மீண்டும் தேவதாசி முறையா?

ஆகஸ்ட் 16-31 - 2013

முன்பு தேவதாசி முறையினால் பரதநாட்டியம் வளர்ந்து வந்தது. அரசியல் காரணங்களுக்காக தேவதாசி முறையை ஒழித்துவிட்டார்கள் என்று கவலைப்பட்டிருக்கிறார் ஒருவர். பரதநாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்றவரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான சொர்ணமால்யா தான் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை சார்பாக நடத்தப்பட்ட பரத நாட்டியம் தொடர்பான கருத்தரங்கத்தில் இப்படிப் பேசியிருக்கிறார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே எதிர்ப்பும் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கத்து. கூட்டத்தில் அவர் பேசிய கருத்துகள் குறித்து கண்டனங்களும் விவாதங்களும் இணையதளங்களில் தொடர்ந்து எழுந்தன.  இது குறித்து பேராசிரியர் அ.மார்க்ஸ் தனது முகநூல் பதிவில் பல தகவல்களைத் தந்துள்ளார். அதன் முக்கியப் பகுதிகள்:-  தேவதாசி முறை குறித்து நாம் சிலவற்றை நுணுக்கமாகப் புரிந்து கொள்வது அவசியம்:

 

1.பரத்தமை, பொதுமகளிர், வரைவின் மகளிர், பிற்காலத்திய தேவதாசியர் ஆகியோருக்கிடையே உள்ள நுணுக்கமான வேறுபாடுகள் முக்கியம். சோழர் காலத்தில் கோவில்கள் என்கிற நிறுவனம் அரசதிகாரத்தின் பிரிக்க இயலாத ஓரங்கமாக மாறியபோது தேவதாசிமுறை கோவில் நிர்வாகத்தின் பகுதியாக நிறுவன மயப்படுத்தப்பட்டது. தளிச்சேரிப் பெண்டுகள் முதலான பெயர்களில் தேவதாசியர் அழைக்கப்பட்டனர். ராஜராஜ சோழன் தஞ்சையில் கட்டிய பெருவுடையார் கோவிலுக்கென நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஓலை அனுப்பிக் கட்டாயமாக 400  பெண்களைக் கொணர்ந்து அவர்களைத் தேவதாசியராக்கிய வரலாற்றை நாம் அறிவோம்.

2.இவர்கள் பல்வேறு ஜாதிகளிலிருந்து வந்த போதும் பின்னாளில் இவர்களே ஒரு ஜாதியாயினர். தமிழக ஜாதிகள் பலவும் காலப்போக்கில் இப்படியெல்லாம் உருவானவைதானே. பிற மொழிக் கலப்பு உட்பட எல்லா ஜாதிகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் இதிலும் நிகழ்ந்தன. சின்னமேளம், பெரியமேளம் முதலான பிரிவுகளும் உருவாயின. முதலியார், பிள்ளை முதலான பட்டப் பெயர்களையும் இவர்களும் பயன்படுத்திக் கொண்டனர். பின்னாளில் இவர்கள் அனைவரும் நவீன அரசுப் பதிவுகளில் இசை வேளாளராகக் குறிக்கப்பட்டனர்.

3.மத்திய காலத்தில் ஏற்பட்ட வேலைப் பிரிவினைகளின் ஊடாக சிலப்பதிகாரக் காலம் தொடங்கி வளர்ந்து வந்த தமிழின் வளமான இசை மற்றும் நாட்டியப் பாரம்பரியத்திற்கு உரியவர்களாக இவர்கள் ஆயினர். காலங்காலமாக இவற்றைக் கையளித்துக் காப்பாற்றிய பெருமை இவர்களுக்குண்டு. தஞ்சை நால்வர், பாலசரஸ்வதி தேவி, வீணை தனம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி எனப் பலரையும் சொல்லலாம் என்று குறிப்பிட்டுள்ள பேராசிரியர் அ.மார்க்ஸ், தமிழர்களின் கலை எப்படி பார்ப்பன மயமாக்கப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக் கூறியுள்ளார்.

சென்ற நூற்றாண்டில் நம் தமிழ் இசையும், தேவதாசியரால் காப்பாற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டிய மரபும் (சதிர்) இங்கே கர்நாடக சங்கீதமாகவும், பரத நாட்டியமாகவும் உருமாற்றப்பட்டது. இதில் பார்ப்பனர்களின் கைவரிசையை விளக்க வேண்டியதில்லை. பத்மா சுப்பிரமணியம் போன்றோர் இதில் பெரும் பங்கு வகித்தனர். தேவதாசி மரபில் வந்த கலை என்கிற உண்மை இவர்களுக்கு இழுக்காக இருக்கும் என்பதால், தேவதாசியரின் பங்கு இவர்களால் மூடி மறைக்கப்பட்டது. சதிர் பரதமாகியது.

எனவே, இந்தக் கலையின் தமிழ் வேர்களை யும், இதைக் காப்பாற்றி வந்ததில் தேவதாசியரின் மரபையும் நாம் அழுத்திச் சொல்ல வேண்டி யுள்ளது என்று குறிப்பிடும் அ.மார்க்ஸ், கல்வித் தளத்தில் தேவதாசி முறை குறித்த பல்வேறு ஆய்வுகளும், நூல்களும் வந்திருப்பதையும் எடுத்துக்காட்டி, ஆய்வு செய்யக்கூடாது என்று யாரையும் நாம் தடுக்கக் கூடாது. கல்வி நிறுவனங்களில் கல்விச் சுதந்திரம் (ணீநீணீபீமீனீவீநீ யீக்ஷீமீமீபீஷீனீ) என்பது முக்கியம். அதே நேரத்தில் தேவதாசிமுறையை உன்னதப்படுத்தியும், அதை ஒழித்துக் கட்டிய திராவிட இயக்கத்தின் பங்கைக் கொச்சைப்படுத்திப் பேசும் யாரையும் நாம் கண்டிக்கத் தவறவும் கூடாது என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

நக்கீரன் இணையதளத்தில் சொர்ணமால் யாவின் கருத்தையொட்டி இதழாளர் கோவி.லெனின் எழுதியுள்ள கட்டுரையில், தேவதாசியாக ஒரு பெண் நியமிக்கப்படுகிறார் என்றால் அந்தப் பெண்ணின் பாட்டியும் தேவதாசியாக இருந்திருப்பார். அதன்பின் அவரது அம்மாவும் தேவதாசிதான். அந்தப் பெண்ணுக்கு ஒரு மகள் பிறந்தாலும் அதே நிலைதான். கடவுளின் பெயராலும் ஆன்மீகத்தின்  பெயராலும் பரம்பரை பரம்பரையாக பாலின இழிவையும் பாலியல் கொடுமையையும் அவர்கள் அனுபவித்து வந்தார்கள். சமுதாயத்திலும் தாசிகள் என அவர்களுக்கு இழிவான பெயரே இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மூவலூர் ராமாமிர்தம், டாக்டர் முத்துலெட்சுமி (ரெட்டி) உள்ளிட்டவர்கள் இந்த தேவதாசி முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். பல தலைவர்களின் ஆதரவைப் பெற்றனர். குறிப்பாக, பெரியாரின் ஆதரவு அவர்களுக்குக் கிடைத்தது.  சென்னை மாகாணத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்றத்தின் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் முத்துலெட்சுமி, தேவதாசி முறையை சட்டப்பூர்வமாக ஒழிப்பதற்கான மசோதாவை 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் நாள் சென்னை மாகாண சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். இந்த மசோதாவைப் பற்றியும் அதனை நிறைவேற்றுவது பற்றியும் பெரியார் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் ஏற்கனவே ஆலோசனை நடத்தியிருந்தார். எனினும், தேவதாசி முறையை ஒழிப்பதற்கு சட்டமன்றத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. மசோதாவை எதிர்த்துப்பேசிய காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி, தாசி (தேவதாசி) குலம் தோன்றியது நம்முடைய  காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பலருக்கு இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது. சமூகத்திற்கு தாசிகள் தேவை என்பதை திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். தாசிகள் கோவில் பணிகளுக்கென்றே படைக்கப்பட்டவர்கள் என்றார்.

கோவிலின் பெயரால், பாலியல் கொடுமையை சமூக வழக்கமாக்கி வைத்திருந்த ஆதிக்க சக்திகளிடமிருந்து பெண்களை மீட்டது தேவதாசி ஒழிப்பு மசோதா. தேவதாசி முறையை ஒழித்தால் பரதநாட்டியம் ஒழிந்துவிடும் என அன்று சத்தியமூர்த்தி பேசினார். அதே கருத்தைத்தான் இன்று கவலையோடு பேசியிருக்கிறார் சொர்ணமால்யா. சென்னை மாகாணத்தில் அப்போதே தேவதாசி முறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டாலும் இந்தியாவின் பிற பகுதிகளில் அது தொடர்ந்தது. சில சமூகங்களில் வெவ்வேறு பெயர்களில் அது கடைப்பிடிக்கப்பட்டது. இந்த  வழக்கத்தை முற்றிலும்  ஒழித்து, அந்தப் பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை அரசும் அரசு சாரா நிறுவனங்களும் பல மாநிலங்களில் மேற்கொண்டு வருகின்றன. மும்பை அதற்கோர் உதாரணம்.

ஸ்வேதா கட்டிக்கு இப்போது 18 வயதுதான். மும்பையின் பிரபல சிவப்பு விளக்குப் பகுதியான காமத்திபுராவில் ஒரு  தேவதாசிப் பெண்ணின் மகளாகப் பிறந்தவர். மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் தேவதாசியாக்கப்பட்டு, தன் அம்மா படும் பாலியல் கொடுமையைக் கண்டு ஸ்வேதா பயந்தார். அவரது தாய் வந்தனாவும் தனக்கு நேரும்  கொடுமைகள்  தன் மகளுக்கு நேர்ந்துவிடக்கூடாது என நினைத்தார்.

அருகிலுள்ள ஒரு நகராட்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஸ்வேதா, சின்ன வயதிலிருந்தே நன்றாகப் படித்துவந்தார். பின்னர் அப்னே ஆப் க்ரண்ட்டி ஆகிய அமைப்புகளின் உதவியுடன் அமெரிக்காவுக்குச் சென்று படிக்கும் வாய்ப்பைத் தற்போது பெற்றிருக்கிறார் ஸ்வேதா. உலகம் முழுவதுமிருந்தும் 200க்கும் அதிகமானவர்கள் ஸ்வேதாவின் கல்விக்காக நிதியுதவி அளித்துள்ளனர். அதன் மூலமாக அமெரிக்காவில் உளவியல் துறையில் படிக்கப் போகிறார் ஸ்வேதா. அவருக்கு சக மாணவிகளின் வாழ்த்துகள் குவிந்தபடி இருக்கின்றன.

ஸ்வேதாவின் அம்மா வந்தனா, அவள் அங்கே என்ன படிக்கப்போகிறாள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவளை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவள் என்கூட இருக்கப்போவதில்லை என்பது புரிகிறது. ஆனாலும்  அவளது நிலை கண்டு நான் மனரீதியாக பலமடைந்துள்ளேன் என்று சொல்லியிருக்கிறார். தன்னுடன் தனது குடும்பத்தைப் பீடித்திருந்த இந்த தேவதாசி கொடுமை முடிவுக்கு வந்துவிட்டது என்பதையும், தன் மகள் இந்தப் பாழுங்கிணற்றில் விழவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுவதுபோல இருந்திருக்கிறது வந்தனாவின் குரல்.

அன்று மூவலூர் ராமாமிர்தமும், டாக்டர் முத்துலெட்சுமியும் இழிவுபடுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்தவர்கள். அந்த இழிவை எதிர்த்துப் போராடினார்கள். வென்றார்கள். ஆனால் சத்தியமூர்த்தி போன்றவர்கள், தேவதாசி முறை ஒழிக்கப்பட்டால் பரதநாட்டியம் ஒழிந்துவிடும் என்றார்கள். இன்று வந்தனாவும் அவர் மகள் ஸ்வேதாவும் தேவதாசி குலத்திலிருந்து மீள்வதற்குப் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால் சொர்ணமால்யா போன்றவர்கள், தேவதாசி முறை ஒழிக்கப்பட்டதால் பரதநாட்டியம் வளரவில்லை எனக் கவலைப்படுகிறார்கள். தேவதாசிகள் என்ற முறை எதற்குப் பயன்பட்டது, பயன்படுகிறது என்பதற்கு ரத்தமும் சதையுமாக சாட்சிகளாக இருக்கிறார்கள் வந்தனா போன்றவர்கள்.

சத்தியமூர்த்தியைப் பார்த்து டாக்டர் முத்துலெட்சுமி, கடவுளுக்கும் கலைக்கும் தொண்டு செய்ய வேண்டுமென்றால் அந்தத் தொண்டினை உங்கள் சமூகம் உள்பட மற்ற குலத்துப் பெண்கள் ஏன் செய்யக்கூடாது? என்று சட்டமன்றத்தில் சத்தமாகக் கேட்டார். சொர்ணமால்யாக்களைப் பார்த்து வந்தனாவும் ஸ்வேதாவும் கேட்காமல் கேட்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *