முற்றம்

முற்றம் ஜூலை 16-31 2013

இணையதளம் www.parliamentofindia.nic.in

இந்திய நாட்டின் அரசமைப்பு முறைகளையும்,நாடாளுமன்ற அமைப்பையும் விளக்கும் இணையதளம் இது. இந்தியக் குடியரசுத் தலைவர், மாநிலங்களவை, மக்களவை என்ற மூன்று பிரிவுகள் படங்களுடன் காணப்படுகின்றன. இரு அவைகளின் உறுப்பினர்கள், அவர்களின் தொடர்பு முகவரிகள், சுயவிவரங்கள், நாடாளுமன்றக் குழுக்கள் விவரம், விதிமுறைகள், வரலாறும் கூட்டத்தொடர் பற்றிய குறிப்புகள், கட்சி வாரியான பட்டியல், நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகள், விவாதங்கள் என நாடாளுமன்ற அனைத்து நடவடிக்கைகளையும் அளித்துள்ளது. நாடாளுமன்ற வரலாறு,முன்னாள் உறுப்பினர்கள் விவரம் ஆகியவையும் நூலகம் மற்றும் அருங்காட்சியகம் பிரிவில் நூல்களும் படங்களும் இடம்பெற்றுள்ளன.

பொதுமக்களும் அரசியல் சமூக ஆர்வலர்களும் பார்த்துக் குறிப்பெடுத்துக் கொள்ள ஏராளமான தகவல்கள் உள்ளன.


நூல்

நூல்: 95 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிய திராவிடர் இயக்க சமூகப்புரட்சி
பதிப்பாசிரியர்: கி.வீரமணி

வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, 84/1,(50) ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007. தொலைப்பேசி: 044-2661 8161.
பக்கங்கள்: 88 விலை: 50/-

பார்ப்பனரல்லாத இளைஞர்களுக்கென  20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னையில் நடைபெற்ற  மாநாடு பார்ப்பனரல்லாத வாலிபர் மாநாடு என்றே குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றது.  இன்றைய நடு வயதினரும் இளைஞர்களும் அனுபவித்து வருகின்ற பல்வேறு சலுகைகளுக்கு இந்த மாநாடுதான் கால்கோள் விழா நடத்திற்று. 1927 அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இம்மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தும் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் கல்விகற்க அனுபவித்த துயரங்களும், அதுவும் பிறப்பு அடிப்படையில் எதிர்கொண்ட பிரச்சினைகளும் கண்முன் நிறுத்தப்பட்டுள்ளன. மற்றவர்களைவிட நாம் கீழானவர்கள் என்ற தீய கருத்தைப் போக்குவதில் நாம் வெற்றிபெற்று, எல்லோரையும் போல நாமும் சுதந்திரமானவர்கள், சமஉரிமை பெற்றவர்கள் என்பதை நிலைநாட்டினால் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியதாகவே கருதலாம் என்று இந்நூல் தரும் செய்தி நெஞ்சை நெகிழச் செய்து, இளையோர் மனதில் பதியச் செய்ய வேண்டியதாகவும் அமைகின்றது.

– அ.அனுடயானா, முனைவர் பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.


குறும்படம்

Me&Mr unknown  – தமிழ்

எஸ்.எஸ்.தினேஸ்குமார்

காதல் திருமணம் செய்து எந்தவித ஆதரவுமின்றி, பரபரப்பான நகர வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள படம்.

பிரியாவும் அனுவும் அடுக்குமாடிக் குடியிருப்பில் அடுத்தடுத்த வீட்டில் வசிப்பவர்கள். காதல் மணம் புரிந்த பிரியாவின் நட்புக் கிடைக்க, தங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதுபோல அடிக்கடி சண்டைபோட்டுக் கொள்கின்றனர் சக்தி-_அனு தம்பதிகள். இதனை அறியாத பிரியா, அனுமீது பரிதாபப்படுகிறாள். நட்பினால், அனைத்துக் குடும்பச் செய்திகளையும் பகிர்ந்து கொள்கிறாள்.

பிரியாவும் அவள் கணவனும் சக்தியைத் திருத்தத் திட்டம் போடுகின்றனர் அனுவும் சக்தியும் போட்ட சூழ்ச்சி அறியாமல். சக்தியைத் திருத்தினார்களா அல்லது சக்தியின் சூழ்ச்சியில் வீழ்ந்தார்களா என்பதைப் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *