ஜாதி எவ்வளவு கொடூரமானது; அது என்னவெல்லாம் செய்யும்னு காதலிச்ச பின்னால்தான் நல்லா புரியுது. – இளவரசன்
ஜாதி இல்லாத ஒரு சமூகம் உருவாக வேண்டும் என நான் நினைக்கிறேன். ஆனால், அது உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. வீட்டுக்குத் தெரியாமல் காதல் திருமணம் பண்ணியதை நான் என் தனிப்பட்ட வாழ்க்கையாகத்தான் பார்க்கிறேன். அதை ஏன் இவர்கள் சமூகப் பிரச்சினையாக்குகின்றனர்? அரசியல்வாதிகள் மட்டுமல்ல, யார் ஜாதிவெறி பிடித்து அலைந்தாலும் அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். அவரவரின் வாழ்க்கையை மட்டும் வாழுங்கள்; அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழையாதீர்கள். – திவ்யா
மேலே இருப்பவை திவ்யாவும் இளவரசனும் கடந்த மாதத்தில் வெவ்வேறு காலகட்டத்தில் தனித்தனியாக அளித்திருந்த பேட்டிகளில் சொன்னவை. இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்திருக்க வேண்டிய ஒன்றை, சமூகப் பிரச்சினையாக்கி, பெண்ணைப் பெற்றவரைக் கொன்று, ஊர்களைக் கொளுத்தி, எண்ணற்றோரின் வாழ்க்கையைப் பாதிக்கச் செய்து, கலவரமாக்கி, தொடர்ந்த பதட்டச் சூழலை உண்டாக்கி, அந்த இருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள்ளும் புகுந்து, அவர்களையும் பிரித்து, அவர்களில் ஒருவரை உடலாலும், மற்றொருவரை மனதாலும் கொன்றும் போட்டிருக்கிற கொடுமைகளுக்கு மூல காரணம் ஜாதி!
தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய், கொண்டாம்பட்டி, நத்தம் காலனி இவை தான் இளவரசனையும், திவ்யாவையும் அதிகபட்சம் அறிந்திருக்கக் கூடிய பகுதிகள். இன்று இவர்கள் இருவரும் ஜாதிக் கொடுமையின் தீவிரத்திற்கு அடையாளங்கள்! இந்த நாட்டில் ஜாதி மறுத்துக் காதலித்து, ஒரு தரப்பிலோ அல்லது இரு தரப்பிலுமோ பெற்றோர் ஆதரவின்றித் தனித்துவாழும் ஆயிரக்கணக்கான இணைகளில் ஒன்றாய் எங்கோ தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கி செழித்திருக்க வேண்டியவர்கள். அக்டோபர் 14, 2012இ-ல் தொடங்கிய இவர்களது வாழ்க்கை ஜூலை 4, 2013 உடன் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. திவ்யா _ -இளவரசன் வீட்டை விட்டு அக்டோபர் 14 அன்று வெளியேறி ஆந்திராவுக்குச் சென்று திருமணம் செய்துகொண்டு திரும்பிவந்தனர். நவம்பர் 7-ஆம் தேதி திவ்யாவின் தாய் தேன்மொழி தன் மகளைச் சந்தித்து, வீட்டுக்குத் திரும்ப வரும்படி அழைக்க, தனக்கு திருமணமாகிவிட்டதென்று கூறி, தாயுடன் செல்ல மறுக்கிறார் திவ்யா. அன்றே சில மணிநேரங்களுக்குப் பிறகு (அதாவது திருமணமாகி 24 நாட்களுக்குப் பிறகு) திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டார் என்று செய்தி பரவி, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் 3 கிராமங்கள் ஜாதிவெறி கொண்ட சுமார் ஆயிரம் பேரால் அடித்து நொறுக்கி எரிக்கப்படுகின்றன.
இதற்குப் பிறகு 4 மாதங்கள் தங்கள் வாழ்க்கையைத் தங்கள் போக்கில் வாழ்ந்துவந்தனர் இருவரும். மார்ச் மத்தியில் திவ்யாவின் தாய் தேன்மொழி ஆட்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ்) ஒன்றைத் தாக்கல் செய்கிறார். அதற்காக உயர் நீதிமன்றத்திற்கு நேரில் வந்த திவ்யா, இளவரசனுடன் தான் வாழவிரும்புவதாகக் கூறுகிறார். ஆள் வந்ததற்குப் பிறகும் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தொடர்கிறது. அடுத்த விசாரணைக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, தேன்மொழிக்கு உடல்நிலை சரியில்லை என்று திவ்யா மருத்துவமனைக்குச் செல்கிறார்.
ஜூன் 6, 2013 குழப்பமான மனநிலையில், தாயைத் தனித்துவிட முடியவில்லை. தாயையும், தம்பியையும் பாதுகாக்க வேண்டியது தன் பொறுப்பு. எனவே, சில காலம் தாயுடன் இருக்க விரும்புவதாகத் தெரிவிக்கிறார் _- அழுகிறார் _- மயக்கமிட்டு விழுகிறார் _- பா.ம.க.வின் வழக்குரைஞர் வளையத்தால் சூழப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார். அடுத்த 25 நாட்களில் (ஜூலை 1) தாய் விரும்பினால் இளவரசனுடன் வாழ்வேன் என்று நீதிமன்றத்தில் பதிவுசெய்கிறார். அடுத்த இரண்டே நாட்களில் (ஜூலை 3) இளவரசனுடன் சேர்ந்து வாழத் தயாராக இல்லை என்று அதே வழக்குரைஞர் வளையத்தினுள் இருந்தபடி சொல்கிறார் திவ்யா.
நிற்க, இந்தச் சூழலை, திவ்யாவின் மனப் போக்கை, இறுக்கத்தை, பதட்டத்தை, குழப்பத்தைக் கவனிக்கிற யாருக்கும் எழும் இயல்பான சந்தேகம் _- திவ்யாவை இப்படிக் குழம்பச் செய்யும் நெருக்கடியான சூழல் என்ன என்பதே! இதற்குப் பின்னணியில் யார் இருக்கக்கூடும் என்பதை யூகிப்பதோ, அல்லது விசாரணையின் மூலம் தெரிந்துகொள்வதோ நீதிமன்றத்திற்கும், காவல்துறைக்கும் கடினமான ஒன்றல்ல. இன்னும் சொல்லப்போனால் இந்தச் சூழல் குறித்து திவ்யாவின் வாக்குமூலமே அச்சில் பதிவாகியுள்ளது. அந்த வாக்குமூலத்தின் ஒலிவடிவமே கையில் இருப்பதாகத் தெரிவிக்கிறது தலித் முரசு மாத இதழ் (ஜூன் 2013 _- பக்கம் 20, 21)
திவ்யா தலித் முரசுக்கு அளித்த பேட்டியில், ஒரு நாள் எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து இளவரசனுக்குத் தொலைபேசியில் பேசி மகளைப் பார்க்க வேண்டுமெனக் கேட்டார். இளவரசனும் போய்ப் பார்த்துவிட்டு வா என்றார். ஆனால், என் அம்மா பா.ம.க.வைச் சேர்ந்த டாக்டர் செந்தில் வீட்டிற்கு என்னை வரச்சொன்னதும் நாங்கள் போக வேண்டாம் என முடிவெடுத்துவிட்டோம். என் அம்மா தனியாக இல்லை. என் அப்பாவைப் போலவே என் அம்மாவும் யாருக்கோ பயப்படுகிறார். யாரோ அவரை இப்படிச் செய் அப்படிச் செய் என மிரட்டுகின்றனர். அம்மாவிடம் கேட்டால் சொல்ல மறுக்கிறார் என்று குறிப்பிடுகிறார். இவ்வளவு தெளிவாக தன்னுடைய மற்றும் தன் தாயின் சூழல் என்ன என்பதை நீதிமன்றத்திலும், பத்திரிகைகளுக்கு மத்தியிலும், பேட்டியிலும் பதிவு செய்கிறார் திவ்யா. மிரட்டலுக்கும், பயப்படத்தக்க சூழலுக்கும் ஆட்களுக்கும் மத்தியில் நின்றபடி, அவர் காட்டிய குறிப்பை ஏன் நீதிமன்றமோ, அரசோ, காவல்துறையோ கண்டுகொள்ளவில்லை. தமிழகமே கொந்தளிக்கும் ஒரு பிரச்சினையில், மிகப்பெரிய கலவரத்துக்கும், சமூக அமைதிக்கு விடப்பட்ட சவாலுக்கும் காரணமான ஒரு வழக்கில் இத்தனை மெத்தனமாகச் செயல்படுவதா? திவ்யா தன்னாலானவரை, தனக்குத் தெரிந்தவரை துணிச்சலுடனும், அறிவார்ந்த முறையிலும் சூழலைக் கையாண்டுள்ளார். தன் தாய்க்கும் தம்பிக்கும் பாதுகாப்பாகத் தான் இருக்கவேண்டிய கடமை உள்ளது என்பதை எந்தச் சூழலில் அவர் சொல்கிறார் என்பதைக் கண்டுகொள்ள, கருத்தில் கொள்ளத் தவறியது ஏன்? இளவரசன் இது குறித்து குற்றம் சாட்டியும், திவ்யா குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்றும் அதனாலேயே திவ்யா இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என்று திவ்யாவின் குறிப்பை மொழிபெயர்த்துச் சொல்லியும், சுட்டிக் காட்டியும், பேட்டி கொடுத்த போதும் உரிய முறையில் அதனை அணுகாதது ஏன்?
இரண்டு நாட்களுக்கு முன் பேசியதற்கு முற்றிலும் மாறாக ஜூலை 3-ஆம் தேதி திவ்யா பேசுகிறார் என்றால், அப்போதே அவருக்கு கவுன்சிலிங் அளித்து அவரைத் தெளிவுபடுத்த வேண்டும்; அவரிடமிருந்து தெளிவான தகவலைப் பெற வேண்டும் என்ற முடிவுக்கு வராதது ஏன்? திவ்யாவைக் காப்பகத்தில் சேர்த்தோ, அவரது தாய்க்கும், தம்பிக்கும் உரிய பாதுகாப்பை உறுதிசெய்தோ, குறைந்த பட்சம் அவர்களை நேரில் வரவழைத்து அவர்களிடமும் விசாரித்தோ அவர்களுக்கு நம்பிக்கை தந்து, தன் மகள் விரும்பிய வாழ்க்கையைவிட, அவரை மாறாக சிந்திக்கத் தூண்டும் பிரச்சினை என்ன என்பதை அறிந்திருக்க வேண்டாமா?
மிகத் தெளிவாக இந்தப் பிரச்சினையில் பா.ம.க. என்ற அரசியல் கட்சியும், அதன் செயல்பாடுகளுமே இருக்கின்றன என்பதை அக் கட்சியினரே வெளிச்சம் போட்டுக் காட்டிவந்த சூழலில், இந்த வழக்கில் நீதிமன்றமும், காவல்துறையும் கூடுதல் கவனம் எடுத்திருக்க வேண்டாமா? சமூக இயக்கங்களும், ஊடகங்களும் தொடர்ந்து அலறிவந்த நிலையில் இந்த மெத்தனம் யாருடையது?
ஜூலை 4, 2013 _- திட்டமிட்டபடி இளவரசனின் மரணம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. முதலில் வந்த வெகு சாமர்த்தியமான செய்திகளின் வாயிலாக இது தற்கொலை என்று மனதில் பதிய வைக்கப்பட்டது. தொடர்ந்து வரும் செய்திகள் இது திட்டமிட்ட கொலையாக இருப்பதற்கான வாய்ப்புகளை உறுதிசெய்கின்றன. இரயிலே வராத நேரத்தில் இரயிலில் அடிபட்டு ஒருவர் தற்கொலை செய்திருக்கிறார் என்ற விந்தையான செய்தி எப்படிப் பரப்பப்பட்டது என்பதை எண்ணி வியக்க வேண்டியிருக்கிறது. அதிலும் தலையில் மட்டும் அடிபட்டு, வெள்ளைச் சட்டையில் துளி இரத்தக் கறையும் இல்லாமல் இரயிலால் தூக்கி வீசப்பட்டு பக்குவமாகப் படுக்க(!) வைக்கப்பட்டிருக்கிறார். சாதாரணமாக நடக்கவேண்டிய ஒரு பிரேதப் பரிசோதனை ஒழுங்காக நடப்பதற்கும்கூட நீதிமன்றம் சென்று காத்திருக்க வேண்டிய நிலையில்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கான நலன் இருக்கிறது. இளவரசனின் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற கேள்விக்கு உண்மையான விடை வெளிவந்தே தீரும். ஆனால், எதுவாயினும் அதற்குக் காரணமானவர்கள் யார்? கொலையானால் அதைச் செய்தவர்கள் யார்? தூண்டியவர்கள் யார்? என்பதும், தற்கொலையாயினும் சரி, அதற்குத் தூண்டியவர்கள் யார் என்பதும் மிக முக்கியமான கேள்விகள். அவர்கள் யாராயினும் அவர்களைத் தூண்டியது ஜாதி தான். ஜாதி வெறி என்று சொல்லி, ஜாதி நல்லது; ஜாதி வெறிதான் கொடியது;
தீண்டாமை மட்டும்தான் கொடியது என்று சொல்ல முனைவது அறிவுடைமை ஆகாது. நிகழ்ந்த அனைத்துக்கும் காரணம் ஜாதிதான். ஜாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் அத்தனைப் பேரும்தான். இளவரசனின் மரணம் மட்டுமல்ல; திவ்யாவின் தந்தை நாகராஜன் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படுவதற்கும் காரணம் ஜாதிதான்; இந்த ஜாதிவெறியர்கள்தான் _- ஜாதியர்கள்தான். மகள் மாற்று ஜாதியில் திருமணம் செய்துகொண்டு 24 நாட்களுக்குப் பிறகும், அவரைத் தொடர்ந்து வார்த்தைகளால் வாட்டி, தற்கொலைக்குத் தூண்டியவர்களும் இவர்களே! கலவரத்துக்கும், தீவைப்புக்கும், பொருள் இழப்புக்கும் மட்டுமல்ல, கொலை _- தற்கொலை எதுவாயினும் அதற்குக் காரணமும் ஜாதியே என்னும் நிலையில் இனியாவது உரிய நடவடிக்கைகள் இருக்குமா? அல்லது மேலோட்டமாக கடும்போக்கைக் காட்டிவிட்டு, உள்ளூர நடைபெறும் சிக்கல்கள் கண்டுகொள்ளப்படாமல் விடப்படுமா?
ஜாதிப்பசிக்கு இளவரசனைப் பலி கொடுத்துவிட்ட நிலையில் திவ்யாவைக் காக்க வேண்டியது அவசியமாகும். இக்கொடுமைக்கு, கொலைக்கு மூல காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவதும் அவசியமாகும்.
குறிப்பிட்ட இந்த திவ்யா _- இளவரசன் பிரச்சினையின் வாயிலாகவும், இதன் முடிவுகள் வாயிலாகவும் ஜாதி வெறியர்கள் வென்றுவிட்டதாகவும், தாங்கள் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டதாகவும் செய்யும் கொக்கரிப்புகளுக்கு என்ன பதில்? இன்னுமொரு ஜாதி மறுப்புக் காதல் நடந்துவிடக் கூடாது என்பதற்கான வெளிப்படையான மிரட்டலாகவே ஜாதிவெறியர்கள் இதைப் பார்க்கிறார்கள் எனில், இது அரசுக்கும், அரசியல் சட்டத்துக்கும், நீதித்துறைக்கும், காவல்துறைக்கும் சமூக அக்கறை கொண்டோருக்கும், முற்போக்காளர்களுக்கும், சமூக சமத்துவத்துக்கும் விடப்பட்டுள்ள சவால்! இனி யாராவது ஜாதி மாறி திருமணம் செய்தால் இது தான் நடக்கும் என்று காட்டுமிராண்டிகள் விடுத்திருக்கும் எச்சரிக்கை!
ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆயிரமாயிரம் காதல் திருமணங்கள், ஜாதி மறுப்பு _- மதமறுப்புத் திருமணங்களாக நாள்தோறும் நடந்துவருகின்றன. அவற்றைத் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்கள் மனிதநேயர்கள். எனினும் இது அரசின் கடமை. ஒவ்வொரு பெற்றோருக்கும் உள்ள கடமை. தாங்கள் பெற்ற பிள்ளைகளின் விருப்பத்தை -_ வாழ்க்கையை, ஜாதி என்னும் பெயரால் சிதைக்காமல் இருக்க வேண்டியது அவர்களே!
காட்டுமிராண்டிக் கூட்டத்தின் ஜாதி _- மதத் தடைகளை மீறி மனிதர்களாகக் காதல் செய்யும் காதலர்களை, அவர்களின் தனிப்பட்ட வாழ்வை – விருப்பத்தை அங்கீகரிப்போம். அது வீதிக்கு வந்தால், யாராவது அவர்களுக்கு இடையூறு செய்தால் ஒட்டுமொத்த சமூகமாக நின்று அவர்களுக்கு உதவுவோம்.
வீட்டுப் பிரச்சினை வீதிக்கு வந்தால் தலையிடுவோம் என்று வழக்கமாகச் சொல்லும் சமூகம், இந்தப் பிரச்சினையில் வீதிக்கு வரட்டும். இனிய வாழ்க்கைக்கு இடையூறு செய்யும் கும்பலை விரட்டி அடிக்கட்டும். இனியும் அதில் தாமதம் என்றால் இதை அறிவார்ந்த பண்பட்ட சமூகம் என்று எப்படி ஒப்ப முடியும்?
– இளையமகன்