ஜாதியைத் துறந்தால்தான் முன்னேற முடியும்!

ஆகஸ்ட் 01-15

மின்னஞ்சல் தமிழர் சிவா சுளீர்!

– வெளிச்சம்

உலகில் பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தவர்கள் தமிழர்கள். ஆனால், முறையாகப் பதிவு செய்யாத காரணத்தால் பலவற்றை இழந்து இருக்கிறோம். இந்த இழப்புகளை இனி இல்லை என்று கூறுமளவுக்கு உலகம் வியக்க ஒரு தமிழர் உயர்ந்து நிற்கிறார்.

 

அவர் பெயர் சிவா அய்யாதுரை. இராஜபாளையத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, அமெரிக்காவில் வாழும் தமிழரான, சிவா அய்யாதுரை தொலைத் தொடர்புத் துறையில் உலகையே உலுக்கிப் போட்டிருக்கும் மின்னஞ்சலை(email)க் கண்டுபிடித்தவர் என்று அறியும் பொழுது தமிழராய் பெருமிதம் கொள்ளத் தோன்றுகிறது. ஜூலை 22 அன்று சென்னையில் ரோட்டரி மற்றும் அரிமா சங்கங்கள் சவேரா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் திரு. சிவா அவர்கள் பேசும்பொழுது பல அரிய சிந்தனைகளை வெளிப்படுத்தினார்.

பகுத்தறிவுவாதிகள், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் மகிழும் அளவுக்கு அந்தக் கருத்துகள் அமைந்திருந்தன. “மேற்கத்திய நாடுகளில் அறிவியலார் மற்றும் விஞ்ஞானிகள் என்றால் வெள்ளைத் தோல் உடையவராகவும், இந்தியாவில் பார்ப்பனராகவும் இருக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கை உள்ளது என்றவர், சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை விவரித்தார்.

ஹைதராபாத் நகரைத் தலைமையகமாகக் கொண்டு சென்னையிலிருந்து வரும் ஆங்கில நாளிதழின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர், பார்ப்பனர் அல்லாதார் இவ்வளவு பெரிய அறிவியல் கண்டுபிடிப்பினைச் செய்திருக்க முடியாது என்று உறுதியாக நம்பியதாகவும், சிவா அய்யாதுரைப் பற்றிய செய்தி தம் நாளிதழில் வராமல் பார்த்துக் கொண்டாராம்.

சென்னையிலிருந்து வெளியாகும் முன்னணி ஆங்கில நாளிதழ் மும்பையினைச் சேர்ந்த இந்தியர் என்று வெளியிட்டு  பூணூலால் தன் முதுகைச் சொறிந்து கொண்டது. (சிவா சில காலம் மும்பையில் வாழ்ந்தவர்.)

எப்பொழுது தமிழர்கள் ஜாதியினைத்  துறந்து, ஒரே இனமாகச் சிந்திக்கத் தொடங்குகிறார்களோ அப்பொழுதுதான் முன்னேற்றம் காண முடியும். தமிழர்களின் வளர்ச்சிக்கு ஜாதி பெரும் தடையாக உள்ளது என்று ஆதங்கப்பட்டார் சிவா அய்யாதுரை. மேலும், இன்றைய கல்வி முறை மாற வேண்டும். -மனப்பாடம் செய்து, மதிப்பெண் பெறுவது, அடிமையாய் வேலை செய்யும் ரோபோ இயந்திரங்களாகத்தான் உருவாக்க முடியும். இப்பொழுதுள்ள கல்வி முறை, ஆதிக்க ஜாதிகள், தங்களை இன்னும் பலப்படுத்திக்கொள்ளவே உதவுகிறது. தற்போதைய கல்வி முறை ஒழிக்கப்பட்டு மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனைகள் வளர களம் அமைக்க வேண்டும். மரபுகளை உடைத்தால்தான் புத்தாக்கத்தினைப் படைக்க முடியும். சுய சிந்தையினை உருவாக்கும் பெற்றோர், ஊக்குவிக்கும் வழிகாட்டி, நல்ல கட்டமைப்புடன் கூடிய சூழ்நிலை இவைகள் இருந்தால் ஆராய்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் என்றார் திரு. சிவா.

எந்த ஆராய்ச்சியின் முடிவும் மக்கள் பயன்பாட்டிற்குத் தேவையானதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சந்தைப்படுத்த முடியும், பொருள் ஈட்ட முடியும் என்று கூறியவர், உலகில் இன்றைக்கு 180 கோடி மக்களுக்கு வேலை தர வேண்டியுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் உலக அமைதிக்குப் பெருங்கேடாய் முடியும் என்று எச்சரித்தார். ஆதிக்க ஜாதியினர் தம் பிடியினைத் தளர்த்தி அனைவரையும் உள்சேர்த்து ஒருங்கிணைந்த சமுதாயம் அமையத் தழைப்பட்டால் மட்டுமே அமைதிக்கு வழிகோலும். இல்லையென்றால் எகிப்து நாட்டில் உண்டான புரட்சியினைப் போல இந்தியாவிலும் உண்டாகும் என்கிறார் சிவா.

தொடர்ந்து 45 நிமிடங்கள் உரையாற்றிய பின், பார்வையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அய்யங்களுக்கும் விடையளித்தார். பதினான்கு வயதிலேயே மின்அஞ்சல் என்கிற சேவையைக் கண்டுபிடித்து தகவல் தொழில்நுட்பத்தில் மாபெரும் புரட்சியினை உண்டாக்கிய சிவா அய்யாதுரை தமிழர் என்பதில் மட்டும் நமக்குப் பெருமையல்ல. உச்சிக்குச் சென்றவுடன் பார்ப்பன அடிவருடியாக மாறிவிடும் தமிழர்களிடையே சிவா அவர்கள் நிச்சயம் வித்தியாசமானவர்தான்.

ஊரெங்கும், வீதியெங்கும் தமிழர்கள் இவரைச் சுமந்து சென்று இவருக்குப் பெருமை சேர்க்க வேண்டும். பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களிடம் உரையாற்ற வேண்டும் – அவர்களை ஊக்குவிக்க வேண்டும். பல சிவா அய்யாதுரைக்கள் உருவாக வேண்டும். அப்போது அய்யா பெரியார் கண்ட கனவு நனவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *