Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?

– கலி.பூங்குன்றன்

1. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் – ஏன்?

உலகில் எந்தவொரு மதமும் தன் மதத்தவனையே தாழ்வாகக் கருதுவதோ, பிறப்பின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தவிர பிறர் மதகுரு ஆகக் கூடாது என்று தடுப்பதோ இல்லை.

 

கிறித்துவ மதத்தை எடுத்துக் கொண்டால், அந்த மதத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவினரும் பைபிள் கல்லூரியில் படித்துத் தேர்வானால் பாதிரியாகலாம்; அராபிக் கல்லூரியில் படித்துத் தேர்ந்தால் எந்த முஸ்லிமும் மவுல்வி ஆகலாம்.

ஆனால், இந்து மதத்தை  எடுத்துக் கொண்டால் பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகராக முடியும். அதற்காக எந்தக் கல்லூரியிலும் படிக்க வேண்டாம்.

தாழ்த்தப்பட்டவர்களே ஒன்று சேர்வோம் வாரீர் என்று இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அழைக்கிறார்களே _ -அந்தத் தாழ்த்தப்பட்ட தோழர்கள் இந்து என்று சொல்லுகிறார்களே _- அவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளித்து அர்ச்சகராக்க வேண்டும் என்று கூறினால் கூடாது… தாழ்த்தப்பட்டவர்களோ _ – பிற்படுத்தப்பட்டவர்களோ, மற்ற பார்ப்பனர் அல்லாதாரோ அதற்குரிய பயிற்சி பெற்றாலும், கோவில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யக்கூடாதாம். கருவறைக்குள் அவர்கள் சென்றால் சாமி தீட்டாகி விடும் என்று ஆகமங்களில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இந்த இழிவை தமிழர்கள் ஏற்கத்தான் வேண்டுமா? இந்த இழிவை ஒழிக்கும் போராட்டத்தைத்தான் தனது இறுதிப் போராட்டமாக தந்தை பெரியார் அறிவித்தார். அதற்கான போராட்டக் களத்திலேயே தன் இறுதி மூச்சையும் துறந்தார்.

கடவுள் மறுப்பாளர்களான திராவிடர் கழகத்துக்காரர்கள் கோவிலில் அர்ச்சகராக யார் வருவது என்பதுபற்றிய அக்கறை _- ஏன்? நாத்திகர்கள் இதில் தடையிடலாமா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

கடவுள் இல்லை என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் என்பது தமிழர்களின் உரிமை!

உரிமைக்கும், கொள்கைக்கும் உள்ள வேறுபாட்டை உணரவேண்டும்.

பார்ப்பனர் தவிர்த்த – மற்றவர்கள் அர்ச்சகராகக் கூடாது என்பதற்குச் சொல்லும் காரணம் பார்ப்பனர் அல்லாதார் சூத்திரர்கள் என்பதே! சூத்திரர்கள் என்றால் வேசிமக்கள் என்கிறது மனுதர்மம். (மனுதர்மத்தின் அத்தியாயம் 8 – சுலோகம் 415)

நாம் வேசிமக்கள், அதனால் அர்ச்சகர் ஆகக் கூடாது என்பதை நாம் ஏற்கலாமா? திராவிடர் கழகம் அர்ச்சகர் பிரச்சினையில் தலையிடுவது _ இந்த இன இழிவை ஒழிப்பதற்காகவே! மற்றபடி திராவிடர் கழகத்துக்காரர்கள் யாரும் அர்ச்சகர் பணிக்காக விண்ணப்பம் போடப் போவதில்லை..

2. தந்தை பெரியார் என்ன சொன்னார்?

நண்பர்களே! நாம் நமது நாட்டில் நாலாம் ஜாதியார் _- சூத்திரர் – பார்ப்பனரின் தாசி புத்திரர்கள் என்றும், சில அனுபவங்களில் தீண்டப்படாத _ நெருங்கப்படாத இழிபிறவி மக்கள் என்றும் இந்து மத சாத்திரங்களில் தர்மமாகவும், இந்து லா என்னும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டும், அதை அனுசரித்தே கோர்ட் தீர்ப்புகளும் இருந்து வருகின்றது. அந்தப்படி அமல் நடத்தப்பட்டும் வருகின்றன.

நம் கோவில்களுக்குப் போகிற எவரும் எந்தக் கோவிலுக்கும் போவதானாலும், சாமி இருக்கிற அறைக்கு (கர்ப்பக்கிரகத்திற்கு) வெளியில் நின்றுதான் சாமி தரிசனமோ, மற்றதோ செய்ய வேண்டியிருக்கிறது. காரணம், நாம் கீழ் ஜாதிக்காரர்கள். நாம் தொட்டால், நெருங்கினால் சாமி தீட்டாகிவிடும். ஆதலால் எட்டி நிற்க வேண்டும்; வெளியில் நிற்கிறோம். எனவே இந்த இழிநிலை போக்கப்பட வேண்டாமா? என்பதுதான் நான் நமது மக்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளும் விண்ணப்பம் (விடுதலை 14.10.1973) என்று தந்தை பெரியார் தமிழர்களுக்கு ஒரு விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளார்.

3. எவ்வளவு காலமாக இந்தப் போராட்டம்?

தமிழர்கள் கட்டிய கோவிலில் அர்ச்சனை செய்ய தமிழர்களுக்கு இடமில்லை என்ற நிலை தொடரும் 1000 ஆண்டுகால அடிமைத்தனத்துக்கெதிரான போராட்டம் இது. கோவில் அமைந்த தெருக்களில் நுழைதல், கோவில்களுக்குள் நுழைதல் என தீண்டாமை குடிகொண்ட இடங்களிலெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டுபோய்ச் சேர்த்தவர் தந்தை பெரியார். கோவில் கருவறைக்குள் தமிழர்கள் ஜாதிபேதமின்றி அர்ச்சகராக வேண்டும் என்ற கருத்தை 1937லேயே பெரியார் முன்மொழிந்தார். படிப்படியாக தன் பிரச்சாரத்தின் வாயிலாக மக்களை அதற்குத் தயார்ப்படுத்தவும் செய்தார்.

கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி 1970ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைபெறும் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறினார். 16.11.1969 அன்று மாலை 3.30க்கு திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் கூடிய மத்திய நிர்வாகக் கமிட்டியில், கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சியின் அவசியம் விளக்கப்பட்டு, 8 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள், குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத பிற எல்லா இனத்தவரும் கோவில் கர்ப்பக்கிரகத்தினுள் செல்லவும், தகுதி அடிப்படையில் அர்ச்சகராகவும் அனுமதிக்கும் வண்ணம் சட்டதிருத்தம் ஒன்றினை அரசு கொண்டுவரும் என அறிவித்தார்கள். இதற்கான அர்ச்சகர் நியமன மசோதா சட்டசபையில் 2.12.1970 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனை எதிர்த்து பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பன மடங்களின் பின்புலத்தில் இருந்த சிலர் 12 ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். பரம்பரை அர்ச்சகர் முறை செல்லாது என்றும், ஆகம விதிகள் பாதிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் நீதிமன்றம் வரலாம் என்றும் சொல்லி உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது.

அர்ச்சகர் உரிமையை அமல்படுத்தி, தமிழர்களின் இழிவைப் போக்கும் வகையில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு சென்னை பெரியார் திடலில் 1973ஆம் ஆண்டு டிசம்பர் 8, 9ஆம் தேதிகளில் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதுவே பெரியார் கூட்டிய இறுதி மாநாடும் ஆகும். இதனையே பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று கலைஞர் குறிப்பிட்டார்.

பெரியாரின் மறைவிற்குப் பின், அன்னை மணியம்மையார் தலைமையில்  அறப்போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், மாநாடுகளும் நடத்தப்பட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பெரியாரின் நூற்றாண்டையொட்டி அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு நீதிபதி எஸ்.மகராசன் தலைமையில் 12 பேர் கொண்ட குழு 1979ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதலமைச்சர் திரு. எம்.ஜி.ஆர் அவர்களால் அமைக்கப்பட்டது. உரிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக எந்தவிதமான தடையும் இல்லை என்று இந்தக்குழு அறிவித்தது.

பின்னர், அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் 8.6.1984 அன்று அரசு ஓர் ஆணை பிறப்பித்தது. அதன்படி, பழனி கோவிலில் ஆகமக் கல்லூரி அமைக்கப்படும் என அன்றைய இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் சட்டப் பேரவையில் அறிவித்தார்.

எனினும், நடைமுறைக்கு வராமலிருந்த இந்தப் பிரச்சினைக்கு, 17.9.1991 அன்று தமிழக அரசு சார்பில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 113ஆவது பிறந்த நாள் விழாவில் ஆசிரியர் அவர்கள், அய்யா அவர்கள் கடைசியாக அறிவித்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமையை நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதன்படி, அரசால் திறக்கப்பட இருக்கும் ஆகமக் கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களும் இடஒதுக்கீட்டுக் கொள்கைப்படி 18 சதவிகிதம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்; அவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு கோவில்களில் அர்ச்சகர்களாக ஆக்கப்படுவார்கள்; இதன்மூலம் பெரியார், அண்ணாவின் கனவுகள் நனவாக்கப்படும் என்று 17.10.1991 முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பினை வெளியிட்டார்கள். 1996ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டம் கம்பரசன்பேட்டையில் அர்ச்சகர் பயிற்சி தொடங்கப்பட்டு அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிப்பதற்கான அறிவிப்பு வெளியானது.

தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் தைத்த முள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அப்படியே இருப்பது? அந்த முள்ளை அகற்றிட 1.2.2006 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பத்தாயிரம் தோழர்கள் மறியலில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டனர்.

அடுத்து 2006இல் ஆட்சிக்கு வந்த கலைஞர் அரசு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழுவினை நியமித்தது. உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின் காரணமாக ஒரு சிறிய திருத்தத்துடன் 21.8.2006 அன்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மதுரை, பழநி, திருச்செந்தூர், திருவண்ணாமலை, திருவல்லிக்கேணி, சிறீரங்கம் ஆகிய இடங்களில் பயிற்சி மய்யங்கள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து இதற்கென பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் திராவிடர் கழகம் மேற்கொண்டது. பயிற்சியில் சேர 1267 விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. ஓராண்டுப் பயிற்சியில் 206 பேர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

இதற்கிடையில் மதுரை ஆதி சிவாச்சாரியார்கள் சங்கத்தின் சார்பில் அர்ச்சகர் உரிமைக்கான ஆணைக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்குத் தொடர்ந்தனர்.

22.10.2012 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிறீரங்கம், ராஜபாளையத்தில் எழுச்சி மாநாடுகள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பயிற்சியில் தேர்வு பெற்ற 206 பேர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து திண்டுக்கல் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பார்ப்பானாகப் பிறந்து விட்டதாலேயே எந்த மோசமான ஒழுக்கக் கேடனும் அர்ச்சகராகலாம், முறையாகப் படித்து ஒழுக்கத்துடன் வாழும் பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகராகக் கூடாதாம். தமிழர்களே சிந்திப்பீர்! என்ன கொடுமை இது! தமிழ்நாட்டில் உள்ள தமிழன் கட்டிய கோவில்களில் தமிழன் அர்ச்சகராக முடியாததற்குக் காரணம் _ தமிழர்கள் சூத்திரர்களாம்! சூத்திரர்கள் என்றால் என்ன? வேசி மக்கள் என்று மனுதர்மம் கூறுகிறது. (அத்தியாயம் 8, சுலோகம் 415) தமிழா! நாம் இன்னும் சூத்திரர்கள்தானா? பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள்தானா? தமிழினப் பக்தர்களே ஒரு கணம் சிந்திப்பீர்! உங்கள் இழிவை ஒழிக்கும் போராட்டத்தில்தான் திராவிடர் கழகம் குதிக்கிறது.

வரும் ஆகஸ்டு முதல் தேதி முதல் போராட்டம்! போராட்டம்!! பலகட்டப் போராட்டம்!!!   ஆதரவு தாரீர்! ஆதரவு தாரீர்!

தந்தை பெரியார் தொடங்கினார் -_ அன்னை மணியம்மையார் தொடர்ந்தார் _- நாம் முடித்து வைப்போம் _- வெற்றி பெறுவோம். இன இழிவைத் துடைப்போம். எழுச்சி கொள்வீர் தமிழர்களே! என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறைகூவல் விடுத்துள்ளார். தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பெருவாரியான இயக்கங்கள் இப்போராட்டங்களில் பங்கெடுக்க முன்வந்துள்ளன.

பெரியாரின் கனவு நனவாகும்! சமத்துவ சமுதாயம் உருவாகும்!.