மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை (NEET- National Eligibility – Cum Entrance Test)அகில இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்தது. அதனை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு- நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது (மூன்று நீதிபதிகளில் பெரும்பான்மைத் தீர்ப்பு)
இந்தத் தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து இதற்கு முன்பாகவே கடந்த ஆண்டு (27.9.2012) அறிக்கை ஒன்றை விரிவாக வெளியிட்டுள்ளோம்.
இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வு தேவையில்லை; தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நுழைவுத் தேர்வு சட்டப்படியே ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் அகில இந்தியப் போர்வையில் மாநில அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக ஒன்றைத் திணிப்பது மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாகும்.
கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து நெருக்கடி காலத்தில் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்ற அத்துமீறலால், இதுபோன்ற மாநில அரசின் கொள்கை முடிவுகளில் பெரியண்ணனாக மத்திய அரசு மூக்கை நுழைக்கிறது.
ஏற்கெனவே மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு 15 சதவீத இடங்களை எடுத்துச் சென்று விட்டது. மருத்துவ முதுநிலைப் படிப்புக்கு ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 50 சதவீத இடங்களைக் கொண்டு சென்றுள்ளது.
இதில் என்ன கொடுமை என்றால், இப்படி மத்திய தொகுப்புக்குக் கொண்டு செல்லப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவேயில்லை.
மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு என்கிற சட்டப்படியான நிலைமையில் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை!
இந்த நிலையில் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் எனும் தன்மையில் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் என்ன செய்தது தெரியுமா?
மாநிலங்களிலிருந்து 15 சதவீத இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு எடுத்துச் சென்றதை மாற்றி, நூறு சதவீத இடங்களையும் அகில இந்தியத் தொகுப்புக்கு எடுத்துச் சென்று, புதிதாக அகில இந்திய நுழைவுத் தேர்வை நடத்தித் (NEET) தேர்வு செய்கிறதாம்.
இதனை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் முடிவுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அகில இந்திய நுழைவுத் தேர்வை நடத்துவதால் மாணவர்கள் பல நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய சுமை இருக்காது என்று நாக்கில் தேன் தடவுவது போல காரணம் சொல்லுகிறார்கள்.
அதாவது உண்மையா? இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்குமான நுழைவுத் தேர்வு அன்று இது.
டில்லியில் உள்ள எய்ம்ஸ், சண்டிகரில் உள்ள பி.ஜி.அய். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர், இராணுவ மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்த நுழைவுத் தேர்வு செல்லுபடியாகாது என்பதைக் கவனிக்க வேண்டும்.
இந்த மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமென்றால் தனித்தனியாகத்தான் நுழைவுத் தேர்வை எழுதிட வேண்டும்.
கடந்த தி.மு.க. ஆட்சியிலும் சரி, இன்றைய ஆட்சியிலும் சரி நுழைவுத் தேர்வை ஏற்றுக் கொள்ளவில்லை.
மற்ற பல மாநிலங்களும் இதை எதிர்த்து, தங்கள் உரிமையும் பறி போகின்றன என்று வாதாடினர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு, மத்திய அரசு இப்பொழுது மேற்கொள்ளவிருக்கும் மேல் முறையீட்டை எதிர்த்து தன்னையும் ஒருவாதியாக இணைத்துக் கொண்டு, (Implead) தமிழ்நாட்டில் ஆண்டாண்டு காலமாக அரும்பாடுபட்டு நிலை நிறுத்திய சமூக நீதியைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
ஆந்திர மாநில அரசும், காஷ்மீர் மாநில அரசும் – அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் கிடைக்கும் இடங்கள் எங்களுக்குத் தேவையில்லை; -எங்கள் மாநிலத்திலிருந்து இடங்களையும் மத்திய அரசுக்கு அளிக்கத் தயாராக இல்லை என்று கறாராக முடிவு செய்து அறிவித்தனர். இம்முறையைப் பின்பற்றி நம் மாநிலத்திற்கு ஏற்பட்டு இருக்கும் இழப்பிலிருந்தும் தப்புவதற்கும் வழி இருக்கிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் இடஒதுக்கீட்டினை முறையாகப் பின்பற்றாமல் இடங்களை விலை பேசி விடுகிறார்கள். இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வு (Neet) அதனைத் தடுத்து விடுகிறது என்று கூடுதலாக தங்கள் முடிவுக்கு நியாயம் கற்பிக்க முயலுகிறார்கள்.
தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று சட்ட ரீதியாக அழுத்தம் கொடுத்து, தவறு செய்வதற்கு இடம் கொடுக்காத ஒரு வழி முறையை (Fool Proof) உண்டாக்கினால் அந்தத் தவறினைத் தவிர்க்கச் செய்ய முடியுமே! நீட் நுழைவுத் தேர்வு என்பது சி.பி.எஸ்.இ. பாடத் திட்ட முறையில் அமைந்துள்ளதாகும். வேறு கல்வி முறையில்தான் பெரும்பாலான மாணவர்கள் படிக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்களைப் பாதிக்கச் செய்யும் ஒரு தேர்வு முறை, சரியானது தானா? பல்வேறு கல்வி முறைகள் உள்ள ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட கல்வி முறையில் பயின்றவர்களுக்குப் பயன்படும் வகையில் தேர்வு முறையைப் புகுத்தலாமா?
இன்னொன்று, அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த இருபால் மாணவர்களும் அந்தந்த மாநிலத்தில் படிக்கவே விரும்புவார்கள். அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் புதிய தேர்வு முறையால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான். பெண்கள் வெளி மாநிலத்தில் சென்று படிப்பது இன்றைய சூழலில் கடினமே! அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பால குருசாமி போன்றவர்கள்கூட அகில இந்திய நுழைவுத் தேர்வை எதிர்த்துள்ளனரே!
மருத்துவக் கல்வியில் நுழைய மத்திய அரசு என்னும் ஒட்டகத்தை அனுமதித்தால் எல்லாத் துறைகளிலும் புகுந்து மாநில அரசே என்ற ஒன்று இல்லாமல் எலும்புக் கூடாக ஆக்கக்கூடிய அபாயம் ஏற்படும், எச்சரிக்கை! எச்சரிக்கை!!
தமிழ்நாடு முதல் அமைச்சர் இதில் முக்கிய கவனம் செலுத்தி ஏற்படக்கூடிய ஆபத்தினைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்துகிறோம்.
சமூகநீதியில் அக்கறை உள்ள அனைத்துக் கட்சிகளும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, மத்திய அரசின் முடிவைக் கைவிடச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் ஆசிரியர் பணி நியமனத்தில் (FACULTY) இடஒதுக்கீடு தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. சமூக நீதியில் அடுத்தடுத்துப் பல இடர்ப்பாடுகள் திணிக்கப்பட்டு வருகின்றன. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.
கி.வீரமணி, ஆசிரியர்
Leave a Reply