நானும் விடமாட்டேன் – ஆர்.திருமணிராஜன்

ஆகஸ்ட் 01-15

நெரிசலில்லாத பேருந்துப் பயணத்தில் செழியன் தன் கல்லூரித் தோழன் அன்பரசனை நீண்ட வருடங்களுக்குப் பிறகு சந்தித்தான். மகிழ்ச்சியுடன் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டு, தன் செல்பேசி எண்களையும் பரிமாறிக் கொண்டனர்.

செழியன் இன்றைய 0இளைஞனுக்கேற்ற நாகரிகத் தோற்றத்தில் இருக்க, அன்பரசன் வேட்டி, சட்டை, நெற்றியில் பட்டையென பக்தித் தொனியுடன் காட்சியளிக்க செழியன் அவனிடமே கேட்டான்.

என்ன அன்பு கோவிலுக்குப் போறியா?

இல்லை செழியா, பக்கத்தில கம்பன் விழா நிகழ்ச்சி. அதுக்குப் போயிட்டிருக்கேன் என்றான் அன்பரசன்.

கம்பன் விழாவா? அப்படீன்னா செழியன் புரியாமல் கேட்க, அன்பரசன் திகைத்தான்.
என்ன செழியா, கம்பன் விழா தெரியாதா? தமிழ்நாட்டுலதான் இருக்கியா? கம்பனையாவது தெரியுமா? கேலியுடன் கேள்விகளை அடுக்கினான் அன்பரசன்.
என்ன அன்பு, கம்பனைத் தெரியாதா? கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமுன்னு பள்ளிக்கூடத்துல படிச்சிருக்கோமே என்று சொன்னான்.
பரவாயில்லையே செழியா, இதை மட்டுமாவது தெரிஞ்சி வைச்சிருக்கியே. கம்பரைப் பத்தின இந்த வரியிலேயே அவரோட கவிநுட்பமும், திறமையும் அடங்கிடுச்சே. அந்த மாகவியின் காப்பியப் புலமைக்குப் பெருமை சேர்க்கத்தான் தமிழ்ச் சான்றோர்களும், அறிஞர்களும், மொழி உணர்வாளர்களும் கம்பன் விழா எடுத்து கருத்தரங்கம், கவியரங்கம், விவாதம், பட்டிமன்றமுன்னு பல நிகழ்ச்சிகளை ஒன்றுகூடி நடத்திச் சிறப்பிக்கிறாங்க. இன்னைக்கும் ஒரு பட்டிமன்றம்… அதான் போயிட்டு இருக்கேன். கம்பரோட கவி வரிகளைக் கரைச்சிக் குடிச்சவங்க இருக்கப் போற அவையில எனக்கும் பேச ஒரு வாய்ப்புக் கிடைச்சது அதிர்ஷ்டம்தான்னு சொல்லணும். நீயும் வந்து பாரு செழியா. அப்பத்தான் உனக்கும் புரிய வரும். கம்பன் கவிச் சிறப்புகளைத் தெரிஞ்சிக்காம இருந்தது எவ்வளவு பெரிய தப்புன்னு _ அன்பரசன் கம்பனின் பெருமைகளை அடுக்க செழியன் அமைதியாகவே கேட்டுக் கொண்டிருந்தான்.

பட்டிமன்றம்னா எப்படி அன்பு? எதைப் பத்திப் பேசுவீங்க? சொன்னால், வர்றதைப் பத்தி யோசிக்கிறேன் என்றான் செழியன்.

வேறெதைப் பத்தி பேசுவோம். கம்பரோட காப்பியப் படைப்புகளைத்தான். கம்பராமாயணக் கதாபாத்திரங்களோட இயல்புகளைப் பத்தித்தான். தெளிவா சொல்லணும்னா அன்பு, அறிவு, துரோகம், தியாகம், சூழ்ச்சி இப்படிப் பல நிலைகளிலேயும் அவரோட படைப்புகளில எந்தக் கதாபாத்திரம் மத்தக் கதாபாத்திரங்களைவிட உயர்ந்தது, மிஞ்சியதுன்னு பேசுவோம். நான் சொல்றதைவிட வந்து பார்த்தாதான் அதோட அருமை புரியும். வேற முக்கியமான வேலை எதுவுமில்லன்னா, வா செழியா, அருமையான தமிழ்விருந்து சுவைக்கலாம் என அழைத்தான் அன்பரசன்.

மறுத்த செழியன் சிரித்தபடியே, வேண்டாம் அன்பு எனக்குத் தமிழ் விருந்தைச் சுவைக்கிறதைவிட வேற முக்கியமான வேலைகள் நிறைய இருக்கு. நான் பசிக்கே உணவு கிடைக்காத தமிழனைப் பத்திச் சிந்திக்கிற களப்பணியாளன். எனக்குத் தமிழ் விருந்தெல்லாம் சுவைச்சு, ரசிக்க நேரமில்லை. உங்களை மாதிரி தமிழறிஞர்களும், தமிழ்ச் சான்றோர்களும் சுவைக்கலாம். ஒன்று மட்டும் சொல்றேன் அன்பு. உணவே கிடைக்காதவன் தன் மொழி உணர்வைச் சிந்திக்க மாட்டான். ஆனா, உங்களை மாதிரி மொழி உணர்வுள்ளவர்கள்  உங்க செவி உணவை மட்டுந்தான் உணர்வா நினைச்சுக்கிறீங்க.

செழியனின் பேச்சு அன்பரசனின் முகத்தைச் சுருக்கியது.

ஏன் செழியா, நீ நாத்திகனா மாறிட்டியா? _ ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்த தொனியில் கேட்டான் அன்பரசன்.

பரவாயில்லையே அன்பு, உண்மையைப் பேசுறவன் நாத்திக னாத்தான் இருக்க முடியுங்கறதை நீயே கணிச்சிட்டியே. சுயநல மில்லாதவன் நாத்திகன் மட்டும்தானே. கருத் தரங்கம், கவியரங்கமுன்னு தன் மொழி உணர்வை ஒரு அறைக்குள்ள காட்டிட்டு அடங்கிடாம, அந்த மொழியைச் சேர்ந்தவன் உணர்வுக்காகவும் வீதிக்கு வந்து போராடி சிறைக்குள்ளேயும் போகத் தயாராயிருப்பவன் அவன் தானே. எனக்கும் இப்போ ஒரு பட்டிமன்றம் நடத்தலாமோன்னு யோசனை வருது அன்பு. கவி மன்னனோட கற்பனைக் கதாபாத்திரங்களை நாலு சுவத்துக்குள்ள கூடியிருக்கிறவங்க கைதட்டி ரசிக்கப் பேசுற உங்களை மாதிரித் தமிழறிஞர்களோட மொழிப்பற்று உயர்ந்ததா? இல்லை, உலகமே கைதட்டி வேடிக்கை பார்க்க, இந்த மொழிக்குச் சொந்தக்காரன்ங்கற ஒரே காரணத்துக்காக இனத்தையே சிதைச்சவனுக்குத் துணைபோன துரோகிகளை நாலு பேருக்குத் தோலுரிச்சுக் காட்ட வீதிக்கும் வந்து போராடுறோமே எங்களை மாதிரி களப்பணியாளர்களோட மொழிப்பற்று உயர்ந்ததான்னு_ செழியனின் பேச்சு, அன்பரசனை அதிகமாய்க் கோபப்படுத்த சீறினான் செழியனிடம்.

அற்புதம் தெரியாம, அதைத் தெரிஞ்சிக்கவும் முற்படாம விமர்சனமும், விதண்டாவாதமும் செய்யுறது தானே உங்களை மாதிரி நாத்திகர்களோட வேலை. என்ன பெரிசா வீதிக்கு வந்து போராடிக் கிழிச்சிட்டீங்க. உங்க கத்தலை வேற மொழிக்காரன் பார்த்துட்டாவது போறான். ஆனா நம்ம மொழிக்காரன் செவிடனாத்தான் போயிட்டிருக்கான். செவிடன் காதுல சங்கை ஊத வெட்டியா நின்னு கத்துற உங்களைவிட, தெரிஞ்சிக்கணும், ரசிக்கணும்னு வர்றவங்ககிட்ட நம்ம மொழிச் சிறப்பைக் கம்பன் மூலமா எடுத்துட்டுப் போற எங்க மொழிப்பற்றுதான் உயர்ந்தது _ காட்டத்துடன் சீறியவனிடம் செழியன்,

உண்மைதான் அன்பு. அற்புதம்தான். ஆனா, அடித்தளமே இல்லையே. அடித்தளமே சரியாயில்லைன்னு நாங்க வெளியே நிற்கிறோம். ஆனா நீங்க அழகா, கலைநயத்தோட மாளிகை கட்டப்பட்டிருக்குங்கிறதுக்காக உள்ளே போய் ஒவ்வொரு செங்கல் அழகையும் வர்ணிச்சிட்டு இருக்கீங்க. சுருக்கமா சொல்லணும்னா பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக் கதைதான். இதுல யாரு அன்பு புத்திசாலி. நாங்க செவிடன் காதுல சங்கை ஊதலை அன்பு. வாழ்க்கைச் சுமையால தன்னைச் செவிடனா மாத்திக்கிட்டுப் போகிறவன் காதுலதான் ஊதிக்கிட்டு இருக்கோம். அந்தச் சுமையைக் குறைக்கத்தான் நாங்க கத்துறோமுன்னு தெரிஞ்சிக்கிற காலம் வந்து எங்க பேச்சுக்குக் காது கொடுக்கிற வரைக்கும் ஓயமாட்டோம். ஊதிட்டுத்தான் இருப்போம்.

இருவரும் விவாதத்தின் உச்சியை அடைந்தபோது பேருந்தும் அன்பரசன் இறங்கும் நிறுத்தத்தை அடைந்தது.

அப்போது, விவாதம் இன்னும் முடியலை செழியா, நாடுகளைக் கடந்தும் வியக்கப்படற கம்பரின் அருமையை உன்னைப் பேச வைக்காம நான் விடமாட்டேன் என  விடைபெற்ற அன்பரசனிடம்,
நாடுகளைக் கடந்ததாலேயே விரட்டப்படுற தமிழரின் நிலைமையையும் உன்னைப் பேச வைக்காம நானும் விடமாட்டேன் அன்பு என செழியன் விடைகொடுத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *