கேள்வி : அய்யா, நான் ஒட்டன் சமூகத்தைச் சார்ந்தவன்; ஒடுக்கப்பட்ட ஜாதிதான். ஏன் எங்களை எஸ்.சி (S.C) பிரிவில் சேர்க்கவில்லை?
– கே.ஆர்.சி.துரைதன்ராஜ், கடலூர்- 2
பதில் : இதுபற்றி உங்கள் சமூகத்தவர்களை ஒன்று திரட்டி, அரசிடம் குறிப்பாக ஷி.சி. ஆணையத்திடம் மனுகொடுத்து செயல்பட முயற்சி எடுக்க வேண்டும் நீங்கள். அழுத பிள்ளைதானே பால் குடிக்கும்?
கேள்வி : காதலர் தினத்தைக் கண்டித்து, இந்து முன்னணியினர் நாய்களுக்குத் திருமணம் செய்துவைத்தது எதைக் காட்டுகிறது? – கே.ஆர். ரவீந்திரன், சென்னை-1
பதில் : நாய்கள், கழுதைகளுடன் கூட சில ஊர்களில் நடத்தியுள்ளனர்; எப்போதும் திருமணங்களை அவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள்தானே நடத்திவைப்பது வழமை! அதில் என்ன வியப்பு?
கேள்வி : தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைப் பிடிப்பதை நிறுத்த என்ன செய்யலாம்? – காந்தி பாரதி, சென்னை – 1
பதில் : மத்திய அரசின் கையாலாகாத்தனம் இருக்கும் வரை – இது நீடிக்கவே செய்யும்! எளிதில் தடுத்திட முடியாது.
கேள்வி : ஈழத் தமிழர்களுக்கு விடிவு காலம் எப்போது பிறக்கும்? – அ. கண்மணி, அரியலூர்
பதில் : தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வு, துரோகம் இன்மை, ஈழத்திலும் ஒற்றுமை – இவை வந்தால் விடிவு காலம் பிறக்கும்.
கேள்வி : பார்ப்பனர்… என்பதற்கு அடையாளமாக அவர்கள் வைத்துக்கொண்டது, உச்சிக் குடுமியும், பூணூலுமே!… ஆனால், இன்று குடுமியைத் துறந்துவிட்ட பார்ப்பனர் பூணூலையும் விட்டொழிக்காதது ஏன்? ..- நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில் : பூணூல் கல்யாணம், பிறகு பண்ண முடியாதே! சடங்கு, சம்பிரதாயம் போனால் பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்த முடியுமா?
கேள்வி : ஜாதி என்பது கிடையாது என்று கூறுகிறீர்கள். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனப் பிரித்து கல்வியில், வேலையில் சலுகை அளிப்பது ஏன்? பொருளாதார ரீதியில் என்றில்லாமல் ஜாதி என்ற பெயரால் பிரிப்பது ஏன்?- ஈ.சிதம்பரம், மதுரை
பதில் : எந்த வழியில் அவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டதோ அதே வழியில்தானே வெளியே வரவேண்டும். சிறைக் கதவுக்குள் சென்றவர்கள் அதே வழியில்தானே விடுதலை ஆக வேண்டும் என்பார் தந்தை பெரியார். அதனால்தான் இந்த நிலை! வறுமையினால் படிப்பு வேலைவாய்ப்பு மறுக்கப்படவில்லை. மாறாக, மனுதர்ம வர்ண தர்மத்தால்தான் சூத்திரர் , பஞ்சமர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது!
கேள்வி : ஈழத்தமிழர்கள் தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது வெறும் கவலை யைத் தெரிவிக்கும் மத்திய காங்கிரஸ் ஆட்சி, வட இந்தியர்கள் வெளிநாடுகளில் தாக்கப்பட்டால் மட்டும் துடிக்கிறதே? – ஆர். கண்ணம்மாள்சுந்தரம், வேதாரண்யம்
பதில் : ரத்தம், தண்ணீரைவிடக் கெட்டியானது (Blood is thicker than water) என்பது ஆங்கிலப் பழமொழியாகும்.
கேள்வி : உளுத்துப்போன புராணக் குப்பையான இராமாயணம் தொடரை அடுத்து இப்போது விநாயகர் திருவிளையாடல் தொடரை சன் டி.வி. ஒளிபரப்புகிறதே?
– குண.மன்னன், காளையார்கோயில்
பதில் : என்ன செய்வது? மதச் சார்பின்மை படும்பாடு – அறிவியல் மனப்பான்மை பரப்பும் லட்சணம் இதுதான் போல! நாய்விற்ற காசு குரைக்காது.
கேள்வி : லிபியா அதிபர் கடாபி தாக்குப்பிடிப்பாரா? அல்லது எகிப்தின் முபாரக் கதிதான் ஏற்படுமா? – எஸ். சாகுல், காயல்பட்டினம்
பதில் : லிபியாவில் எகிப்து நடக்கும் என்பது உறுதி!
கேள்வி : பொருளாதார வளர்ச்சியிலும் தனிநபர் வருமானத்திலும் முன்னணியில் உள்ளதாகக் கூறப்படும் மாநிலமான குஜராத்தில் பசியும், பட்டினியும் அதிகம் இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. பா.ஜ.க. வின் மோடி ஆளும் அந்த ஆட்சிதான் சிறந்த ஆட்சி என்று சோ சொல்கிறாரே. – கே. கோகுல்நாத், திசையன்விளை
பதில் : உலகம் பிரச்சாரத்திற்கு அடிமை என்ற ஒரு பழமொழியை நினைவில் கொள்ளுங்கள்.