அய்யாவின் அடிச்சுவட்டில்

மார்ச் 16-31

மனித சமுதாய வளர்ச்சிப் பற்றுதான் இருக்கவேண்டும் – கி.வீரமணி

பெரியாருடன் நெ.து.சுந்தரவடிவேலு

31.7.1973-இல் கல்வியில் இடஒதுக்கீடு குறித்து, ஜிலீமீ பிவீஸீபீ பேப்பர் வெளியிட்ட கருத்துக் குறித்து, விடுதலையில் அன்று தலையங்கம் எழுதினேன். அதில், பார்ப்பனப் பத்திரிகை குறித்து, பார்ப்பன எரிச்சல் என்ற தலைப்பில் எழுதினேன். பத்திரிகைகள் என்ற ஆயுதங்கள் தங்கள் கையில் இருப்பதால், பிரச்சாரத்தின் மூலம் எவ்வுண்மைகளையும் தவிடுபொடு ஆக்கலாம்; மலையை மடுவாக்கலாம்; சாணியைச் சாமியாக்கலாம் என்பது பார்ப்பனர்களது ஆழ்ந்த நம்பிக்கையாகும். அதிலும், பார்ப்பனர்களது கல்வி ஆதிக்கமும், ஏகபோகமும் குறைகிறது என்றவுடன், அடிபட்ட பாம்பு சீறிப் படம் எடுத்து ஆடுவது மாதிரி விஷமப் பிரச்சாரத் திருப்பணியில் ஈடுபடுவதற்கு அவர்கள் தயங்குவதே இல்லை!

இன்று (31.07.1973) காலை வெளிவந்த மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவான அய்யங்கார் தினசரி 9-ஆம் பக்கத்தில் ஒரு மூன்று காலம் தலைப்பில் “Many Bright Students Denied P.G. seats due to Reservation rule” என்று ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறது!

அதன், தனி நிருபர் எழுதியிருப்பதாக வந்துள்ள அந்தச் செய்தியில் பத்தி பத்தியாகப் பார்ப்பன ஜாதிப் புத்தியும், அதற்கே உரிய விஷமமும்தான் வரிக்கு வரி வெளிவந்திருக்கிறது!

ஏராளமான அளவு அதிக மதிப்பெண்கள் பெற்று இருந்தும்கூட, பல இளம் மாணவர்களும் மாணவிகளும் மேல்பட்டப்படிப்பு வகுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படாமல் விடப்பட்டுவிட்டனர். காரணம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஒதுக்கப்பட்ட ரிசர்வேஷன் விதியை மிகவும் கண்டிப்பாக அமுல்படுத்த முனைந்ததுதான்.

இவ்வாறு தைரியமாக ஒரு ஏடு எழுதுகிறது என்றால், தமிழர்களை_-பிற்படுத்தப் பட்டவர்களை-_தாழ்த்தப்பட்டவர்களை ஏமாந்த சோணகிரிகள், சொரணையற்ற சோற்றாலடித்த பிண்டங்கள் என்ற நினைப்பினால்தானே! இல்லாவிட்டால் அப்படி எழுதுவார்களா?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் படிப்பறிவே இல்லாது தற்குறிகளாக இருந்த சமுதாயம், கடந்த 10 ஆண்டுக் காலமாகத்தான் ஓரளவுக்காவது படிப்பதற்கு முன்வரும் திருப்பம் ஏற்பட்டது என்றவுடன், சமுதாய நீதியில் நம்பிக்கை இருப்போர் எவராயினும் அதனை வரவேற்கக் கடமைப்பட்டவர்கள் அல்லவா? அதை விட்டுவிட்டு ரிசர்வேஷன் விதியைக் கடைப்பிடிப்பதால் திறமை வாய்ந்த பல மாணவர்கள் விடப்படுகிறார்கள் என்று ஒப்பாரி வைப்பது எதற்காக?

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் ஒரு பச்சைத்தமிழர் (திரு. நெ.து. சுந்தரவடிவேலர்). பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்புக் கதவுகளைத் திறப்பதே தனது கல்வித் தொண்டின் முக்கியப் பகுதி என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை படைத்தவர் என்பதால்தானே!

ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு என்பது பழமொழி! பார்ப்பானுக்கு எப்போதும் பின் புத்தி என்பது முந்திய அனுபவ மொழியாகும். மிகவும் கெட்டிக்காரர்களான பிள்ளைகள், மேல் பட்டப்படிப்புச் சேர்க்கையில் எப்படி விடப்படுவார்கள்? ரிசர்வேஷன் விதி என்பது என்ன? 100க்கு 100-ம் மற்றவர்களுக்கே தத்தம் செய்யச் சொல்கிறதா?

நியாயப்படி-, சமநீதிப்படி, முன்னேறியவர்களை எல்லாம் கொஞ்சக் காலத்திற்கு ஒதுங்கியிருங்கள் என்றல்லவா சொல்ல வேண்டும்? அப்படிச் சொல்லவில்லையே! நூறு இடங்கள் என்றால், அதில் 49 இடங்கள்தானே பிற்படுத்தப் பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன! எஞ்சிய, 51 இடங்கள் திறந்த போட்டிதானே! திறந்த போட்டியில் (Open Competition) மார்க் அடிப்படையில் தானே மாணவர்களைச் சேர்க்கின்றனர்? தகுதியும் திறமையும் உள்ள, அதிக மார்க் வாங்கியவர்களை எப்படி அதில் விட்டுவிட முடியும்? மேலும், ஒவ்வொரு கல்லூரியிலும் உள்ள முதல்வரும், குழுவும்தானே மாணவர் பட்டியலைத் தயாரிக்கின்றனர்! அதில் ரிசர்வேஷன், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர் களுக்கான ஒதுக்கீடு விதி – சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறதா என்று துணைவேந்தர், பல்கலைக்கழகம் பார்ப்பது பாவமா? குற்றமா? பார்ப்பனருக்கும் அவர்தம் அடிமைகளுக்கும் இந்த விதியைத் துணைவேந்தர் வலியுறுத்துவதனால் எவ்வளவு எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது பார்த்தீர்களா? இதற்கு முன்னால் இருந்தவர் அப்படி ஒரு விதி இருப்பதாகவே நினைக்காமல் அக்கிரகாரத்துச் செல்லப்பிள்ளை யாகவே இருந்து விட்டதால், இப்போது சட்டப்படிக் காரியம் செய்வது அவாளுக்குச் சங்கடத்தைக் கொடுக்கிறது! மார்க் அடிப்படையில் தகுதி, திறமை பேசுவது மாதிரி மனதறிந்த பித்தலாட்டம்- _ ஒன்னாம் நம்பர் அயோக்கியத்தனம் கிடையவே கிடையாது!

D, Dplus மார்க் வாங்கியவர்களை விட்டுவிடுகிறார்களாம்! அவர்கள்தான் 51 சதவிகிதக் கோட்டாவில் பெரும் பங்கு பெறுகின்றனரே! எப்படி விட்டுவிடப்படமுடியும்? 49 சதவிகித மக்கள் – இதுவரை படிப்பு வாசனை அறியாத மக்கள் முன்னேற வேண்டாமா? அய்.ஏ.எஸ். அதிகாரி மகன், சுழலும் மின்சார விசிறிக்கடியில் உட்கார்ந்து மின் விளக்கில் படித்தும், அத்திம்பேர் தயவாலும் வேறுசில செல்வாக்காலும் D, Dplus வாங்குவதைவிட, சாதாரண தோட்டி மகன், கூலி வேலைக்காரன் மகன் குடிசையில் உட்கார்ந்து மண்ணெண்ணெய் விளக்கில் அரைப்பட்டினியுடன் படித்து வாங்கும் B கிரேடு அதிக மதிப்பு வாய்ந்த ஒன்றல்லவா? நம்மக்களும் படிக்கிறார்களே என்றவுடன், பார்ப்பன எரிச்சல் எரிமலை எப்படி வெடிக்கிறது பார்த்தீர்களா? பார்ப்பானுக்குள்ள ஜாதிப்பற்று, எவ்வளவு சீக்கிரம் வெளியே வருகிறது பார்த்தீர்களா?

தமிழனுக்கு இன உணர்ச்சி, மான உணர்ச்சி இருந்தால் இப்படி ஒரு செய்தியை வெளியிடும் துணிவு அவர்களுக்கு வருமா? பார்ப்பனர்கள் கெட்டிக்காரர்கள், தமிழர்களைவிட நல்லவர்கள் என்று பேசும், பல கொள்கை மறந்த தமிழர்களான சொரணையற்ற சோணகிரிகளுக்கு நாம் மேற்கண்ட செய்தியினைக் காணிக்கையாக வைக்கிறோம்! சமூக நீதி வழங்கும் எவர்மீதும் அக்கிரகார வேட்டை நாய்களான ஏடுகள் விழுந்து, பிடுங்க முயற்சிக்கத்தான் செய்யும். தமிழர்கள் இன உணர்ச்சி என்ற தடியைத் தூக்கினால் அந்த வேட்டை நாய்களும், வெறி நாய்களும் விழுந்து அடித்துக் கொண்டு ஓடுவது உறுதி! உறுதி!! என்று, என் மன உணர்ச்சியை எழுதி வடிகால் தேடினேன். இனத்தின் விடியலை விடுதலை ஏட்டினைத் தவிர எவரே முன்னெடுத்துச் செல்லமுடியும்? சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள பல கல்லூரிகளில் எம்.ஏ., எம்.எஸ்சி. ஆகிய மேல் பட்டப்படிப்புக்கான வகுப்புகளில் மாணவர் சேர்க்கையில், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வசதியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வலியுறுத்திய காரணத்தால், முன்னேறிய வகுப்பைச் சார்ந்த பல மாணவர்கள், மிகவும் கெட்டிக்காரர்களாக இருந்தும்கூட வாய்ப்புகளைப் பெற முடியவில்லை என்றெல்லாம் மூன்று காலம் தலைப்பில் நேற்று (31-.07.1973) மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு ‘The Hindu’ அதன் 9ஆம் பக்கத்தில் ஒரு செய்தியினை வெளியிட்டுத் தனது ஆத்திரத்தைக் கொட்டியதுபற்றி நேற்றும் எழுதினோம்! அச்செய்திக் குறிப்பில் உள்ள கருத்துகள்பற்றி நம்மவர்கள் என்பவர்களுக்குக்கூட, சிலருக்குக் குழப்ப மனப்பான்மையும், அதன் காரணமாகக் குதர்க்க புத்தியும் உண்டு என்பதால், அதனை விரிவாக விளக்க வேண்டியது நமது கடமை என்று கருதுகிறோம்.

எம்.எஸ்சி. படிப்பில் 20 இடங்கள். அதில் மாணவர் சேர்க்கைக்கான பட்டியலைப் பல்கலைக்கழகத்திற்கு, அக்கல்லூரி காட்டி அனுமதி பெறவேண்டும் என்ற முறை இருக்கிறது. இதன்படி, 20 இடங்களில் 15 இடங்களை, அக்கல்லூரிக் கமிட்டி அனுமதி பெறவேண்டும் என்ற முறை இருக்கிறது. இதன்படி, 20 இடங்களில் 15 இடங்களை அக்கல்லூரித் தாளாளர் அல்லது நிருவாகக்குழு அல்லது அவர்களது செலக்ஷன் கமிட்டி தேர்ந்தெடுக்கிறது! இதில், 8 திறந்தபோட்டி, 7 இடங்கள் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. எஞ்சிய 5 இடங்களை நிலைமைக்கேற்ப, சமூக நீதிக் கண்ணோட்டப்படியும், மற்ற பல அவசியங்களை முன்னிட்டும் பல்கலைக்கழகம் பூர்த்தி செய்கிறது!

இந்த ஏற்பாடு பல ஆண்டுக் காலமாக இருந்து வரும் ஏற்பாடு. இதில், அண்மைக் காலத்தில் ஏற்பட்ட ஒரே ஒரு மாறுதல் என்னவென்றால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஏற்பட்ட ரிசர்வேஷன் விதியைக் கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும் என்ற வற்புறுத்தல்தான். இதற்கு முன் அது செய்யப்படாததால் பார்ப்பனர், முஸ்லிம், கிறிஸ்தவர் போன்ற சிறுபான்மையினருக்குப் பல வகையிலும் வசதியாக, தங்கள் இஷ்டம்போல், தம் இன மத மாணவர்களை அவர்கள் குறைந்த மார்க் வாங்கியவர்களானாலும்கூட சேர்த்து, பிற இன, மத மாணவர்களை – அதிகபட்ச மார்க் மாணவர்களை விட்டுவிட்டாலும் அவர்களைக் கேட்க நாதி இல்லாமல் இருந்தது! இப்போது மூக்கணாங்கயிறு போடப்படுகிறது என்றவுடன் எரிச்சல் தாங்க முடியவில்லை!

தனியார் கல்லூரிகள் அரசிடமிருந்து மானிய உதவி பெறவில்லையா? அப்படி இருக்கும் போது,- அரசு இவ்விதியை வலியுறுத்தும்போது மட்டும் ஏன் முணுக வேண்டும்? பல்கலைக்கழகம் ஏன் இதில் தலையிடவேண்டும்? எங்களுக்கு நாங்களே சுதந்திரமாகச் செய்து கொள்ளக்கூடாதா என்று சிலர் கேட்கக் கூடும். அவர்கள் கீழ்க்காணும் விஷயங்களை விளக்கமாகத் தெரிந்து கொண்டால் அவர்களுக்குள்ள சந்தேகம் அறவே நீங்கும்.

சென்னைப் பல்கலைக்கழகம்

மேல்பட்டப் படிப்புகளான எம்.ஏ., எம்.எஸ்சி என்பவை எல்லாக் கல்லூரிகளிலும் இருப்பதில்லை. வளர்ந்துள்ள, பெரிய, பழைய கல்லூரிகளில் மட்டுமே உண்டு. அந்தக் கல்லூரி முதல்வரும் அவரவர் இச்சைக்கேற்ப மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதிப்பது-அதைப் பல்கலைக்கழகத் தலைமை சரிபார்க்காமல் அனுமதிப்பது என்றால், அவரவர் கல்லூரிகளில் உள்ள மாணவர்களை மட்டும்தான்- வகுப்பு, ஜாதி, மத, உணர்ச்சி அடிப்படையில்தான் சேர்ப்பார்கள்!

உதாரணமாக, ஒரு பார்ப்பனக் கல்லூரியில் பார்ப்பனர், கிறிஸ்தவர் கல்லூரியில் கிறிஸ்தவர், முஸ்லிம் கல்லூரியில் முஸ்லிம்தான் சேருவர். மற்றக் கல்லூரிகளில் படித்து- B.A. B.Sc., படித்து, அங்கு அந்தப் படிப்பிற்குரிய மேல் படிப்பு (Post Graduate Courses) இல்லாத கல்லூரியைச் சார்ந்த மாணவர்கள் D, DPlus வாங்கியும் அனுமதிக்கப்படமாட்டார்களே! அவர்கள் கதி என்னாவது? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

பல்கலைக்கழகத் துணைவேந்தருக்குத் தனிப்பட்ட முறையில் அது லாபமாகும். சிபாரிசுத் தொல்லை, செல்வாக்குள்ளவர்களது விரோதம், மக்கள் பலரது நிஷ்டூரம் இவற்றிலிருந்து அவர், அதன் மூலம் தப்பித்துக் கொள்ள வழி ஏற்படும்! இப்போது, சில பிரின்ஸ்பால்கள் தங்கள் பழியை எப்படி யுனிவர்சிட்டி மீது போட்டுத் தப்பித்துக் கொள்கிறார்களோ அதனை அப்படியே திருப்பி அவர் செய்ய முடியும். ஆனால், சமுதாயத்திற்கல்லவா பெருங்கேடு ஏற்படும்? எல்லோருக்கும் சம வாய்ப்புத் தரும் திட்டம் அசல் பகற்கனவாக அல்லவா ஆகிவிடும்?

எனவே, பார்ப்பனர் எதிர்ப்புக்கு, அவர்கள் அனுபவித்து வந்த ஏகபோகம் குறைந்துவிட்டதே என்ற ஒரே எரிச்சலைத் தவிர வேறில்லை! (நம்மவர்களில்கூட, பலர் பார்ப்பனருக்குத்தானே இன்னமும் பரிவுகாட்டி பாம்புக்குப் பால் ஊற்றுவதுபோல, சிபாரிசு செய்கின்றனர்! அந்நிலையில் அது எப்படி அழியும்? பார்ப்பனர் எப்படிப் பதறுகிறார்கள் பார்த்தீர்களா? பல்கலைக்கழகம் சரியான பாதையில் செல்கிறது என்று தமிழர்கள் புரிந்துகொள்ள, அந்த எரிச்சல்தான் சரியான தெளிவான அளவுகோல். பார்ப்பனர் பாராட்டினால்தான் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் எங்கோ தவறு நடக்கிறது என்று கவலைப்பட வேண்டும். இப்போது அல்ல! பார்ப்பனர் எரிச்சல் எவ்வளவு வேகமாக-அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு தீவிரமாக சமூக நீதி வழங்கப்பட்டிருக்கிறது என்பது அதன் பொருளாகும்.

23-.7.-73 அன்று காலை 10 மணியளவில் திருச்சி மாவட்டம் பெரம்பலூருக்கு அடுத்த பாடாலூரில் பெரியார் குடில் ஆண்டு விழாவானது மிகச் சீரும் சிறப்புடனும் நடைபெற்றது. விழாவில், அய்யா அவர்களுடன் நானும் கலந்துகொண்டேன். விழாவில் முதலாவதாக, குடில் தாளாளர் ஆசிரியர் ஏ.எஸ். முத்துசாமி அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

விழாவிற்கு, குடில் நிருவாகக் குழுத் தலைவரும் திருச்சி மின்வாரியத் துணைப் பொறியாளருமான கே.எம். சுப்பிரமணியம் பி.இ. அவர்கள் தலைமை வகித்தார். அடுத்து, குடிலின் துணைத்தலைவர் சோமசுந்தரம், கரூர் பெ. வீரண்ணன், மாயவரம் நகர தி.க. செயலாளர் என்.வடிவேலு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.எஸ். ராஜூ எம்.ஏ. பி.டி. எம்.எல்.ஏ., திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி திருமதி ஏ. மீனாட்சி பி.ஏ., பி.டி., அரியலூர் மாவட்டக் கல்வி அதிகாரி ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டதாவது:- நான் உடல்நலக் குறைவுடனேயே வந்து உள்ளேன். நமது நண்பர் முத்துசாமி அவர்கள், குழந்தைகளுக்குச் சிறு பருவம் முதலே மனித சமுதாயத்திற்கான நெறிகளை உணர்த்தவேண்டும் என்றே இப்படிக் குடிலைத் தொடக்கியுள்ளார்.

எந்த மனிதனாவது, மனித சமுதாயத்திற்குத் தொண்டு செய்ய நினைப்பவன் வயிற்றுப் பிழைப்புக்கோ, சுயநலத்துக்கோ என்று இல்லாமல் உண்மையான எண்ணம்-ஆர்வம் இருக்குமானால் அவனுக்குக் கடவுள் பற்றோ, மதப் பற்றோ, சாஸ்திரப் பற்றோ, நாட்டுப் பற்றோ மொழிப் பற்றோ, எந்தப் பற்றும் இருக்கக்கூடாது; மனித சமுதாய வளர்ச்சிப் பற்றுதான் இருக்கவேண்டும். மற்றப் பற்றுகள் எல்லாம் காட்டுமிராண்டி காலத்தில் ஏற்பட்ட அமைப்புகளினை அடிப்படையாகக் கொண்டவை. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஏற்பட்டவை ஆகும். அந்தக் காலம், உலகம் என்றால் என்ன என்று தெரிய முடியாது இருந்த காலம்; ஒவ்வொரு பகுதியில் உள்ள மக்களும் மற்றப் பகுதி மக்களுடன் தொடர்பற்று இருந்த காலம் ஆகும்.

தோழர்களே, உலக உற்பத்திபற்றி ஒவ்வொரு மதக்காரரும் ஒவ்வொரு விதமாகக் கூறியுள்ளார்கள். அதனை, இன்று படித்துப் பார்த்தால் முட்டாள்தனமாகத்தானே தோன்றுகின்றன. பொது அறிவோ, தெளிவான அறிவோ, சிந்திக்கும் உணர்ச்சியோ ஏற்படாத காரணத்தினால்தான், மனித சமுதாயம் நம் நாட்டில் இன்றளவும் காட்டுமிராண்டிகளாக உள்ளது. மனித சமுதாயத்திற்குத் தேவையற்ற அனேக உணர்ச்சிகள் நம் மக்களிடையே குடிகொண்டு உள்ளன. அவை எல்லாம் மாற்றப்பட வேண்டும். மனிதனுக்கு எந்த விதத்திலும் பழைமையைப்பற்றிய பற்றுகள் இருக்கக்கூடாது. இதனால், எதனையும் தள்ள வேண்டும் என்பது அல்ல; அறிவுக்குத் தேவையானது போக மற்றவற்றை விட்டு ஒழிக்க வேண்டும். இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதனுடைய வயதுச் சராசரி 5 வயதேதான். கிறிஸ்து பிறந்த வருஷத்தில், அதாவது கி.பி. 1ஆம் ஆண்டில் உலக ஜனத்தொகையே 20 கோடிதான். கி.பி. 1800-இல் மக்களின் சராசரி வயது 10கூட இல்லை. 1952 இல் நமது நாட்டு ஜனகணிதப்படி நம் மக்களுக்குச் சராசரி வயது 27 தானே. 1972-ஆம் ஆண்டுக் கணக்குப்படி சராசரி வயது 52 ஆக உயர்ந்துவிட்டதே. தோழர்களே, நமக்குத்தான் சராசரி வயது 52. மேல்நாட்டுக்காரனுக்குச் சராசரி வயது 72, 75ஆக அல்லவா உள்ளது. எனவே, இனி எளிதில் மனிதன் சாகவே மாட்டான். மனித சமுதாயக் காட்டுமிராண்டி அமைப்பு மாற மாற மனித சமுதாயம் மேம்பாடு அடைந்து கொண்டுவரும். மனித சமுதாய வளர்ச்சிக்கு இன்றைய அமைப்புகள் மாற வேண்டும். இன்றைக்கு நாம் மனிதப்பிராயத்தில் இல்லை; மிருகப்பிராயத்தில் உள்ளோம். உலகில் வளர்ந்தோங்கி வரும் விஞ்ஞான அதிசய அற்புதங்களைக் காணும் போது நாம் காட்டுமிராண்டிகளாகவே இருக்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும். தோழர்களே, நமது பிரச்சாரம் காரணமாக 1920இல் இருந்த ஜாதி உணர்ச்சி இன்று இல்லையே. 1920இல் ஊர்தோறும் ஜாதி ஆச்சாரங்களைப் பாதுகாக்க, சனாதன சங்கங்கள்தானே இருந்து வந்தன. இன்று அவை எல்லாம் மங்கி மறைந்து வந்துள்ளன என்றாலும், நமக்கு இடையறாத பிரச்சாரமே காரணம் ஆகும் என்று எடுத்துரைத்தார்கள்.

பிறகு, சிறப்புரையாற்றுகையில் நான் குறிப்பிட்டதாவது:- எவ்வளவு பகுத்தறிவுவாதிகள் வீட்டுப்பிள்ளைகள் ஆனாலும். அவர்கள் கல்வி பெற பள்ளிகளுக்கு அனுப்பப்படும் போது அவர்களுக்கு வேண்டப்படாத கடவுளும், மதமும், மூடநம்பிக்கையும் திணிக்கப்படும்படியான சுற்றுச்சார்புதான் நமது நாட்டில் இருந்து வருகின்றது. நமது நாட்டில் இன்று படித்தவர்கள்தான் அதிகரித்து வருகின்றார்களே ஒழிய, பகுத்தறிவாளர்கள் வளரவில்லை. ஒரு முறை அண்ணா அவர்கள் கூறினார்கள்; பகுத்தறிவு வேறு படிப்பறிவு வேறு; இரண்டுக்கும் இடையே பெரிய பள்ளம் உள்ளது என்று குறிப்பிட்டார்.

குழந்தைக்கு ஒரு கவளம் சோறு ஊட்ட, தாயார் அஞ்சுக்கண்ணன் வருகின்றான். பூச்சாண்டி என்று குழந்தையைப் பயப்படுத்த மூடநம்பிக்கையைப் புகுத்துகின்றார்கள். இதுதான் நாளாவட்டத்தில் வளருகின்றது. உழைப்புக்கு மரியாதை கொடுத்து மனித சமுதாயம் வளர வேண்டுமானால் பகுத்தறிவுப் பாதையில் நடந்தால்தான் முடியும்.

இந்தப் பெரியார் குடில் என்பது, நமது மாணவர் சமுதாயத்தை மூடநம்பிக்கையற்றவர்களாக,- பகுத்தறிவு நெறியில் நடப்பவர்களாகச் செய்யப் பெரிதும் பாடுபடும் என்ற நம்பிக்கை உண்டு என்று எடுத்துரைத்தேன். விழாவில் அரசு ஊழியர்கள் உள்பட ஏராளமான கழக நிருவாகிகள், தோழியர்கள், தோழர்கள், மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள்.

நினைவுகள் நீளும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *