அய்யாவின் அடிச்சுவட்டில்… 100

ஆகஸ்ட் 16-31 - 2013

’அவசரநிலைப் பிரகடனம்’ – நடந்தது என்ன? – கி.வீரமணி

கடந்த 38 ஆண்டுகளுக்கு முன் அவசர நிலை எனும் இருண்ட காலத்தில்,  கழகப் பொதுச் செயலாளராகிய நான் உள்பட, எப்படி திராவிடர் கழகத் தோழர்கள் தமிழ்நாட்டில் வேட்டையாடப்பட்டனர் என்பதையும், விடுதலை ஏட்டின் மீது பார்ப்பனக் கத்திரிக்கோல் பாய்ந்து, பார்ப்பன அதிகாரிகள் தடை போட்ட வரலாற்றையும் விளக்க விரும்புகிறேன்.

அவசர நிலைப் பிரகடனத்தின் முக்கியக் காரணம் என்ன?, என்பது குறித்து எழுதுவது இங்கு அவசியமாகிறது. ஏனெனில், மிசாவைப்பற்றி வாசகர்கள்  தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம் என்பதால் அதிலிருந்து தொடங்குகிறேன்…..

அலகாபாத் என்ற பெயருக்கு எப்போதுமே ஒரு முக்கியத்துவம் உண்டு. 1975ஆம் ஆண்டு இதே அலகாபாத் ஒரு திருப்புமுனையான தீர்ப்பை அளித்தது; அந்தத் தீர்ப்பு இந்திய அரசியல் மாற்றத்தையே ஏற்படுத்திய தீர்ப்பு!

ஆம்! அலகாபாத் உயர் நீதிமன்றம் ரேபரேலி தொகுதியிலிருந்து இந்திராகாந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்பளித்தது. 1975ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி இந்தத் தீர்ப்பு வந்தது. 13ஆம் தேதியிலிருந்து, டெல்லியில் மிகப் பெரும் சதித் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இந்திராகாந்தி பதவி விலகக் கூடாது என்று மக்கள் கருதுவதுபோல் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள்! டெல்லி போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் எல்லாம் திருப்பி விடப்பட்டு, ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்து, இந்திராகாந்தி அம்மையாரின் வீட்டின்முன் குவித்தார்கள்! அவர்கள் இந்திராவுக்கு ஆதரவு தரும் மக்கள் என்று பிரச்சாரம் செய்தார்கள்! டெல்லி போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான 983 பேருந்துகளும், டெல்லி மாநகர வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான டிரக்குகளும் இந்தப்  பணிக்குப் பயன்படுத்தப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்காரர்களும் அரசாங்க ஊழியர்களும் இந்தப் பேருந்துகளில் ஏற்றப்பட்டு இந்திராகாந்தியின் வீட்டின்முன் இறக்கிவிடப்பட்டனர். ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், உ.பி. மாநிலங்கள் வரை இந்தப் பேருந்துகள் அனுப்பப்பட்டு, ஆட்கள் பிடித்து வரப்பட்டார்கள். சிவப்பு விளக்குப் பகுதிகளில் உள்ளவர்களைக்கூட விட்டுவைக்கவில்லை. நாள்தோறும் இந்திராவின் வீட்டின்முன், இந்தக் கூட்டம் குவிக்கப்படுவதும், அவர்களை இந்திராவுக்கு ஆதரவாக முழக்கமிடச் செய்வதுமான நாடகம் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது. இன்னொரு பக்கம் திரைமறைவில் ரகசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளும், டெல்லி  காவல்துறையின் சிறப்புப் பிரிவினரும் கைது செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலைத் தயாரித்துக் கொண்டிருந்தனர். முக்கியத் தலைவர்களின் வீடுகளும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களின் தொலைப்பேசிகள் துண்டிக்கப்பட்டன.

தலைநகரம் முழுதும் ஒரே பதட்டம்; தீர்ப்பு வெளியான 13 நாட்களுக்குப் பிறகு ஜூன் 25ஆம் தேதி உள்நாட்டு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதாவது, இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் இதன்மூலம் பறிக்கப்பட்டன.
அதேபோல் பத்திரிகைகள் அன்றைய தினம் வெளிவராமல் இருப்பதற்கும் அவசரமான ஏற்பாடுகள் நடந்தன.

இந்தியாவில் 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையில் சிறைப்படுத்தப்பட்ட அரசியல்வாதிகளும், ஜனநாயகவாதிகளும், பகுத்தறிவுவாதிகளும் சிறைச்சாலைக்குள் எல்லை மீறிய இன்னல்களை எதிர்கொண்டனர். இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட நள்ளிரவு வேளையிலேயே நெருக்கடி நிலையை எதிர்க்கக்கூடும் எனக் கருதப்பட்ட அரசியல் கட்சியினரும் ஜனநாயக அமைப்புகளின் பிரதிநிதிகளும் சிறைகளில் அடைக்கப்பட்டனர். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை நிகழ்த்தக் கூடியவர்கள் என்ற சட்டப் பிரிவுகள் அவர்கள்மேல் பதிவு செய்யப்பட்டன. தமிழகத்தில் ஆட்சியிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் 1976 ஜனவரி 31ஆம் நாள் கலைக்கப்பட்டவுடன் தி.மு.க. கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும், திராவிடர் கழக முக்கியப் பொறுப்பாளர்கள் சிலரையும் என்னையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 1976 பிப்ரவரி 2ஆம் தேதி எங்களைச் சிறைச்சாலையில் இரவு 9 மணிக்கு மேல் திறந்து அடித்து வதைத்தனர்.

சென்னை மத்திய சிறையிலுள்ள சிறிய அறைகளில் எட்டுப் பேர் அடைக்கப்பட்டதில் தொடங்கி, வேப்ப எண்ணெய் கலந்த உணவை வழங்குதல், திடீர்த் தாக்குதல்கள், மருத்துவச் சிகிச்சை மறுப்பு, உறவினர்கள் பார்க்க அனுமதி மறுப்பு, நடமாடக்கூட அனுமதி மறுப்பு என சிறைக்குள் நெருக்கடி நிலை எதிர்ப்பாளர்கள் மிகக் கொடுமையாக நடத்தப்பட்டனர்! அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட நாளான 1975 ஜூன் 25ஆம் தேதியன்று டில்லியில் என்ன நடந்தது? அப்போது டில்லியின் உயர் அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவசர நிலைப் பிரகடனத்திற்குப் பின்னணியில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதுபற்றி  டைம்ஸ் ஆப் இந்தியா என்ற  பத்திரிகை வெளியிட்ட தகவல்களை  அப்படியே இங்கு தருகிறேன்.

பிரதமர் இந்திராவின் தேர்தல் செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்திரா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒருமுகமாகச் சேர்ந்து ஜூன் 29, 1975ஆம் நாளன்று ஒரு போராட்டத்தைத் தொடங்க இருந்தன.

இதற்கிடையில் பதவியை எப்படியும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற வெறியில் இந்திராவும் அவரது எடுபிடிகளும் திட்டமிட்டனர். தனக்கு மிகவும் நம்பிக்கையான சிலருடன் கலந்து இந்திரா இதற்கான திட்டம் வகுத்தார். இதன் முடிவுதான் அவசர நிலைப் பிரகடனம்.

அவசர நிலைப் பிரகடனம் செய்ய வேண்டுமென்றால் சில சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆலோசனைகளும் பெறப்பட வேண்டும். ஆனால், இதுபற்றி அன்றைய தினம் அமைச்சகச் செயலாளருக்கோ, மத்திய உள்துறை அமைச்சகச் செயலாளருக்கோ, இந்திராவின் ஒற்றர் படையான (ஸிமீமீணீக்ஷீநீலீ ணீஸீபீ கிஸீணீறீஹ்வீ ஷ்வீஸீரீ) ராவின் தலைமை அதிகாரிக்கோ எதுவும் தெரியாது. அவசரநிலை பிறப்பிப்பதற்கு சம்பந்தப்பட்ட மற்ற உயர் அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசிக்கப்படவில்லை. அவர்கள் எல்லாம் இதுபற்றி எதுவுமே அறியாதவர்களாக நகரின் எங்கெங்கோ மூலைகளில் இருந்தனர். இவர்களைக் கலந்துகொண்டு அவர்களிடம் அவசரநிலை பற்றித் தெரிவித்தால், எங்கே அவர்கள் இதுபற்றி மூச்சு விட்டுவிடுவார்களோ அல்லது உடன்படமாட்டார்களோ என்று பயந்து மிகவும் நம்பிக்கையான அதிகாரிகள் சிலரை மட்டும் வைத்துக் கொண்டு அவசர நிலை அறிவிப்புக்கான காரியங்கள் மும்முரமாக, ஆனால் ரகசியமாக நடந்தன.

உயர் அதிகாரிகள் அவசர நிலைப் பிரகடனத்துக்கு எதிராக சதி வேலைகளைச் செய்துவிடுவார்கள்; அல்லது இந்தச் செய்தியை லீக் செய்து விடுவார்கள் என்று பயந்து கொண்டுதான் இவ்வாறு ரகசியமாக காரியங்கள் நடந்ததாக பின்னர் தெரிய வந்தது.

ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவின் உதவியாளர்கள், உயர் அதிகாரிகளுக்கும் தெரியாமல் அவசர நிலைப் பிரகடனச் செய்தி நடுச்சாமத்திற்குச் சில மணி நேரத்திற்கு முன்பாக பிரதமர் இந்திரா மூலம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. ஜூன் 25ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு பிரதமர் இந்திராவும், மேற்குவங்க முதல்வர் சித்தார்த்த சங்கர் ரேயும் ஜனாதிபதி பக்ருதீனைச் சந்தித்து அவசர நிலைக்கான காரணங்களை விளக்கினர். 45 நிமிடங்களுக்கு மேல் இருவரும் பக்ருதீனிடம் விவாதித்தனர். ஆனால், அவர் எந்த முடிவுக்கும் உடனே வர மறுத்துவிட்டு சிறிது நேரம் கழித்து முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்து விட்டார். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு மவுன உலகத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில், அரசின் உயர் அதிகாரிகள் தங்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

ஜனாதிபதியின் செயலாளர் கே. பாலச்சந்திரனும் அப்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இரவு 11.15 மணிக்கு பிரதமர் இந்திராவின் அடிஷனல் தனிச் செயலாளர் ஆர்.கே. தாவன் அவரை எழுப்பி அவரிடம் உள்நாட்டு அவசரநிலை பிறப்பிப்பதற்கான பிரதமரின் கடிதத்தை ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவதற்காகக் கொடுத்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் பாலச்சந்திரன் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு ஜனாதிபதியிடம் சென்று கொடுத்தார். பின்பு அவசர நிலைப் பிரகடன உத்தரவை அவர் பிறப்பித்தார். பின்பு தூக்க மாத்திரை ஒன்றைச் சாப்பிட்டுவிட்டு படுக்கச் சென்றுவிட்டார். இதற்குள் நாடு முழுவதும் போலீசார் தலைவர்களை எல்லாம் வேட்டையாடத் தொடங்கி விட்டனர். அந்த வேட்டைதான் நாடு முழுவதும் தொடர்ந்து 18 மாத காலம் நடந்து வந்தது. அவசர நிலைப் பிரகடனத்தின்போது மத்திய உள்துறைச் செயலாளராக எஸ்.எல். குரானா இருந்தார். அவசர நிலைப் பிரகடனத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்பாகத்தான் அவர் ராஜஸ்தானிலிருந்து மாற்றுதல் செய்யப்பட்டு உள்துறைச் செயலாளராக ஆக்கப்பட்டிருந்தார். அதுவரை உள்துறைச் செயலாளராக இருந்த என்.கே. முகர்ஜி எடுத்ததெற்கெல்லாம் ஆமாம் போடாதவர் என்பதால் அவரை மாற்றிவிட்டு குரானா நியமிக்கப்பட்டார். இருந்தாலும், குரானாவையும் இந்திரா நம்பவில்லை. (இந்தக் குரானா பிறகு தமிழ்நாடு கவர்னராக நியமிக்கப்பட்டார் _- ஓய்வு பெற்ற பின்பு)

இரவு 11.15 மணிக்கு குரானா மற்றொரு அதிகாரிக்கு போன் செய்து, டில்லி லெப்டினன்ட் கவர்னர் கிரிஷன்சந்த் மூன்று பட்டாளம் ஆயுதப்படைகளைக் கேட்கிறார், அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். அந்த அதிகாரிக்கும் காரணம் தெரியவில்லை. சில நிமிடங்கள் கழித்து குரானாவின் நண்பர்கள் சிலர், சில முக்கியப் புள்ளிகள் கைது செய்யப்பட இருக்கிறார்கள் என்று அவரிடம் தகவல் கூறினர்.

சிறிது நேரத்திற்கெல்லாம் உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு சண்டிகரில் உள்ள உயர் அதிகாரி ஒருவரிடமிருந்து போன் வந்தது. பத்திரிகை அலுவலகங்களை எல்லாம் முற்றுகையிடும்படி எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறது. அதற்கான காரணங்கள் எதுவும் தெரியவில்லையே என்று அவர் போனில் விசாரித்தார். ஆனால், உள்துறை அமைச்சக அதிகாரிக்கும் அதுபற்றி தகவல் தெரியவில்லை. காலை பத்திரிகைகள் வெளிவராமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

புதுடில்லியில் உள்ள மற்றொரு மேலதிகாரியிடமும் இதுபற்றி நான் டெலிபோனில் பேச முடியாது. அந்த அதிகாரியின் வீட்டில் ரகசிய டெலிபோன் எதுவும் இல்லை என்று அந்த சண்டிகர் அதிகாரி அவரிடம் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சிலரும் அந்த உள்துறை அமைச்சக அதிகாரியுடன் தொடர்பு கொண்டு மத்தியப் பிரதேசம் முழுதும் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கான காரணம் என்ன என்று அவரிடம் கேட்டனர். அந்த அதிகாரியும் எதுவும் புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தார்.

நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு செய்ய சதி ஒன்று நடந்து அது முறியடிக்கப்பட்டுள்ளது என்று சிலர் பேசிக்  கொண்டனர். நாடு முழுதும் ராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது என்று மற்றும் சிலர் கூறினர். பொதுவாக அதிகாரிகள் முதல் பொதுமக்கள் வரை எல்லோருக்கும் ஒரே குழப்பம். தலைநகரிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே. எனக்குத் தெரியாமல் இவர்கள் எப்படிக் கைது செய்யப்பட்டார்கள் என்று இன்டலிஜென்ஸ் பிரிவின் தலைமை அதிகாரி ஜெயராம் 26ஆம் தேதி விடியற்காலையில், தன் கீழ் வேலை பார்க்கும் அதிகாரிகளுக்கு போன் செய்து கேட்டார், அவர்கள் வியப்படைந்தனர். மாநிலங்களின் பல பகுதிகளிலும் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மாநிலத் தலைநகர்களில் உள்ள கீழ் அதிகாரிகள் கூறித்தான் தலைமை அதிகாரி ஜெயராமுக்குத் தெரிய வந்தது. தலைமை அதிகாரிக்கேகூட தெரியாமல் கீழ் அதிகாரிகள் மூலம் இப்படிப் பலர் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டு அந்த அதிகாரிகள் ஆச்சரியப்பட்டனர். ஜூன் 26 விடியற்காலை 6 மணிக்கு அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டும்படி விடியற்காலை 4.30 மணிக்கு அமைச்சகச் செயலாளரிடம் கூறப்பட்டபோதுதான் நாட்டில் உள்நாட்டு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ள செய்தியே தெரிய வந்தது. உடனே, அவர் இதை உள்துறைச் செயலாளருக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் தெரிவித்தார்.

காலை 6 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் அறைக்குள் அதிகாரிகள் விரைந்தனர். அதற்குள் அமைச்சரவைக் கூட்டம் கூடியிருந்தது. சில அமைச்சர்கள் அந்த அறையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். அவசரநிலைப் பிரகடனம் கோரி ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுக்கு எழுதப்பட்ட கடிதத்தைப்பற்றி அப்போதைய சட்ட அமைச்சர் எச்.ஆர். கோகலே பேசிக் கொண்டிருந்ததாக அதிகாரி ஒருவர் அப்போது நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் பற்றி மிகவும் மோசமாக அந்தக் கடிதத்தில் விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. இந்திராவின் தனிச் செயலாளரான தாவன், சஞ்சய்காந்தி ஆகியோரின் உதவியுடன் பிரதமர் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் பி.என். பெல் என்பவர் இந்தக் கடிதத்தைத் தயாரித்திருந்தார்.

– (நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *