காசிக்குப் பயணம்
– மதுமதி
காசிக்குச் செல்வது
என்பது உறுதியானது;
அம்முடிவே இறுதியானது;
பாவங்களைப் போக்கும்
புண்ணிய நகரம் -மன
அழுக்குகளைக் கழுவும்
புண்ணிய நதி
அப்பூமியில் செத்தால்
நேரடிச் சொர்க்கம்
வாழப் பிடிக்காதவன்
வாழும் வீடு
சிவபெருமான் வீற்றிருக்கும் காடு
தர்மங்கள் கொட்டியிருக்கும் மேடு
காசியின் பெருமைகளைப்
பலர் சொல்லக் கேட்டதுண்டு
அனைத்தும் உண்மைக்கு
மாறானது என
அனுபவம் அவருக்குப் பிற்பாடு உணர்த்தியது;
மனதை உலுக்கியது;
இராமசாமிக்குத் துணையாக
காசிக்குக் கிளம்பியவர்கள்
இன்னும் இருவர்;
அதில் ஒருவர் -தம்
தங்கையின் கணவர்;
மூவரும் சென்னை
வந்து சேர்ந்தனர்;
அதற்கே சோர்ந்தனர்;
கண்ணில் விழுகிறவர்களெல்லாம்
ஈரோட்டுக்காரர்களாக இருக்குமோ….
அச்சம் எச்சரித்தது;
காசி எனும் சொல்லையே
உதடுகள் உச்சரித்தது;
காணாமல்போன தம்மைத் தேட அனுப்பிய
ஆட்களைப் போலவே
வருவோர் போவோர் எல்லாம்
கண்ணிற்குத் தெரிந்தனர்;
ஈரோட்டுக்காரர்களின் கண்ணில்படாமலேயே
சென்னையில் திரிந்தனர்; ஒருவித பயத்தோடு
நேரம் கழிந்தது;
இராமசாமிக்கிருந்த பயம் ஒழிந்தது;
காசியையும்
ஈரோட்டையும்
சுற்றிச் சுற்றி
நினைவு வந்தது;
கடந்த காலத்தை
நினைத்து மனம் நொந்தது;
காசிக்குப் பயணம்
சரியானதல்ல என்ற
முடிவுக்கு வந்தனர் இராமசாமியுடன் வந்த இருவர்
சூழ்நிலை அவர்களை யோசிக்க வைத்தது
இராமசாமி அவர்களை
மாற்றி யோசிக்க வைத்தார்
அவரவரது சிந்தனை
அவரவருக்குச் சரியாகப்பட்டது
இருவரின் மனமாற்றம்
இராமசாமியின் மனதைச் சுட்டது;
மூவரும்
காசிக்குச் செல்வோம்.
மூவரும்
ஈரோட்டுக்குச் செல்வோம்.
வாதங்கள் இரண்டும்
சண்டையிட்டன;
முடிவில் அவர்கள் பின்வாங்கவில்லை
இராமசாமியும் தன்
முடிவில் பின்வாங்கவில்லை
இருவரும் ஈரோட்டுக்குத் திரும்பினர்..
இராமசாமி
காசிக்குக் கிளம்பினார்..
– சூரியன் உதிக்கும்..
ஓவியம் : மணிவர்மா