நீயும் நானும் கோவிலுக்குள் போக ஆரம்பித்தால் – நாம் பூசை செய்கிறாப்போல, தொட்டுக் கும்பிடுகிற மாதிரி ஏற்பட்டுவிட்டால், பார்ப்பான், கோவிலுக்குள் சாமி இல்லை; கல்தான் இருக்கிறது என்று அவனே பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுவான்.
இன்றைக்கு பார்ப்பான், சூத்திரன் என்கின்ற பேதத்தைக் காட்டுவதற்கு கர்ப்பக்கிரகம் ஒன்னுதான் இருக்கிறது. மற்ற எல்லா இடங்களிலும் ஒழிந்ததுபோல் இந்த இடத்தில் இருக்கிற பேதத்தையும் ஒழித்தாக வேண்டும். சாமி இருக்கிறதோ இல்லையோ, வெங்காயம் அதைப்பற்றிக் கவலை மனிதனுக்கு மனிதன் ஜாதிபேதம் இருக்கக் கூடாது என்பதுதான். வேறு எந்த மதத்திலும் இதுபோன்ற தடை கிடையாது. யார் வேண்டுமானாலும் அந்த மதத்தைச் சார்ந்தவன் எதுவரையில் வேண்டுமானாலும் செல்ல உரிமை உண்டு. இந்து மதம் ஒன்றில் மட்டும்தான் பார்ப்பானைத் தவிர மற்றவன் கர்ப்பக்கிரகத்திற்குள் போகக்கூடாது என்கின்ற தடை இருக்கின்றது. இந்தத் தடைதான் நம்மைச் சூத்திரனாகவும் பார்ப்பானைப் பிராமணனாகவும் வைத்திருக்கின்றது.
(திருச்சியில் நடைபெற்ற தீபாவளிக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து)
– (விடுதலை -16.11.1969)