ருணவிமோசகர் சாமியோவ்…!

ஜூலை 16-31 2013

-பிரதிபா

தஞ்சாவூரில் உள்ள ஆயிரமாவது ஆண்டுப் பழைமையான கோயிலான (ராஜராஜசோழனால் கட்டப்பட்ட) தஞ்சைப் பெரிய கோயிலையும்விட மிகப் பழைமையான கோயில் திருவாரூரில் வீற்றிருக்கும் தியாகராஜர் சாமி திருக்கோயில்.

ஆரூராதியாகேசா…

இச்சாமிதான் திருவாரூரின் சிறப்புமிக்கதான தேரில் பவனி வரும் சாமி. தியாகராஜருக்கு கமலாம்பிகை என்ற காதலி உண்டு. அக்காதலிக்கும் தியாகராஜரின் மூலஸ்தானத்துக்கும் அருகில் ஒரு மண்டபத்தில் சிலையாக கமலாம்பிகை அமைக்கப்பட்டு, எல்லோராலும் (தியாகராஜரைவிட கமலாம்பிகையைத்தான்) முக்கியமாக வணங்கப்பட்டும் வருகிறது.

அவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. திருவாரூரில் மூன்று விசயம் நடந்தால் தியாகராஜர் காதலி கமலாம்பிகையைக் கைப்பிடிப்பார் என்பது அய்தீகமாம்.

அதாவது, முதல் விசயமாக தியாகராஜர்  தன் பாதங்களை முழுமையாகக் காட்ட வேண்டும். (வருடத்தில் ஒருநாள்  தியாகராஜரின் ஒருபாதம் மட்டும் அபிஷேகத்துக்குக் காண்பிக்கப்படும். மற்றநாட்கள் எல்லாம் அவர் தன் பாதங்களை யாருக்கும் காண்பிப்பது இல்லை.)

இரண்டாவது, கமலாலயக் குளம் வற்ற வேண்டும். (கோயிலுக்கு முன்னால் குளம் ஒன்று உள்ளது. அக்குளத்தில் எப்போதும் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கும், வற்றாது).

மூன்றாவது, கல்தேர் நகர வேண்டும். (கன்றினைக் கொன்றதால் தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக்கொன்ற மனுநீதிச் சோழன் வரலாற்றைச் சொல்லும்வகையில் திருவாரூரில் கல்தேர் ஒன்று செய்து வைத்து இருப்பார்கள்.) அந்தக் கல்தேர் எப்படித் தானாக நகரும்?

இம்மூன்றும் நடந்தால் கமலாம்பிகையைத் திருமணம் செய்துகொள்வதாக தியாகராஜர் வாக்குறுதி கொடுத்துள்ளார்.

ஆக., இம்மூன்றுமே நடக்காது என்று தெரிந்தும் கமலாம்பிகையை ஏமாற்றி ஈவ் டீசிங் செய்து இருக்கிறார் தியாகராஜர். சோ, அவர்மீது ஈ.பி.கோவின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சரி அத விடுங்க, தியாகராஜராவது பரவாயில்ல… ஆயிரம் ஆண்டுகளா ஒரு பொண்ணத்தான் ஏமாத்திட்டு இருக்கார். பட், நம்ம ருணவிமோசகர் இல்ல… அதாங்க கடைசியா சாமி கும்பிட்டுப் போகும்போது கைத்தட்டிட்டு காது கேட்குதான்னு கிண்டல் பண்ணிட்டுப் போவோம்ல… அந்தச் சாமிதான், அது கேட்பார் நாதியற்றுப் பாழடைந்து கிடந்தது திருவாரூர் கோயிலில் ஓர் ஓரமாக…

சமீபத்தில், அக்கோயிலுக்குச் சென்று பார்த்தோம். வெள்ளிக்கவசம் அணிந்து, வெள்ளிக்கொடை எல்லாம் வைத்து, சாமிக்கு லைட் எல்லாம் போட்டு ஜெகஜோதிலட்சுமியாய்… சாரி, ஜோதியாய் மின்னினார்.

என்னங்கய்யா திடீர்னு ஆச்சு, இச்சாமிக்கு வந்த வாழ்வைப் பாரேன் என்று தியாகராஜரே பொறாமைப்படும் அளவுக்கு வளர்ந்துட்டார் ருணவிமோசகர்.

எவனோ கிளப்பிவிட்டு இருக்கான். இந்தச் சாமியைக் கும்பிட்டா கடன் தொல்லை அடைந்து, மனதில் இருக்கும் பாரம் எல்லாம் இறங்கி சந்தோஷ வாழ்வு கிடைக்கும் என்று.

உடனே நம்ம மக்கள்கிட்ட கேட்கவா வேணும்… ஓடி ஓடி அச்சாமிக்குக் காணிக்கை செய்கிறார்கள். இதனால் ஆசாமிகள் கொழிக்கிறார்களோ இல்லையோ, ருணவிமோசகர் நன்றாகக் கொழிக்கிறார்.

தினமும் பாலில் அபிசேகம்தான், பொங்கல்தான், வெள்ளி ஆடைதான், கொடைதான், பளிச்சுனு லைட்டுத்தான், கலக்குற சந்துரு லெவலுக்குக் கலக்குறாரு நம்ம ருணு…

ருணவிமோசகரிடம் திருநீறு வாங்கிப் பூசிக்கொண்டோம்னா உங்க கடன் தொல்லை கண்டிப்பா நீங்கிடும்.

அதுனால, இனிமே பேங்க்லகூட கடன் வாங்கிட்டு நம்ம ருணுகிட்ட திருநீறு வாங்கிப் பூசிக்கோங்க… அப்புறம் பாருங்க மகிமையை, பேங்க்காரவங்ககூட கடனைத் திருப்பிக் கேட்க மாட்டாங்க..

நீங்க எஸ்கேப் ஆயிடலாம். மீறிக் கடனைத் திருப்பிக் கேட்டா எல்லாம் ருணவிமோசகர்தான்னு அவரைக் கைக்காட்டிவிட்டுடலாம்.

நமக்குத் தேவை கடன் பத்திரம் அல்ல…அல்ல…அல்ல…ருணவிமோசகருடைய திருநீறுப் பொட்டலம்… பொட்டலம்… பொட்டலம்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *