மனுதர்மத்தில் மாமிசம்

மார்ச் 16-31

மனுதர்ம சாத்திரம் மூன்றாவது அத்தியாயம் சுலோகம் 266 – இல் இறந்தவர்களுக்கு எந்தவிதமான திதி/தெவசம் செய்தால் இறந்தவர் எவ்வளவு காலம் திருப்தி அடைவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது பின்வருமாறு:

சுலோகம்

266 பிதுர்களுக்கு எவ்விதமாய் சிரார்த்தஞ் செய்தால் நெடுநாள் வரையிலும், எவ்விதமாகச் செய்தால் முடிவில்லாத காலம் வரையிலும், திருப்தியுண்டாகுமோ அது முழுமையுஞ் சொல்லுகிறேன்.

267. திலம் – செந்நெல்லரிசி, உளுந்து, ஜலம், கிழங்கு, பழம் இவைகளினால் சிரார்த்தம் செய்தால் மனிதர்களின் பிதுர்கள் ஒரு மாதம் வரையிலும் திருப்தி அடைகிறார்கள்.

268.  பாடீநசம் முதலிய மச்ச மாமிசத்தால் செய்தால் இரண்டு மாதம் வரையிலும், அரிணமென்கிற மான் மாமிசத்தால் செய்தால் மூன்று மாதம் வரையிலும் செம்மறியாட்டு மாமிசத்தால் செய்தால் நான்கு மாதம் வரையிலும் பட்சிகளின் மாமிசத்தால் செய்தால் அய்ந்து மாதம் வரையிலும் திருப்தி அடைகிறார்கள்.

269. வெள்ளாட்டின் மாமிசத்தால் செய்தால் ஆறுமாதம் வரையிலும், புள்ளிமான் மாமிசத்தால் செய்தால் ஏழுமாதம் வரையிலும், கறுப்பு மான் மாமிசத்தால் செய்தால் எட்டு மாதம் வரையிலும் திருப்தி அடைகிறார்கள்.

270. முள்ளம்பன்றி காட்டெருமைக்கடா இவைகளின் மாமிசத்தால் செய்தால் பத்து மாதம் வரையிலும், முயல், ஆமை இவைகளின் மாமிசத்தால் செய்தால் பதினொரு மாதம் வரையிலும் திருப்தியடைகிறார்கள்.

271. வார்த்தீசனமென்னும் கிழவெள்ளாட்டுக்கிடாவின் மாமிசத்தால் செய்தால் பன்னிரெண்டு வருடம் வரையிலும் திருப்தியடைகிறார்கள்.

272. அந்தந்தக் காலத்திலுண்டான கறியமுது முள்ளுள்ள வாளை மச்சமும் கட்க மிருகமும் சிவந்த ஆடு இவைகளின் மாமிசங்களாலும் காட்டில் முளைத்திருக்கும் செந்நெல்லின் அரிசியினாலும் செய்தால் அளவற்ற நாள் வரையிலும் திருப்தியடைகிறார்கள்.

மேற்படி சுலோகங்கள் மூலமாகத் தெரியவருவது என்னவென்றால், மனுதர்ம சாத்திரமும், இதர வேதங்களும் காட்டுமிராண்டி காலத்தில் சில காட்டு மிராண்டிகளால் அன்றைய ஆரியர்களின் பழக்கவழக்கங்களைக் கொண்டு அன்றைய சூழ்நிலையில் ஏற்படுத்தப்பட்டது என்று தெளிவாகிறது. பார்ப்பனர்கள் தென்னாட்டிற்கு_ தமிழ்நாட்டிற்கு வந்தபொழுது இங்குள்ள தமிழர்களின் சைவ உணவு வகைகளைத் தெரிந்து கொண்டு பிதுர்களுக்கு_இறந்து போன முன்னோர்களுக்கு சிரார்த்தம்/திதி/தெவசம் போன்றவை செய்யலாயினர். மனுவினால் சொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் மனுதர்ம சாத்திரத்தில் கண்டுள்ள மேற்படி சுலோகங்கள்படி பார்ப்பனர்கள் நடப்பதில்லை. மனுதர்ம சாத்திரம் பின் எப்பொழுதாவது திருத்தப்பட்டதாகவும்,   சொல்லப்படவில்லை.

இதிலிருந்து தெரிவது:-

1) பார்ப்பனர்கள் கூறுவது போல மனுதர்ம சாத்திரத்தை முக்காலும் உணர்ந்த ஞானியோ, கடவுளோ உண்டாக்கவில்லை என்பது தெளிவாகிறது.

2) அது எக்காலத்திற்கும் உகந்ததல்ல.

3) அது பார்ப்பனர்களாலேயே கடைப்பிடிக்க முடியாதது.

4. அய்யா பெரியார் சொன்னது போல், அது மனிதன் அறிவு வளர்ச்சி இல்லாமல் காட்டுமிராண்டியாய் இருந்த காலத்தில் ஒரு சில பார்ப்பனக் காட்டுமிராண்டிகளால் பார்ப்பனர் நன்மைக்கும் மேன்மைக்கும் ஏற்படுத்தப்பட்டதாகும்.

– ஆர்.டி.மூர்த்தி
திருச்சி-17.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *