நாத்திகம் ஒரு மாற்றுக்கலாச்சாரம் என்பதை நடைமுறையில் கண்டேன்

மார்ச் 16-31

கி. வீரமணியுடன் சூடான் (வலப்பக்கம்)

எந்த ஒரு நிகழ்ச்சியின் வெற்றியோ – தோல்வியோ அந்த நிகழ்ச்சியில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பதில் இருப்பதல்ல; அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் அனுபவத்தையும், மாநாடு எவ்வளவு அழகாக, திறமையுடன் நடத்தப்பட்டது என்பதையும் பொறுத்தது. இந்த அளவுகோல்களை வைத்துப் பார்க்கும் போது, திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாடு பெருவெற்றியைப் பெற்றது என்றுதான் கூறவேண்டும்.

இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த திராவிடர் கழகமும், நாத்திக மய்யமும் இணைந்து அதன் தலைவர்களான டாக்டர்.கி.வீரமணி – டாக்டர் கோ.விஜயம் ஆகியோரின் திறமை மிகுந்த தலைமையில் ஓர் அற்புதமான பணியைச் செய்துள்ளன. கண்காட்சி அரங்குகளில் புத்தகங்களையும் அறிவியல் மாதிரிக் கருவிகளையும் அடுக்கி வைப்பதில் இருந்து, மாநாட்டுக்கு வருகை தந்த பிரதிநிதிகளை நேரில் நின்று வரவேற்பது வரை அனைத்து விஷயங்களிலும் அவர்கள் நுணுக்கமாகக் கவனம் செலுத்தினர். பெரியார் குழும கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாகவும், மாணவர்களாகவும் இருக்கும் நூற்றுக் கணக்கான தொண்டர்களின் சோர்விலாத உழைப்பு மாநாட்டு நிகழ்ச்சிகள் எந்தவித இடையூறுமின்றி ஆற்றொழுக்கு போல் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்தது. வெவ்வேறு மாநாட்டு அரங்குகள், கண்காட்சி அரங்குகள் ஆகியவற்றிற்கு வழிகாட்டி அழைத்துச் செல்வது அல்லது பல்வேறு மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கிடையே தேநீர், சிற்றுண்டி வழங்குவது, உணவு அரங்கில் சுவைமிகுந்த உணவைப் பரிமாறுவது என்று இந்தத் தொண்டர்கள் தங்களின் அடக்கத்தினாலும், கட்டுப்பாட்டினாலும், சேவையினாலும் எல்லா இடங்களிலும் தங்களது செயல்களால் தங்களை உயர்த்திக் கொண்டனர்.

நான் தங்கியிருந்த விடுதியில் இருந்து என்னை மாநாட்டுக்கு அழைத்துச் செல்வது, திரும்பக் கொண்டு போய் விடுவது போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்த ஓர் இளம் ஆசிரியர் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஒரு நாத்திகராக இருந்தார். அதே போன்று அறிவியல் கண்காட்சியில் பல்வேறு மாதிரிக் கருவிகளைப் பற்றி எனக்கு விளக்கிக் கூறிய ஓர் இளம் மாணவியும் நாத்திகப் பற்று மிக்கவராகவே விளங்கினார். மாநாட்டில் அவர் பேசியதைப் பற்றி கருத்துத் தெரிவித்து மேடையில் கலந்துரையாடியவரும் ஓர் இளம் பெண் நாத்திகரே. இந்த இளைஞர்கள் அனைவரும் நாத்திகத்தை மட்டுமே பொதுவாகப் பெற்றிருக்கவில்லை; மிகுந்த தன்னம்பிக்கையையும் அவர்கள் பெற்றிருந்தனர். அத்தகைய தன்னம்பிக்கை மட்டும் இருந்துவிட்டால், நீங்கள் செய்வது எதுவுமே தவறாகிப் போகாது.

160 ஏக்கர் பரந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சுற்றுச் சூழல், இயற்கைப் பாதுகாப்பு தொடர்பான செயல்திட்டங்கள் பல இருக்கின்றன. பழைய காகிதங்களைக் கொண்டு மறுசுழற்சி முறையில் புதிய காகிதம் தயாரித்தல், தாவரக் கழிவுகளில் இருந்து எரிவாயு தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், ஹாலோ பிளாக் (குழிவான செங்கற்கள்) போன்ற மாற்றுக் கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்துதல், அனைத்துக்கும் மேலாக புதியதாக மரங்களை நடுதல், தாவரங்களுக்கும், பயிர்களுக்கும் சொட்டு நீர்ப் பாசன முறையைப் பயன்படுத்துவதன் மூலம் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் ஆகிய அனைத்தும், ஒரு திட்டமிட்ட முறையில், துல்லியமாகவும், பொருளாதாரக் கண்ணோட்டத்துடனும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு இயற்கையிடமே திரும்பிச் சென்று, வாழ்க்கையில் இயற்கையை ஒட்டிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது என்பது நாத்திகக் கோட்பாட்டின் ஒரு முக்கியமான அறிவிப்பின் அடையாளமாக விளங்குவதாகும்.

மூங்கில் புதர்களின் நிழலில் பிரதிநிதிகளுக்கு தேநீரும் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் ஒரு பாரம்பரியமான இசை ஒலிக்க, நடைபாதையில் மூங்கில் வளைவுகளினூடே ஒரு கிலோ மீட்டருக்கும் மேலான தொலைவுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பின்னர்தான் அன்றைய மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. பல்கலைக் கழக வளாகத்திற்கு பிரதிநிதிகள் முன்னதாக வந்து சேர்ந்தபோது, ஒவ்வொரு பிரதிநிதிக்கும் ஒரு மரக்கன்றை நடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது. கல்தேக்கு என்று அழைக்கப்படும் மரக் கன்று ஒன்றை நானும் நட்டேன்.

இந்த வளாகத்தில் இருந்த மாற்றுக் கட்டுமானப் பொருள்கள் தயாரிப்புப் பிரிவின் பொறுப்பாளர் எங்களிடம் பேசும்போது, வழக்கமான சிமெண்ட் கலவையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் செங்கல் கட்டுமானத்தைவிட குழிவான கான்கிரீட் செங்கற்களைப் பயன்படுத்தி, அவற்றை இணைப்பதற்கு சாம்பல், மண்ணுடன் 6 விழுக்காடு சிமெண்ட் கலந்த கலவையைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு கனமீட்டர் கட்டுமானப் பணி செய்வதில் ரூ 600 மிச்சப்படுத்தப்படுகிறது என்று கூறினார். இந்த வளாகத்தில் நடைபெற்று வரும் ஏராளமான கட்டுமானங்களைப் பார்க்கும் போது, இவ்வாறு சேமிக்கப்படும் செலவினம் கணிசமானதாக இருக்கும் எனத் தெரிகிறது.

இவ்வாறு இயற்கையுடன் முழுமையான இணக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள், நாத்திகம் ஓரு மாற்றுக் கலாச்சாரம் என்ற கோட்பாட்டை நடைமுறையில் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன.

எனது வீட்டின் முன்னால் இருந்த நான்கு பெரிய மூங்கில் புதர்களை வெட்டி எறிந்து விடலாம் என்று இதற்கு முன்பு நான் நினைத்திருந்தேன். ஆனால் பல பறவைகளும் கடுங்குளிர் இரவுகளில் அவற்றைத் தங்களின் வாழ்விடமாகக் கொண்டிருந்தபடியால், அவ்வாறு செய்ய என்னால் இயலவில்லை. உலக நாத்திக மாநாட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பிய பின்னர், அவற்றை வெட்டி எறிவதைப் பற்றி இனி சிந்திக்கவும் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன். அவை ஒவ்வொன்றும் 850 கிராம் உயிர்க்காற்றை வெளிப்படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது.

ஆர்.கே.சூடான் ஜம்மு – காஷ்மீர் பிரதிநிதி

( தமிழில்: த.க. பாலகிருட்டிணன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *