மதம் அல்லாமல் வேறு காரணம் என்ன?

ஆகஸ்ட் 01-15

– தந்தை பெரியார்

“மதம் என்பது மனிதனின் கூட்டு வாழ்க்கைக்கும், அதற்கேற்ற ஒழுக்கத்திற்கும் ஏற்ற விதிகளைக் கொண்டதேயாகும் என்று சொல்லப்படுமானால், அம்மாதிரி மதங்களைப் பற்றிச் சுயமரியாதை இயக்கம் அதிகக் கவலைப்படுவது கிடையாது. அதற்குச் சுயமரியாதை இயக்கம் அவசியமானால், உதவியும் செய்யும். மற்றும் “மனிதனின் ஆத்மா என்பது கடவுள் என்பதை அடைவதற்காக மதம் ஏற்பட்டது

என்றால், அதைப்பற்றியும் சுயமரியாதை இயக்கம் கவலைப்படுவதில்லை. அப்படிப்பட்ட அபிப்பிராயக்காரனும் அவனுடைய மதமும் இப்போது எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடும். ஏனெனில், அது தனிப்பட்ட மனிதனைப் பொறுத்த காரியம். அதைப்பற்றிப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால், மனித சமூகத்தின் அறிவைப் பாழ்படுத்தவும், தன்மான உணர்ச்சி அறவே இல்லாமல் செய்யவும் மக்களைப் பிரித்து வைத்து, உயர்வு – தாழ்வு கற்பித்து மனித சமூக ஒற்றுமையைக் கெடுத்துப் பொது முன்னேற்றத்தையும், சுதந்திரத்தையும் தடுக்கும்படியான மதம் எதுவானாலும் அதை ஒழிக்கச் சுயமரியாதை இயக்கம் பாடுபட்டுத்தான் வந்திருக்கிறது. இன்று அனுபவத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான மதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றுள் அந்நிய மதம் -_ அந்நியர்கள் மதம் என்பதைப்பற்றி நாம் இப்பொழுது பேசவேண்டாம். “நம்முடைய மதம் என்று இந்துக்கள் என்பவர்களால் சொல்லப்படுகிற இந்து மதம் என்பதையே எடுத்துக் கொள்வோம்.

இந்தியர்களாகிய நாம் இவ்வளவு பிரிவினர்களாக இருப்பதற்கு இந்து மதமல்லாமல், வேறு எது காரணம்? பொதுவாக இந்துக்கள்  இத்தனை ஜாதிகளாக அவற்றிலும் உயர்வு தாழ்வாகப் பிரிவுபடுத்தப்பட்டு இருப்பதற்கும் இந்து மதமல்லாமல் வேறு என்ன காரணம்? இதற்கு ஆதாரம் இந்து மத, சாஸ்திரமும், வேதமும்தான் என்று பேசுகிறார்கள். ஆகவே, இந்த நிலையில், இம்மாதிரி மதம், சாஸ்திரம், வேதம் என்பவைகள் ஒழிக்கப்படாமல் தீண்டாமையும், ஜாதி பேதமும் போக்கடிக்கப்பட முடியுமா? இதுவரையும் இந்து மதம் விட்டு வேறு மதம் முக்கியமாக முஸ்லிம் ஆகாத எந்தப் பார்ப்பனரல்லாதாருக்காவது தங்களது சமூகத்தில் தீண்டாமை போயிருக்கிறதா என்று யோசித்துப் பாருங்கள்.

மற்றும் பார்ப்பனருக்குள்ள சவுகரியமும், சுதந்தரமும் சமூக வாழ்விலும், பொருளாதாரத்திலும் மற்ற வகுப்பாருக்கு இருந்து வருகிறதா என்றும் யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட மதம் ஒழிக்கப்பட வேண்டியதுதான் என்பதற்கு இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும்? மதம் என்றவுடன் ஒருவித வெறி ஏற்பட்டு விடுகிறதாய் இருக்கிறதே ஒழிய, மதம் மக்களுக்குச் செய்துவரும் நன்மை என்ன? அதனால் மக்கள் அடையும் பயன் என்ன? என்பதை மத வெறியர்கள் சிந்திப்பதேயில்லை. கள்ளினால் உண்டாகும் வெறியைவிட இம்மாதிரி மதங்களால் ஏற்படும் வெறி அதிகமான கேட்டைத் தருகிறது. கள்ளு குடித்தவனை மட்டும் கெடுக்கிறது. மதம் மனத்தில் நினைத்தவனையே கெடுக்கிறது.

சமுதாய வாழ்வில் மனிதர்களுக்குள் உயர்வு -_ தாழ்வு கற்பிக்கிற மாத்திரமல்லாமல், மதம் பொருளாதாரத்தில், உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கும் மூல காரணமாய் இருக்கிறது. உண்மையில் நீங்கள் யோசித்துப் பாருங்கள். உடல் வலிக்கப் பாடுபட ஒரு ஜாதியும், நோகாமல் உட்கார்ந்து கொண்டு சாப்பிட ஒரு ஜாதியும், மதம் சிருஷ்டிக்கவில்லையா? உலகச் செல்வமும், போக போக்கியமும், சரீரப் பாடுபடும் மக்களுக்கு இல்லாமல் போகவும், சோம்பேறி வாழ்க்கையாளருக்கும் சரீரப் பாடுபடாதவர்களுக்கும் போய்ச் சேரவும் காரணம் மதக் கொள்கை அல்லாமல் வேறு என்ன? பாட்டாளிகள் தரித்திரர்களாகவும், வயிற்றுச் சோற்று அடிமையாகவும், கீழ் ஜாதியாராகவும் கீழ் மக்களாகவும் இருக்கவும், பாடுபடுவதும் சரீர உழைப்பு உழைப்பதும் தோஷம் என்று ஏற்படுத்திக் கொண்டவர்கள் கவலையற்ற வாழ்வு வாழவும் செல்வம் பெருக்கிக் கொள்ளவும் மற்றவர்களை அடக்கி ஆளவும் மதம் அல்லாமல் வேறு காரணம் என்ன?

பகுத்தறிவற்ற பட்சி, மிருகம், பூச்சி, புழுக்கள் தங்களுக்குள் ஜாதி பேதம், மேல் கீழ் நிலை, அடிமைப்படுத்தும் உணர்ச்சி ஆகியவை இல்லாமல் இருக்கும்போது பகுத்தறிவுள்ள மனிதனுக்குள் ஜாதி பேதம், உயர்வு தாழ்வு, எஜமான் அடிமை உணர்ச்சி ஏற்படக் காரணம் என்ன?

(`உண்மை, 14.01.1971)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *