டி.கே.சி
1942-ஆம் ஆண்டு டி.கே.சி.யிடம் செயலராகப் பணிபுரிந்த எஸ்.வேங்கட சுப்பிரமணியம் (எஸ்.வி.எஸ்.) குற்றாலத்தில் டி.கே.சி.யின் இல்லத்தில் தங்கி இருந்தார். ஒருநாள் நண்பகலில் பெரியார் ராமசாமி மாட்டு வண்டியில் டி.கே.சி.யின் இல்லத்தைக் கடந்து சென்றதை எஸ்.வி.எஸ். கண்ணுற்றார். இதனை டி.கே.சி.யிடம் தெரிவித்தார்.
உடனே டி.கே.சி. எஸ்.வி.எஸ்ஸிடம் பெரியார் எவ்விடத்தில் தங்குகிறார் என்பதனை அறிந்து வருமாறு பணித்தார். எஸ்.வி.எஸ். அதனை ஏற்று அருகில் உள்ள பங்களாவில் பெரியார் தங்கியிருக்கிற செய்தியினை டி.கே.சி.யிடம் தெரிவித்தார்.
மீண்டும் டி.கே.சி. எஸ்.வி.எஸ்ஸை நோக்கி, பெரியாரிடம் சென்று மதிய உணவு உண்டுவிட்டாரா? இல்லையெனில் தமது இல்லத்தில் இருந்து அனுப்பி வைக்கலாமா? என்பதை அறிந்துவருமாறு கூறினார்.
பெரியார் கடந்து சென்றதை ஏன்தான் டி.கே.சி.யிடம் சொன்னோமோ என்று எஸ்.வி.எஸ். தமக்குள்ளேயே முணு முணுத்தார். பெரியார் பிராமண குலத்துக்குப் பரமவைரி; காங்கிரஸ் கொள்கைகளை அறவே பிடிக்காதவர். கம்ப ராமாயணத்தையே தீயிட்டுக் கொளுத்தியவர். இச்செயல்களால் அவருக்குப் பெரியாரைச் சிறிதும் பிடிக்காது. தமக்குப் பிடிக்காத கொள்கைகளைக் கொண்ட பெரியார் மீது கம்ப ராமாயணத்தை உயிர் மூச்சாகக் கொண்ட டி.கே.சி. எல்லையற்ற பாசத்தைக் கொட்டுகிறாரே! நல் உபசரிப்பையும் நல்குகிறாரே என நினைத்துப் பெரிதும் வேதனையுற்றார்.
இதனைக் குறிப்பால் உணர்ந்த டி.கே.சி. பெரியாரின் கொள்கைகளைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அவர் ஒரு லட்சியவாதி. சீர்திருத்தச் செம்மல். தள்ளாத வயதிலும் நாடெங்கிலும் அயராது தம் கொள்கைகளைப் பரப்பி வருகிறார். இத்தகு பெரியாரை நாம் உபசரிப்பதில் என்ன தவறு? என்று கூறி உணவு வழங்க ஏற்பாடு செய்தார்.
வேறு வழியின்றி வேண்டா வெறுப்புடன் எஸ்.வி.எஸ். பெரியாரிடம் சென்று டி.கே.சி. கூறிய விபரத்தைச் சொன்னார். பெரியாரும் மதியம் வீட்டிலிருந்து உணவு அனுப்புங்கள் என்றார். அதற்கிணங்க டி.கே.சி. வீட்டிலிருந்து அறுசுவை உணவு பெரியாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பசியுடன் இருந்த பெரியாரும் உணவைச் சுவைத்து உண்டு மகிழ்ந்தார்.
அதே ஆண்டு மற்றொரு சமயம் பெரியார் ராமசாமி குற்றாலத்தின்கண் அமைந்த டி.கே.சி.யின் இல்லத்திற்கு வருகை தந்தார். டி.கே.சி. தமது மணிவிழாவினைக் கொண்டாட அவ்வமயம் திருவிலஞ்சிக் குமரன் கோவிலுக்குச் சென்றுள்ளதை அறிந்தார். உடனே தமது வண்டியை நேராகத் திருவிலஞ்சிக் குமரன் கோவிலுக்கு ஓட்டிச் செல்லுமாறு பணித்தார். உடன் இருந்த பெரியாரின் நாத்திகத் தொண்டர்கள் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாயினர். அவர்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தும்கூட பெரியார் அதனைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. நேராகத் திருவிலஞ்சிக் குமரன் ஆலயத்திற்குள்ளேயே சென்றார்.
பெரியார் பெரிய நாத்திகவாதி. கடவுள் நம்பிக்கை அறவே இல்லாதவர். இருப்பினும் டி.கே.சி. மீது கொண்ட அளப்பரிய அன்பினாலும், மட்டற்ற மதிப்பினாலும் ஆலயத்திற்குள்ளேயே சென்று அவரைக் கட்டித் தழுவி வாழ்த்துக் கூறி அக மகிழ்ந்தார்.
உடனிருந்த நாத்திகத் தொண்டர்கள் பெரியாரிடம் தணிந்த குரலில், அய்யா, தாங்கள் முருகன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கலாமா? என வினவினர். உடனே பெரியாரும், அறுபதாம் கல்யாணம் முருகனுக்கு இல்லையப்பா! நம்ம முதலியார்வாளுக்குத்தானே! அதுல நான் கலந்துக்கறதல என்னப்பா தவறு? என மறுத்துரைத்தார்.
பின்பு பெரியார் டி.கே.சி.யோடும், நண்பர் களோடும் பந்தியில் அமர்ந்து சித்திரான்னங்களை விரும்பி ருசித்து உண்டுவிட்டுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
பெரியார் தெய்வ மறுப்புக் கொள்கை உடையவராயினும், டி.கே.சி.யின் நட்புக்கு அதிக மதிப்புக் கொடுத்தார் என்பதை உணர்ந்து, உடன்வந்தோர் அனைவரும் ஆறுதல் அடைந்தனர்.