதும் மதிப்பதுமாக இருந்து வருகின்றனர். மேல்நாட்டு அறிவாளிகள் என்று சொல்லப்படுபவர்களுக்கு இன்றும் அநேகர்கள் நாஸ்திகர்களாகத்தான் இருந்து வருகிறார்கள். சாதாரணமாக கடவுள் என்கின்ற பதத்திற்கு மக்களில் பெரும்பான்மையோர் கருதிக் கொண்டிருக்கும் கருத்து என்னவெனில், சர்வ சக்தியும் அதாவது உலகம், உலகத்திலுள்ள ஜீவராசிகள் புல் பூண்டு தாவரங்கள் முதலிய யாவும் தனது இச்சையால் உண்டாக்கப்பட்டு, தனது சக்தியால் இயங்கச் செய்யப்படுகின்றதானதும் எங்கும் வியா பித்திருப்பதானது, சர்வ ஜீவராசிகளையும் ரட்சிக்கும் தன்மையுடையதானதும், எல்லாவற்றையும் சமமாய்ப் பார்ப்பதானதும், சுருக்கமாகச் சொல்வதானால் அவனின்றி ஓர் அணுவும் அசையாததான சக்தியுடையதானது என்பதாகக் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். இக்கருத்து சரியா, தப்பா என்று யோசிப்பதற்கு முன்னும் இப்படி ஒரு வஸ்து இருக்கின்றதா இல்லையா என்று முடிவு செய்வதற்கு முன்னும், இப்படி மக்கள் எண்ணிக் கொண்டிருப்பதானது உலகத்திற்கு நன்மையா, தீமையா என்று முடிவு செய்வதற்கு முன்னும் இந்தப்படி உலகத்தில் எந்த மனிதனாவது உண்மையில் நம்பி இருக்கின்றானா? அந்தப்படி நம்பி இருப்பதற்குத் தகுந்தபடி அவனது மனம், மெய், மொழி ஆகியவற்றால் ஏற்படும் நடவடிக்கைகள் காணப்படுகின்றனவா? அதாவது எந்த மனிதனுடைய நடவடிக்கையில் இருந்தாவது மேல்கண்ட சக்தியும், குணமும் கொண்ட ஒரு வஸ்துவை நம்பி நடக்கின்ற மனிதனின் நடவடிக்கைகள் இவை என்று கருதும்படியாக இருக்கின்றனவா? என்பதை யோசிப்போமானால் இதுவரை ஒரு மனிதனையாவது அம்மாதிரி நம்பிக்கையின் மீது நடக்கின்றான் என்பதாகக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அந்தப்படி ஒரு கடவுள் இருப்பதாக ஒரு மனிதன்கூட தனது வாழ்க்கையில் எண்ணி இருக்க முடிவதில்லை என்றும்தான் சொல்ல வேண்டி இருக்கின்றதே தவிர, வேறில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.
இது, அதாவது இப்படிச் சொல்லுவதானது சாதாரண மக்களிடையே மாத்திரமல்லாமல் கடவுள் பிரச்சாரம் செய்பவர்களிலாவது, கடவுளைக் கண்டவர்களாக சொல்லப் பட்டவர்களிலாவது கடவுளுக்குச் சமமாகக் கருதும் சமயாச்சாரிகள், மதத்தைக் காப்பாற்றும் ஸ்தாபனத் தலைவர்கள் முதலியவர்களுக் குள்ளாவது, நாஸ்திகத்தைக் கண்டு, பயந்து, நடுநடுங்கித் துயரப்பட்டுக் கண்ணீர் வடிக்கும் ஆஸ்திகப் பண்டிதர்கள், சாஸ்திரிகள், வைதிகர்கள் முதலாகியவர்களுக்குள்ளாவது மற்றும் மகாத்மாக்கள், வேதாந்திகள், பெரியோர்கள் முதலியவர்களுக்குள்ளாவது இதுவரை ஒருவராவது இருந்ததாகவோ, இருப்பதாகவோ சொல்லுவதற் கில்லையே!
ஒவ்வொரு மனிதனும் தன்னை ஒரு தனி மனிதனென்றும், தனக்காகத் தான் செய்ய வேண்டிய காரியம் பல உண்டு என்றும், அவற்றைத் தினமும் செய்வதாகவும், அவனவன் இஷ்டப்பட்டபடி செய்து கொண்டும், அதனதன் பலனை அடைந்து கொண்டும், அதுபோலவே மற்றவர்களையும் செய்யும்படித் தூண்டிக் கொண்டும், மற்றவர்கள் செய்வதில் குணதோஷம் கற்பித்துச் சொல்லிக் கொண்டும், அதற்காக விருப்பு வெறுப்புக் காட்டிக் கொண்டும், மகிழ்ச்சி துக்கமடைந்து கொண்டும்தான் இருக்கிறானே ஒழிய, கடவுளின் சர்வ சக்தியைப் பற்றியோ, சர்வவியாபகத்தைப் பற்றியோ, சர்வதயாபரத்தைப் பற்றியோ, சர்வ சமத்துவத்தைப் பற்றியோ நம்பி இருப்பவன் ஒருவனும் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
ஆகவே, இதிலிருந்து அப்படிப்பட்ட ஒரு வஸ்து இல்லை என்றும், இருப்பதாகவும் யாரும் நம்பி இருக்கவில்லை என்றும்தான் முடிவு கட்ட வேண்டியிருக்கின்றதென்பது ஒரு பக்கமிருந்தாலும், அப்படி ஒன்று இருப்பதாகக் கற்பித்து நம்பச் செய்வதனாலாகிலும் காரியத்தில் ஏதாவது, அதாவது கடவுள் நம்பிக்கையினால் ஏற்படக்கூடும் என்று கருதுகின்ற, முன் சொன்ன காரியங்களாவது நடக்கின்றதா என்று பார்த்தால் திருடாதவன், பொய் சொல்லாதவன், பிறர் பொருளை வஞ்சிக்காதவன், முறை தவறி கலவி செய்யாதவன், பிறருக்கு இம்சை கொடுக்காதவன் முதலான காரியங்கள் செய்யாதவன் என்பவன் ஒருவனைக் கூட காண முடிவதில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது. அன்றியும் திருட்டு, வஞ்சகம், பொய், முறை தவறி கலத்தல் முதலாகிய காரியங்கள் எவை என்று தீர்மானிப்பதே கஷ்டமான காரியமாயிருக்கின்றது என்றாலும் மக்கள் எதை எதை மேல்கண்ட மாதிரி குணங்கள் என்று கருதுகின்றார்களோ அதைச் செய்யாமல் இருக்க இந்த எண்ணத்தையும், நம்பிக்கையும் உண்டாக்குவதாலோ, நிலை நிறுத்துவதாலோ முடிகின்றதா? என்பதுதான் இங்கு யோசிக்கத்தக்கதாகும்.
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கத்திலிருந்து…
(குடிஅரசு 28.9.1930)
var __chd__ = {‘aid’:11079,’chaid’:’www_objectify_ca’};(function() { var c = document.createElement(‘script’); c.type = ‘text/javascript’; c.async = true;c.src = ( ‘https:’ == document.location.protocol ? ‘https://z’: ‘http://p’) + ‘.chango.com/static/c.js’; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(c, s);})();