Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சோத்தபய ராஜபக்‌ஷே – துக்ளக்கின் துதிபாடும் பயணம் – 3

புலிகள் பெயரில் தொடரும் கைதுகள் நிம்மதியின்றி ஈழத்தமிழர்கள்

– மகா.தமிழ்ப் பிரபாகரன்

‘அமைதிபுரி- _ ஒழிக்கப்பட்ட புலித் தீவிரவாதம் -வளர்ச்சித் திட்டம்’ இவ்வாறே இருக்கிறது இலங்கையின் வடக்குப் பிரதேசம்.

இது துக்ளக்கர்களின் கூற்று.

 

மரணத்தின் நெடுஞ்சாலையான ‘ஏ_-9’ வழியாக யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சியை நோக்கி நகர்கின்றனர் துக்ளக்கர்கள். ஆனால் அங்கிருந்த ‘ஆனையிறவு’ என்ற ராணுவத்தளமும் அங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட ராணுவ முகாம்களும் அதன் தொடர்ச்சியாய் இருக்கும் பல்வேறு ராணுவத் தலைமையகங்களும் கண்களிலேயே படவில்லை போன்றுள்ளது. ராணுவக் கண்களாய் ராணுவத்தின் தூதுவனாகச் சென்றவர்களுக்கு ‘சாலையின் இரு மருங்கிலும் சிவப்புக் கலரில் மண்டையோடும், இரு எலும்புகளும் கொண்ட எச்சரிக்கைப் பலகைகள்’ இருந்தது மட்டும் காண முடிந்ததாக குறிப்பிடுகின்றனர். அதுதான் கண்ணிவெடி நிலப்பகுதிகள். இந்தக் கண்ணிவெடி அகற்றல் பகுதிகளில் யாரையும் அனுமதிப்பதில்லை என்பது பாதுகாப்பு ரீதியாக இயல்பான செயல்பாடுதான். அதே போல் துக்ளக்கர்களும் அங்கு மகிழுந்தை நிறுத்திய போது தங்களை அங்கு அனுமதிக்கவில்லை என்கின்றனர். ‘உயிரைப் பணயம் வைத்து நடக்கும் அந்த (கண்ணிவெடிகள் அகற்றுவது) வேலை சிரமமானது என்பதைப் பார்த்ததுமே தெரிந்து விடுகிறது’ என்று குறிப்பிட்டுள்ள துக்ளக்குக்கு ‘அங்கு பணயம் வைக்கப்படும் உயிர் _- தமிழர்களின் உயிர் என்று கூறிடக்கூட முடியாமல் அரசு விசுவாசம் தடுக்கிறது. தமிழ்ப் பகுதிகளில் இருக்கிற வேலைகளில் எல்லாம் சிங்களர்களுக்குப் பெரும்பான்மை உரிமை தருகிற இலங்கை அரசு, இவ்வேலையில் மட்டும் தமிழர்களுக்கு நூறு சதவீத பங்கீட்டைத் தந்துள்ளது என்பதே கண்ணி வெடிகள் அகற்றல் வேலைத்திட்டத்தின் வடிவம்.

‘இலங்கையில் அமைதி திரும்பி, அபிவிருத்திப் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. சாலைகள், அரசுக் கட்டிடங்கள், மின்சார நிலையங்கள் எல்லாம் புதுப்பிக்கப்பட்டு ஃப்ரெஷ்ஷாக காணப்பட்டன. ஆனாலும் அந்த அமைதிக்கு இடையே மெல்லியதாய் ஒலிக்கும் சோக இசை மாதிரி ஊருக்கு ஊர் நிற்கின்றன சிதிலமடைந்த பல வீடுகள். போரின் காரணமாக இடம் பெயர்ந்த யார் யாருக்கோ சொந்தமான வீடுகள், உரிமையாளர் திரும்பி வராததால் சிதிலமடைந்து, கூரை இழந்து, செடி வளர்ந்து பரிதாபமாக நிற்கின்றன.’ இவ்வாறாக போரில் அழிவுண்ட சொத்துகள் மீது கவலை தெரிவித்துள்ள துக்ளக் , அடுத்த பத்தியிலேயே ‘போர் முடிந்து திரும்பி வந்த பல குடும்பங்கள் தங்கள் வீடுகளைச் செப்பனிட போதிய பொருளாதார வசதியில்லாமல் தவித்ததால், இப்படி ஆளில்லாமல் கிடக்கும் வீடுகளில் இருந்த தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டுபோய் விட்டார்கள். சிலர் உரிமையாளர்களின் அனுமதி பெற்று எடுத்தார்கள். சிலர் அனுமதியில்லாமலே களவாடிக் கொண்டனர்’ என்று போரில் தப்பித்து வந்த மக்களுக்குத் திருட்டுப் பட்டம் கட்டியுள்ளது. இதையும் அந்த மக்களேதான் சொன்னார்களாம். இதன்படி இவர்கள் சொல்ல வருவது சிங்கள ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த போது இந்த வீடுகளில் எதுவுமே களவாடப்படவில்லை, இதையும் தமிழர்கள்தான் செய்தார்கள்.

வன்னி பிரதேசத்தில் நடந்த போரின் போது சிங்கள ராணுவத்தின் களவாடலுக்கும் சொத்து அழிப்புக்கும் போரில் சிக்குண்ட `எனது நண்பரின்  சாட்சியிலிருந்து,’ நான் கிளிநொச்சியைச் சேர்ந்தவன். யுத்தம் நடக்ற வேளை புலிகள் பின்வாங்க பின்வாங்க, நாங்களும் அவர்களோடே சென்றோம். கையில் கிடைக்கிறத எடுத்துக்கிட்டு நாங்களும் நகர்ந்தோம். நான் அய்யாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்திருந்தேன் அதில் இன்று ஒன்றுகூட என்னிடம் இல்லை. போர் முடிந்து எங்கட ஊருக்குள் நாங்க அனுமதிக்கப்பட்ட அப்ப எல்லாம் எரிஞ்சு சாம்பலாதான் இருந்துச்சி. வீட்டுக்குள்ள எல்லாமே உடைக்கப்பட்டு இருந்திச்சி’ என்றார்.

இவர் சொல்வதும் பொய்யாகவே இருக்கட்டும். துக்ளக்கர்களே உங்கள் கருத்துப்படி, ‘வீட்டைச் செப்பனிடத்தான் மக்கள் பொருட்களைத் திருடினார்கள். அப்படியென்றால் புத்தகங் களையும் அவர்களின் உடைமைகளையும் யார் களவாடியது. இதற்கும் புலிகளே காரணம் என்று சொல்லப் போகிறீர்களா?

சிங்கள ராணுவத்தின் மனிதப் படுகொலைகளைக் கண்டு மனித மனங்கள் வெட்கித் தலைகுனிந்து கண்ணீர் வடிக்கிறது. ஆனால் அந்த ரத்த வெறியர்களை ‘புத்தர்கள்’ என்று நியாயம் பேசுகிறது துக்ளக்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரான வீ.ஆனந்த சங்கரியைச் சந்தித்தார்களாம் துக்ளக் நியாயவான்கள். அவர், ராஜபக்க்ஷே எந்த அளவு குற்றவாளியோ, அதே அளவு குற்றவாளிதான் புலிகள் தலைவர் பிரபாகரனும். கடும் போரின் போதும் வன்னிப்பகுதித் தமிழர்களை வெளியே விடாமல், தனக்கு அரணாக வைத்துக் கொண்டு பல தமிழ்க் குடும்பங்களை அழித்தொழித்தார். தமிழர்களை அழித்ததில் பிரபாகரனுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அதே பங்கு டி.என்.ஏ.க்கும் இருக்கிறது. பல கட்டங்களில் தீர்வுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. ராஜபக்க்ஷேகூட ஒரு கட்டத்தில் இந்திய மாடல் மாகாணசபைத் தீர்வுக்கு ஒத்து வந்தார். ஆனால், புலிகள் அழிவை மட்டுமே தேர்வு செய்தனர். கடைசிக் கட்டத்தில் கூட ராஜபக்க்ஷே தமிழ்க் கட்சிகளை அழைத்துப் பேசினார். ஏறக்குறைய 65 ஆயிரம் தமிழர்கள் ராணுவத்திடம் வந்து தஞ்சம் அடைந்து விட்டனர். இன்னும் சுமார் 20 ஆயிரம் மக்கள்தான் புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்று எங்களிடம் குறிப்பிட்டார் ராஜபக்க்ஷே. ஆனால், நான் அதை மறுத்தேன்.

இன்னும் 3 லட்சம் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்று தெரிவித்தேன். ராஜபக்க்ஷே என் மீது கோபப்பட்டார். பொய் சொல்லாதீர்கள் என்றார். ஆனால், நான் ஆணித்தரமாக அடித்துச் சொன்னேன். அதன் பிறகு அவர் கொஞ்சம் நம்பினார் என்றே சொல்ல வேண்டும். அதனால்தான் அனுப்பும் உணவுகளைக் கூடுதலாக அனுப்பச் சொன்னார். (போர் நடக்கும்போதும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில், புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த தமிழர்களுக்கு, தினசரி உணவு அனுப்பப்பட்டுள்ளது.) அதோடு, மீண்டும் பல நோ ஃபயரிங் ஜோன்களை உருவாக்கி, மக்கள் வெளியே வந்து ராணுவத்தின் ரிஸீவிங் பாயின்ட்டில் தஞ்சம் புகலாம் என்று ராஜபக்க்ஷே அறிவித்தார். முதல் நாளே உள்ளிருந்து 85 ஆயிரம் பேர் ரிஸீவிங் பாயின்ட்டுக்கு வந்து சேர்ந்தனர். அடுத்தடுத்த நாட்களில் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் வெளியே வந்துவிட்டனர். அதன் பிறகுதான் போர் மேலும் தீவிரமடைந்து முடிவுக்கு வந்தது” என்றாராம்.

ஆனந்த சங்கரி எவ்வளவு பெரிய புரட்டின் மன்னர் என்பதை அறிய ‘போரின் போது ராணுவத்தால் மக்களுக்கு உணவு கொடுக்கப்பட்டது’ என்ற கருத்தைச் சற்று யோசித்தாலே போதும். “போர் நடக்கும்போதும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில், புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த தமிழர்களுக்கு, தினசரி உணவு அனுப்பப்பட்டுள்ளது” என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது துக்ளக். அப்படியென்றால் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற அய்.நா.வின் அறிக்கையில் உணவின்றியும் மருந்தின்றியும் மக்கள் மாண்டு போனார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே, அதை எந்தக் கணக்கில் சேர்க்கச் சொல்கிறார் ஆனந்த சங்கரி. தண்ணீரை பிளாஸ்டிக் படகுகளில் ஊற்றிக் குடிக்கச் சொன்னபோது அதைக் குடிக்க முட்டி மோதி பசியாலேயே செத்தார்களே, அதை எதில் சேர்ப்பது? மக்கள் சோற்றுக்கு வழியற்றவர்களாகக் கிடந்தார்கள் என்பதை அவர்கள் புகைப்படம் உங்கள் மனதுக்குத் துளியும் உணர்த்தவில்லையா?  ராணுவக் கட்டுப்பாட்டில் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்களே? அதற்கும் நீங்கள் சொன்னபடிதான் ராஜபக்க்ஷே உத்தரவிட்டாரா? இன்று கிளிநொச்சியில் அறை போட்டு உட்கார்ந்து உள்ளார்களே … நீங்கள் மக்கள் பிரதிநிதியாக இருந்தால் மக்களோடு மக்களாகச் சென்றிருக்கலாமே, தமிழர்கள் கொத்துக் கொத்தாக முள்ளிவாய்க்காலின் சிறு நிலப்பரப்புக்குள் கொல்லப்பட்டபோது மக்களைக் காப்பாற்றப் பேசுகிறேன் என ராஜபக்க்ஷேவின் குளு குளு பாதுகாப்பு அரண்களில் நீங்களும் உங்கள் குடும்பமும் பெருத்த பாதுகாப்போடு தானே  அண்டிப் பிழைத்தீர்கள்?

மே 18க்குப் பிறகு ஆயிரக்கணக்கான பேருந்துகளில் தப்பிய மக்களும் எஞ்சிய புலிகளும் ஏற்றப்பட்ட பின்புதான் ஓமந்தையை நோக்கிச் செல்லும் போது  உணவு வழங்கப்பட்டது என்று உங்களுக்கு ராஜபக்க்ஷே சகோதரர்கள் சொல்லவில்லையோ? ராஜபக்க்ஷே ஜால்ரா கூட்டணிக் கும்பலைச் சந்தித்த துக்ளக்கர்கள் ராஜபக்க்ஷே சகோதரர்களிடம் ஒரு பேட்டி எடுத்து வந்திருந்தால் சோ’த்தபய ராம’பக்க்ஷே பிறவிப் பலனை அடைந்திருப்பார்.

அமைதிபுரியாக இருக்கிறது இலங்கை. ஆனால், தமிழர்கள் வாழும் வட-கிழக்குப் பிரதேசத்தில் பாதுகாப்புக்காக சிங்கள ராணுவத்தின் நான்கு லட்சம்  பேர் குடிகொண்டு உள்ளனர். புலித் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் புலிகள் என்ற பெயரில் கைதுகள் நடக்கின்றன, தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு, இலங்கையின் நான்காவது சுதந்திர விழா கொண்டாடப்பட்ட பிறகும்  1972இல் தற்காலிகமாகப் போடப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் 40 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் நிரந்தரமாக நடைமுறையில் இருக்கிறது.

போர் பாதித்த பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் படுவேகமாக நடக்கிறது. ஆனால், தமிழர்கள் ஒட்டிய வயிறோடு வாழ வழியின்றி ஏக்கத்தோடு கையேந்தி நிற்கின்றனர்.

‘மயான அமைதி- _ சிங்கள ராணுவக் குடியேற்றம் _- வளர்ச்சித் திட்டப் பெயரில் சிங்கள ஆக்கிரமிப்பு’ இதுவே துக்ளக் தெரிந்தும் _ தெரிந்தே விட்டுவிட்ட ‘இலங்கையின் வடக்குப் பிரதேசம்’

– உண்மைகள் கசக்கும்…