உலகப்பொதுமறை
திருக்குறள் நூல் உலகப் பொது மறை என்று தமிழர்களால் வலியுறுத்தப்படுகிறது.அதனை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்றும் நாம் குரல்கொடுத்து வருகிறோம்..நீதிமன்றங்களில் கீதையின் பெயரால் உறுதிமொழி எடுப்பதற்குப் பதிலாக திருக்குறளை பயன்படுத்த வேண்டும் என்றும் நீண்ட காலமாக குரல் கொடுத்தும் இன்னமும் அது நடைமுறைக்கு வரவில்லை. ஆனால், கனடாவில். ஒரு பெண் திருக்குறளின் மீது உறுதிமொழி எடுத்து பதவியேற்று சாதனை புரிந்திருக்கிறார். கனாடாவின் மர்கம் (markham asea – 4) பகுதியில் பொதுப்பள்ளி வாரியத்துக்கான 2010 – தேர்தலில் போட்டியிட்ட ஜூனிதா நாதன் அவர்கள் 60 விழுக்காடு வாக்குகள் பெற்று, வெற்றி பெற்று கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி உறுப்பினர் பதவி ஏற்றுக் கொண்டார்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக ஒரு தமிழ்ப்பெண் (ஜூனிதா நாதன்) போட்டியிட்டு பெற்றி பெற்றது ஒரு சாதனையாகப் போற்றப்படுகிறது. அதைவிடச் சிறப்பு, அவர் திருக்குறளின் மீது உறுதிமொழி கூறி பதவி ஏற்றுக் கொண்டதுதான்.
– உடுமலை வடிவேல
சிலைக்குப் பூசை செய்பவனல்ல நான்
ஷோலாப்பூருக்குச் செல்லும் முன்பாக பண்டரிபுரம் ஆலயத்தைப் பார்த்துவிட்டு வந்து அங்கு கூடியிருந்த 25,000 மக்கள் முன்பு பிரதமர் நேரு கூறியதாவது: நான் சிலை வணக்கத்துக்காக கோயிலுட்புகவில்லை. சிலையைப் பூசிக்கும் வழக்கம் என்னிடம் கிடையாது. இந்நாட்டு மக்களாகிய 36 கோடி தெய்வங்கள் கொண்ட அந்தப் பிரமாண்டமான கோயிலையே பூசித்து வருகிறேன் என்று குறிப்பிட்டார்.
விடுதலை 1.5.1953
ஆதரவற்ற பெண்களின் நிலை
டெல்லி போன்ற பெருநகரங்களில் ஆதரவற்ற பெண்கள் சாலையோரங்களில் பிரசவிப்பது அதிகமாகிவிட்டது. 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் லட்சுமி என்ற பெண் சாலையோரத்தில் பெண் குழந்தையைப் பிரசவித்து, ஆதரவில்லாததால் அப்பெண் இறந்துவிட்டார். குழந்தை காவல்துறையினால் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தேசிய மனித உரிமை ஆணையத்தில், மெட்ரோ நகரங்களில் ஆதரவற்ற பெண்கள் அதிகரித்து வருவதாகவும், அவர்களில் பலர் சாலையோரங்களில் பிரசவித்து இறப்பதாகவும் வழக்குரைஞர் ஒருவர் மனு தாக்கல் செய்தார். மனுவினை விசாரித்த ஆணையம், டில்லி அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
ஆதரவற்ற லட்சுமிக்குப் பிறந்த குழந்தை, தொண்டு நிறுவனம் நடத்தும் குழந்தைகள் காப்பகத்தில் நன்கு பராமரிக்கப்பட்டு வருவதாக டெல்லி அரசு மற்றும் போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.
ஆதரவற்ற பெண்கள் எல்லோருக்கும் பாதுகாப்புக் கொடுப்பது என்பது அரசாங்கத்திற்கு முடியாத செயல். மக்களும், சமூக நல ஊழியர்களும் இவர்களின் நிலைமை குறித்து அக்கறையுடன் செயல்பட்டால் மட்டுமே இந்த நிலைமை மாறும் வாய்ப்பு உள்ளது. லட்சுமிக்குப் பிறந்த குழந்தையை வளர்ப்பதில் டில்லி அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்து அரசின் தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.