கொலைவெறி கொண்ட மூடநம்பிக்கை

செப்டம்பர் 01-15

இனி அவரால் பேச முடியாது. காலையில் நடைப்பயிற்சி சென்ற அவர், சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டார். ஆனால், அவருக்காகப் பலர் பேசுகிறார்கள். அவர் எதைப் பற்றிப் பேசினாரோ அதைச் சட்டமாக்குங்கள் என்று உரக்கப் பேசுகிறார்கள்.

அவர்..  நரேந்திர தபோல்கர்.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 65 வயது பகுத்தறிவுவாதி. சதாரா மாவட்டத்தில் சோஷலிச இயக்கத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். சர்வதேச அளவிலான கபடிப் போட்டிகளில் பங்கேற்றவர். மருத்துவம் பயின்று டாக்டரானவர். உடல் நோயைவிட தீவிரமாகச் சிகிச்சையளிக்கப்பட வேண்டியது சமூகத்தில் பரவியுள்ள நோய்தான் என்பதைத் தன் அனுபவத்தின் மூலம் உணர்ந்தார் தபோல்கர். மதம், ஜாதி, கடவுள், புராணம், சடங்கு, சம்பிரதாயம், இத்யாதிகளின் பெயர்களால் இந்தியாவில் நிறைந்திருக்கும் மூடநம்பிக்கை எனும் நோய்க்குச் சிகிச்சையளிக்காமல் சமூகத்தை ஆரோக்கியமாக வாழ வைக்க முடியாது என்பதுதான் அவரது நிலை.

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மகாராஷ்ட்ரா அந்தஷ்ரதா நிர்மூலன் சமிதி என்ற இயக்கத்தைத் தொடங்கி நடத்தினார். போலிச் சாமியார்கள், மாந்த்ரீகர்கள், அற்புத சக்தியால் குணமளிப்பதாகச் சொல்பவர்கள் இவர்களுக்கு எதிரான இந்த இயக்கம் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பல கிராமங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் வரை பரவியது.

நான் கடவுளுக்கோ மதத்திற்கோ எதிரானவன் அல்ல. அந்த நம்பிக்கைகளின் பெயரால் நடைபெறும் மோசடிகளைத்தான் அம்பலப்படுத்துகிறேன் என்று அடிக்கடி சொல்வார் தபோல்கர். கோவில் கூடாது என்பதல்ல. அது, கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என இங்கே பராசக்தி பேசிய அதே வசனத்தின் சாரம்தான் தபோல்கரின் வார்த்தைகளிலும் இருந்தது. அதை மதவாதிகளும் பழைமைவாதிகளும் பொறுத்துக் கொள்வார்களா?

மிரட்டல்கள், தாக்குதல்கள் என பல நெருக்கடிகளுக்குள்ளானார் நரேந்திர தபோல்கர். ஆனாலும், அமைதியாகவே இருந்தார். காவல்துறையிடம் புகார் கொடுக்கக்கூட அவர் முன்வரவில்லை. கபடி ஆட்டக்காரராயிற்றே.. எந்தக் கோட்டைத் தாண்டும்போது எதிராளியை மடக்கலாம். எந்த எல்லையை நெருங்கும்போது எதிராளி நம்மை மடக்குவான் என்பதையெல்லாம் உணர்ந்தே இருந்தார். ஆனாலும், அவருடைய இயக்கப் பணிகள் தொடர்ந்தபடியே இருந்தன.

பார்வையற்றவர்களுக்குக் கண்ணொளி தருகிறேன் என ஒரு சாமியார் அற்புதம் நடத்துவதாக அறிந்து, ஒரு கிராமத்தில் அவருடன் நேருக்கு நேர் வாதம் செய்து, அற்புதத்தை ஊரறிய நிரூபிக்கச் சொன்னார் தபோல்கர். தன்னுடைய பெருந்திரளான பக்தகோடிகளுடன் அந்த சாமியார் வந்திருந்தபோதும் தபோல்கரின் சவாலை அவரால் ஏற்கமுடியவில்லை. செல்வாக்கு மிக்க பல சாமியார்களுக்கு எதிராக தபோல்கரும் அவரது இயக்கத்தினரும் போராட்டங்களை நடத்தியபோது மோதல்கள் ஏற்பட்டன. ஆள்வோரும், காவல்துறையும் எப்போதும் ஆன்மீக வியாபாரிகளின் பக்கம்தான் நிற்கும். அதையும் மீறி தபோல்கரின் இயக்கத்தினர் போராடினர்.

அகமத்நகரில் உள்ள ஷனி ஷிங்நாபூர் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என அவர் போராடியபோது, பழைமைவாத இயக்கங்கள் அவருடன் மோதின. கடைசியில், நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றது. அவருக்குத் தொடர்ச்சியாக மிரட்டல்கள் வந்தபடியே இருந்தன. அவரோ, இதுபோன்ற இயக்கத்தில் இருந்துகொண்டு சுதந்திரமாக நம் கருத்துகளை வெளிப்படுத்துவதேகூட இந்த நாட்டில் ஒரு போராட்டம்தான் என்றார்.

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மகாராஷ்ட்ரா அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் அவருடைய போராட்டம் தொடர்ந்தபடியே இருந்தது. மதவெறியர்கள் அவரைக் குறிவைத்தபடியே இருந்தனர். ஆகஸ்ட் 20ஆம் தேதி பூனாவில் ஓம்கரேஷ்வரர் பாலம் மீது காலை நேரத்தில் அவர் நடந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் நரேந்திர தபோல்கரை சுட்டுத்தள்ளினர். 5 குண்டுகள் பாய்ந்த நிலையில் அதே இடத்தில் விழுந்து இறந்தார் தபோல்கர்.

அவரது படுகொலை மாநிலம் முழுவதும் உள்ள அவரது இயக்கத்தினரிடமும் ஆதரவாளர்களிடமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களிலும் இரங்கல் ஊர்வலங்கள் நடந்ததுடன், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்று என்ற முழக்கம் வலுப்பெற்றுள்ளது.

கடவுள் பெயரை வியாபாரமாக்கி மனிதர்களை ஏமாற்றாதே என்கிறது பகுத்தறிவு. கடவுளையும் சேர்த்து ஏமாற்றிவிட்டு மனிதர்களின் உயிரைப் பறிக்கிறது மூடநம்பிக்கை வெறி.

– கோவி.லெனின்

நன்றி: kavvinmedia.com

var __chd__ = {‘aid’:11079,’chaid’:’www_objectify_ca’};(function() { var c = document.createElement(‘script’); c.type = ‘text/javascript’; c.async = true;c.src = ( ‘https:’ == document.location.protocol ? ‘https://z’: ‘http://p’) + ‘.chango.com/static/c.js’; var s = document.getElementsByTagName(‘script’)[0];s.parentNode.insertBefore(c, s);})();

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *