மதத்தில் தொலைந்துபோன மனிதர்கள்…!

ஜூலை 16-31 2013

– சி.இராஜாராம்

ஆதி மனிதன் இயற்கை மற்றும் இயற்கை தந்த சக்திகளை _ இனம் தெரியாத, அடையாளப்படுத்த முடியாத சக்திகளைக் கண்டு அஞ்சி, அடங்கி, பணிந்து, சாந்தி செய்வித்து, பலி கொடுத்து, அதன் வழியாக மனிதர்கள் தங்களுக்கும், அவற்றுக்கும் இடையில் பௌதீக ரீதியில் இல்லாமல் மாந்திரீக, சமய ரீதியிலான உறவைக் கட்டமைத்துக் கொண்டான். இந்த இயற்கையை எதிர்கொள்ளும் போராட்டத்தில் மனிதன் தொடர்ந்து செயல்படுகிறான். அதற்காக பல சடங்குகளை நிகழ்த்துகிறான். அச்சடங்குகள் ஒலி வடிவத்தில் மந்திரங்களாகவும், பாடல்களாகவும் இருக்கின்றன. மேலும், தன்னைத்தானே திருப்தி செய்து கொள்வதற்காகப் பல்வேறு சடங்குகளை வழிபாடு என்ற பெயரில் நிகழ்த்துகிறான்.

இவ்வழிபாடுகளுக்காக மனிதன் உருவாக்கிக் கொண்ட உருவங்கள், கதைகள், புராணங்கள், அய்தீகங்கள், தொன்மங்கள், நாள்தோறும் மேற்கொள்ளும் உடல் _ மனம் சார்ந்த சித்தரிப்புகள் (குறியீடுகள்) ஆகிய பல்வேறு நிகழ்வுகளை அடிப்படையாகக் கொள்கிறான். மேற்குறித்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு சமயம் என்பது உருவாகிறது.

ஆறு, நெறி, கொள்கை, மதம், சமயம் _ என்பன ஒரே பொருளைக் குறிக்கும் வேறுபட்ட சொற்கள். ஒரு பொருள் அல்லது நெறிமுறை (Principle) இவ்வாறுதான் இருக்க வேண்டுமென்று மதித்துக் கொள்வதே மதம் என்றும், இறைவனை இம்மையிலேனும் மறுமையிலேனும் அடைவதற்குச் சமைவது சமயம் என்றும் பெயர் பெற்றது.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட நூல்களில் மட்டுமே மதம் என்னும் சொல் தமிழ்நூல்களில் வழங்கப்பட்டு வருகின்றது.

ஷிந்தோ (ஷிண்டோ) என்பது புராதனமான ஜப்பானிய மதம், ஷிந்தோ பல கடவுள்களைப் பேசுகிறது. அந்தக் கடவுள்களை காமி என்கிறார்கள். மலை, காற்று, உணவைக்கூட கடவுள் என்கிறார்கள். மிருகங்களை கடவுளின் தூதர்கள் என்று நம்புகிறார்கள் ஜப்பானியர்கள்.

சீனாவின் முக்கிய மத நம்பிக்கைகளில் ஒன்று தாவிஸம். இம்மதத்தை நிறுவிய லாவ் ட்சே (Leo Tse) வை சீன மக்கள் கடவுளாகவே கருதினர். தாவிஸம் சொல்வது கடவுள்கள் அனைவரும் ஒரே தாயின் வடிவங்களே என்பது. அந்தத் தாய் இயற்கையே என்பது அவர்கள் நம்பிக்கை.

ஜூடாயிஸம் _ யூதர்களின் மதம். கிறித்துவ மதத்தைவிடப் பழைமையானது. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் உள்ள கருத்துகளின் அடிப்படையில் உருவான இந்த மதம் ஒரே இறைவனைப் பற்றிப் பேசுகிறது. அவர்தான் உலகத்தைப் படைத்தார்; அவர்தான் உலகை ஆள்பவர்; அவர் சர்வசக்தியுள்ளவர்; எதையும் அறிந்தவர்; எங்கும் நிறைந்தவர். மேலும் அவர் நியாயமானவர் கருணையுள்ளவர் என்பது. ஒவ்வொருவரும் கடவுளின் பிம்பமாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது யூதர்களின் நம்பிக்கை.

கபிலவாஸ்துவில் இரண்டாயிரத்து அய்ந்நூறு ஆண்டுகளுக்கு முன் பிறந்த சித்தார்த்த கவுதமரால் உண்டாக்கப்பட்டது பவுத்தம். இந்தியாவில் தோன்றிய புத்தரை உருவமாக்கி மதமாக உள்ளது. ஆனால், பவுத்தத்தை மதமல்ல, அது ஓர் நெறி என்கிறார் தந்தை பெரியார்.  சமண சமயம் மிகப் பழமையானது. வர்த்தமான மகாவீரர் காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமண சமயம் தோன்றியிருந்தது. அதன் சரித்திரத்தில் முக்கிய புருஷர் வர்த்தமான மகாவீரர். ஜைனர்கள் உலகில் உள்ள அனைத்தையும் ஜீவ_அஜீவ, அதாவது, உணர்ந்த _ உணர்வற்ற என்ற நிலையைக் கொண்ட கொள்கை உடையவர்கள். வெறும் ஜீவன்தான் உண்மைநிலை என்பது ஜைனர்களின் கொள்கை.

பழங்காலத் தமிழ் மக்களின் அய்ந்திணைத் தெய்வ வணக்கங்களுள் இரண்டு மட்டுமே மதமாக வளர்ச்சியடைந்தன. சேயோன் வணக்கத்திலிருந்து சிவ மதமும், மாயோன் வணக்கத்திலிருந்து திருமால் மதமும் தோன்றின. மூவேந்தரும் முதலில் சிவனடியார்களாக இருந்து, பின்னர் ஆரியர் (பிராமணர்) வந்து முத்திருமேனிக் கொள்கையைப் புகுத்தியபின், இடையிடையில் ஒவ்வொரு மன்னரும் மாலியத்தையும் (வைணவத்தையும்) தழுவினர்.

சீக்கியர் மதம் பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றியது. அச்சமயத்தை நிறுவியவர் குருநானக் என்பவர். இவர் பாபர் காலத்தவர். இஸ்லாம், இந்து சமயங்களின் பொதுப்பண்புகளைத் தழுவிப் புதியதொரு சமய நெறியாக்கும் முயற்சி உருவாயிற்று. சீக்கியர்களுக்கு ஒரே ஒரு கடவுள்தான். அவர் எல்லா மதத்துக்கும் உரியவர்.

இறைவன் ஒருவனே இந்த ஒரே கடவுளின் கட்டளைக்கு முக்கியமான கீழ்ப்படிதலைக் கற்பிப்பதுவே முகம்மது நபியின் குறிக்கோளாக இருந்தது. அவரைப் பின்பற்றுவோர் இஸ்லாமியர்கள்.

கிறித்துவம் _ கடவுள் ஒருவரே என்கின்றது. அந்த ஒருவரே பிரபஞ்சத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்தார். கடவுளை பிதா என்றழைக்கின்றனர்.

ரிக் வேதம், இருப்பது ஒரே ஓர் உண்மைதான் (ஏகம் சத்). அதைப் புத்திசாலிகள் பல வடிவங்களில் காண்பார்கள் என்கிறது.

இந்து மதம் சொல்லும் ஒரே ஓர் உண்மை பிரம்மா. அது அழிவில்லாதது; படைக்கப்படாதது; சாஸ்வதமானது. அதுதான் இறுதி உண்மை. அதை அடைவதுதானே ஜீவனின் _ ஆன்மாவின் குறிக்கோள். ஜீவன் வேறு பிரம்மம் வேறு. ஜீவன் அழியக்கூடியது, பிரம்மம் அழிவில்லாதது. பிரம்மத்துக்கு வடிவமில்லை. பிரபஞ்சம் எங்கும் பிரம்மம் விரவியுள்ளது. இதை, தோற்றமாக என்கிறார் ஆதிசங்கரர். உண்மையாக என்கிறார் இராமானுஜர். பிரம்மம்தான் இந்து மதத்தின் அடிப்படைக் கருத்து. இதில் பல்வேறு கடவுள்களும் அவர் மனைவி _ மக்களும், ஏன் மிருகங்களும்கூட வருகிறார்கள்? அவர்களை இந்துக்கள் வழிபடுகிறார்கள்.

மதவெறியும் அதனால் ஏற்படும் சண்டையும் மக்கள் மகிழ்ச்சியாய் வாழ்வதற்கும் அமைதியாய் முன்னேறுவதற்கும் தடையாய் நிற்கின்றன. இந்தியர்களில் 90 சதவிகிதம் பேர் முட்டாள்கள். முட்டாள்களாக இருப்பதால் இவர்களைச் சுலபமாக ஏமாற்றிவிட முடிகின்றது. இதனால், மதத்தின் பெயரால் சில தீய சக்திகள் தவறான பாதைக்குத் திருப்பி விடுகின்றன என்று இந்திய பிரஸ்கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ கூறியது இதைத்தான்.

உலகிலுள்ள மொத்த மக்கள்தொகையில் கிறித்துவ மக்கள் தொகை 220 கோடியும் (32 சதவிகிதம்), முஸ்லிம்கள் 160 கோடியும் (23 சதவிகிதம்), இந்துக்கள் 100 கோடியும் (15 சதவிகிதம்), புத்த மதத்தினர் 50 கோடியும் (7 சதவிகிதம்), யூதர்கள் 1.4. கோடியும் (0.2 சதவிகிதம்), பகாய், ஜெயின், சீக்கியம், தாவோ, டென்ரிகோ, விக்கா, ஜோரோஸ்ட்ரியன், டோமேன்ஷன் போன்ற பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் 5.8 கோடிபேரும் (ஒரு சதவிகிதத்துக்கும் குறைவு), தவிர 40 கோடிப் பேர் (6 சதவிகிதம்) மரபுவழி அல்லது பாரம்பரிய மதங்களைப் பின்பற்றுபவர்களாகவும் இருக்கின்றனர். பிற மதத்தவர்கள் அதிகளவில் இந்தியாவில்தான் வசிக்கின்றனர். (இது அமெரிக்காவைச் சேர்ந்த பி.இ.டபிள்யு என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்ட உலக அளவிலான மக்கள் தொகை குறித்த விவர அறிக்கை)

இந்த நாட்டில் கல்வியறிவு பெற்றவர்கள்தான் மதம் மற்றும் ஜாதி உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றனர். தேர்தலில் வேட்பாளர்களின் தகுதியைப் பாராமல் தன்னுடைய மதம் மற்றும் ஜாதியைச் சார்ந்தவரா? என்பதைப் பார்த்து இந்தியர்கள் ஓட்டளிக்கிறார்கள். மனிதனால் படைக்கப்பட்ட மதம் அம்மனிதனையே பிடித்துக் கொண்டு ஆட்டுவிக்கிறது. ஆனாலும் நம்மவர்கள் அம்மதத்தையே விட்டு வெளிவரத் தயாராயில்லை. மதத்தில் தொலைந்து போன மனிதர்களை மீட்பது குறித்து சிந்திப்பதே இப்போதைய இந்தியாவின் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *